ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

யாகங்களுக்காக பசுவைக் கொல்வது பாபமில்லை ... பிரம்ம சூத்திரம் 3 ஆவது அத்யாயம்- சாதனா அத்யாயம்- முதல் பாதம்-

Dhinakaran Chelliah‎ : யாகத்திற்காக பசுவதை பாபமில்லை பிரம்ம சூத்திரம் வேத வியாஸர் எழுதியவற்றில் மிக முக்கியமான நூல் பிரம்ம ஸூத்ரம்

என்பதாகும். வியாஸர் ஒரு வர் அல்ல, யுகங்கள் தோறும் வியாஸர் பலர் உண்டு, அவர் விஷ்ணுவின் அவதாரம் எனக் கூறும் வைதீக நூல்கள் உண்டு.வேதங்களின் சாரமாகக் கருதப்படும் வியாஸரின் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர்களுள் முக்கியமானவர்கள் ஶ்ரீமத்வர், ஶ்ரீராமாநுஜர் மற்றும் ஶ்ரீ சங்கரர் ஆவர். இவற்றில் பிரபல்யமாய் இருக்கும்,
ஶ்ரீ சங்கரர் (ஆதி சங்கரர்) எழுதிய பாஷ்யத்தில் (உரையில்), 555 சூத்திரங்களும், ஶ்ரீ ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தில் 545 சூத்திரங்களும் உள்ளன.

யாகங்களுக்காக பசுவைக் கொல்வது பாபமில்லை என்பதாக, பிரம்ம சூத்திரம் 3 ஆவது அத்யாயம்- சாதனா அத்யாயம்- முதல் பாதம்- வைராக்ய பாதம் - ஆறாவது அதிகரணம் - 25 ஆவது சூத்திரம் சொல்கிறது. பிரம்ம சூத்திர நூலின் அடிப்படையிலேயே காஞ்சி மஹா பெரியவா அவர்கள் தனது “தெய்வத்தின் குரல் நூலிலும்” யாகங்களுக்காக பசுவதை பாபமில்லை எனப் பதிவு செய்திருக்கிறார்.

மேலுள்ள சூத்திரத்தையும் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்த அதன் விளக்கங்களையும் தந்துள்ளேன்.வரிகள் வாக்கியங்கள் வெவ்வேறாக இருந்தாலும், வாசிப்பதில் சிரமம் இருந்தாலும், அர்த்தம் என்னவோ ஒன்றுதான்.

|| 3-1-25-அசுத்தம் இதி சேத ந சப்தாத் ||

யாகம் செய்பவர்களே ஸ்வர்க்கம் செல்கின்றனர்.யாகம் செய்வதும் அதில் பிராணி வதம் செய்வதும் பாபமில்லை. அவசியம் செய்ய வேண்டிய கர்மா என வேதம் கூறுகிறது. (ப்ரம்ம ஸூத்ர வ்ருத்தி- தமிழாக்கம் ஶ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திரர்)

பசு ஹிம்ஸாதிகளின் ஸம்பந்தமிருப்பது பற்றி வைதீகமான யாகாதிகள் அசுத்தமாகின்றன என்றாலோ அது பொருந்தாது. வைதிக சாஸ்திரமூலம் அது ஏற்படுவதாயிருப்பதே அதன் காரணமாகும் (ப்ரம்ஹஸூத்ர சாங்கர பாஷ்யம்- தமிழாக்கம் ப்ரம்ஹஶ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள்)

“சவர்ண சரீரமாய் அது மேலே சுவர்கத்துக்குப் போகின்றது”, “ வாஸ்தவமாய் நீ சாவாயல்ல, அழிவாயல்லை” என்னுஞ் சுருதியினாற் பசு ஹிம்சையானது அஹிம்சையாம்.(ஶ்ரீ நீலகண்டசிவாசாரியார் எழுதிய பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்- தமிழாக்கம்
காசிவாசி செந்தில்நாதையர்)

அக்னி ஹோமம் போன்ற பசு ஆடு வதையுடன் கூடிய யாகங்களால் -பெற்ற பாவங்களால் தான்ய உடல் கொள்வான் என்பர் பூர்வ பஷி

சாஸ்திர விதி என்பதால் பாபம் வாராது என்றாலும் ஏதாவது பலனை குறித்து செய்யும் யாகத்தில் பசு வதை பாபம் ஆகுமே என்றால்;

ஆக ஆசை விருப்பத்தின் அடியாகவே யாகம் செய்வதால் பாபம் கிட்டி தான்ய உடலை பெறுகிறான் என்பர் பூர்வ பஷி;

சித்தாந்தம் -பசு வதை இல்லை -ஸ்வர்க்கம் செல்லவே -என்பர் -ஹிரண்ய சரீர ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமேதி -என்று சொல்லுவரே
( ஶ்ரீ ராமாநுஜரின் பிரம்ம சூத்ரத்திற்கான ஶ்ரீ பாஷ்யம்)

If it be said that (sacrificial work is) unholy, (we say) not so, on account of scriptural authority. (Brahma Sutras- Swami Sivanandha)

பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் எழுதிய ஶ்ரீ நீலகண்டசிவாசாரியார் அவர்கள் காலத்தால் ஆதி சங்கரருக்கு மூத்தவர் என்பதாக காசிவாசி செந்தில்நாதையர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

பிரம்ம சூத்திரத்தில் உள்ள சூத்திரங்கள் பற்றிய செய்திகள் அடுத்த பதிவில் வரும்!

கருத்துகள் இல்லை: