திங்கள், 7 செப்டம்பர், 2020

அடவி நயினார் கோவில் அணை...! தமிழகத்தின் 40 ஆண்டுகளை தொலைத்த பிரபாகரனுக்கும் அவரின் பெரியாரிஸ்டுகளுக்கும்..

கருப்பன் மகன்
: அகதிகளை உrருவாக்கிய பிரபாகரன் தம்பிகளுக்கும். தனி ஈழத்தை நட்டமா நட்டபோய் 40 ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றை ழித்தொழித்த பெரியாரிஸ்ட் களுக்கும் இந்த பதிவு... அன்பார்ந்த கலைஞர் எதிர்ப்பாளர்களே... கட்டாத பாலம், வெட்டாத குளம், போடாத ரோட்டுக்கெல்லாம் பில் போட்டு ஊழல் செய்யும் அரசுன்னு எம் ஜி ஆரின் அதிமுக ஆட்சியை தனது பாலைவன ரோஜாக்கள் படத்தில் போட்டுத் தாக்கியிருப்பார் கலைஞர்..!ஆனால், அதே கலைஞர் தனது ஆட்சியில், இல்லாத... அதாவது தமிழகத்திலேயே எங்கும் ஓடாத ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய அணை கட்டிய கதை தெரியுமா உங்களுக்கு..!

தமிழகத்தையும் கேரளத்தையும் கோடு போட்டு பிரிக்கும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி... பழைய திருநெல்வேலி ஜில்லா, இன்றைய தென்காசி மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும்...   தமிழக கேரள பார்டர் மலையில் அடிவாரத்தில் இருக்கும் ஒரு ஊர் தான் மேக்கரை. அந்த மேக்கரைக்கு இந்தப்பக்கம் வடகரை, கடையநல்லூர் போன்ற ஊர்களும், அந்தப்பக்கமாக அச்சன்புதூர், செங்கோட்டை, திருக்குற்றாலம் போன்ற ஊர்களும் உண்டு..!     மலையின் உச்சிக்கு போகும் வரை தமிழ்நாடு.... உச்சியிலிருந்து கீழே விழுந்தால் கேரளா. கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் வளம் கொழிக்க வைக்கும் தென்மேற்கு பருவமழை அந்த மலையிலும் தாராளமாக பொழியும்.

அந்த மழையெல்லாம் ஒன்னு சேர்ந்து தமிழ்நாட்டு பக்கம் இறங்கும் இடம் தான் மேக்கரை என்ற அழகிய தமிழ் கிராமம்..! அப்படி, ஒன்னு சேர்ந்து மலையிலிருந்து விழும் தண்ணீர் பாதையை, யாரோ ஒரு முனிவர் அந்தக்காலத்தில் அனுமந்தா நதின்னு பேர் வச்சிருக்கலாம் போலிருக்கு. ஆனால் அதற்கு ஒரு வழி பாதையெல்லாம் கிடையாது... பல வழிகளில் மலை உச்சியிலிருந்து கீழே இறங்கும் தண்ணீர்... ஒரு இடத்தில் குத்தவச்சி... அப்பறமா தமிழ்நாட்டுக்குள்ளாற அதகளம் பண்ணும்..!

அந்த ஒத்த இடம் தான் மேக்கரை. தென்மேற்கு பருவமழை பெய்யுற அந்த இரண்டு அல்லது மூன்று மாதங்கள் அங்கே எக்கச்சக்கச்சக்க தண்ணீர் வந்து சேர்ந்து... அங்கிருந்து எந்த தமிழ் மன்னனோ வெட்டி வைத்த இரண்டு கால்வாய்கள் வழியாக 25 கிலோ மீட்டர் வரை தமிழகத்தில் ஊடுறுவும். அந்த இரண்டு கால்வாய்களுக்கு இடைப்பட்ட பகுதிகளிலும் குட்டி ஏரி கணக்காக நாற்பதிலிருந்து ஐம்பது பெரிய்ய குளங்களையும் அங்கிருந்த குறுநில மன்னர்கள் வெட்டி வைத்து அதில் எல்லாம் அந்த தண்ணீர் நிறம்பும்.

ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த சேமிப்பை விட பல மடங்கு எக்ஸ்ட்ராவாக வரும் அந்த மழை தண்ணீர் சுத்துப்பட்டு பகுதிகளில் இருக்கும் வயல்களிலும்... பல சமயங்களில் ஊருக்குள்ளும் புகுந்து விளையாடி மக்களை அதிர வைக்கும். பயிர்களை மட்டுமல்லாது, மனிதர்களையும், ஆடு மாடு கோழிகளையும் கூட வருடா வருடம் பலி வாங்கும். இந்த மழைத்தண்ணி எல்லாம் நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கான்னே தெரியாம மக்களை புலம்ப வைக்கும்..!

இந்த தண்ணியை தேக்கி பயனுள்ளதா அந்த பகுதிக்கு மாத்தனும்ங்கறது அங்குள்ள மக்கள் மனசுல நீண்ட காலமாக இருந்த ஒரு ஏக்கம்.

ஆனால் குமுளிக்கு அந்தாண்ட ஒரு பென்னு குவிக் கிடைச்ச மாதிரி... மேக்கரைக்கு அந்தாண்ட ஒரு கின்னி குவிக் இந்த மக்களுக்கு கிடைக்காம போனது தான் துரதிருஷ்டம்..!

ஆங்கிலேயர்கள் போய்... ஆரியர்கள்... மன்னிக்கவும் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகும் இதற்கு விடிவு காலம் வரவில்லை. ஒரு வழியாக 1967இல் முதன் முதலாக திமுக ஆட்சி ஏற்பட்ட பொழுது... பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சராக பொறுப்பினை ஏற்கின்றார்.

எந்த துறையில் நுழைந்தாலும், அதில் அடி ஆழம் வரை சென்று களமாடும் கலைஞர்... தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஆறுகளையும், நீர் ஆதாரங்களையும் ஒரே ஆண்டில் புள்ளி விவரங்களோடு பட்டியில் இடுகிறார். அங்கெல்லாம் சென்று பார்க்கிறார்... விவசாயிகளிடமும் மக்களிடமும், அறிஞர்களிடமும், துறை சார்ந்த விஞ்ஞானிகளிடமும் பேசுகிறார்... ஆலோசிக்கிறார்.

அந்த நேரத்தில் தான் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆறுகளையும் அழகாக பட்டியலிட்டு அற்புதமான பெரும் கவிதை ஒன்றை எழுதுகின்றார். அந்தக் கவிதையை அண்ணன் துரைமுருகன் அவர்கள் பல மேடைகளில் தொடர்ந்து ஐந்து நிமிடம் எடுத்து ஒப்பிவித்து பெரும் கைத்தட்டல்களை பெருவார்.

அது போகட்டும்... இந்த நேரத்தில் தான் கலைஞருக்கு மேக்கரை தண்ணீர் வரத்தும், அது விரையமாதலும் பற்றிய விவரம் கிடைக்கிறது. அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து... அறிஞர்களிடம் ஆலோசித்து அங்கு அணை கட்டலாம் என்ற முடிவுக்கு வருகின்றார்.

இந்த நிலையில் தான் பேரறிஞர் அண்ணா மறைவும், கலைஞர் முதல்வராவதும் நிகழ... அடுத்த ஏழு ஆண்டுகளும் தமிழகம் முழுக்க பல்வேறு நலத்திட்டங்களையும் உட்கட்டமைப்பையும் மேம்படுத்த... அதற்கே நிதி ஆதரம் போதாத காரணத்தால் இந்த அணை கட்டுவதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகின்றார்.

நடுவில் எம் ஜி ஆர் பிரிந்து... எமர்ஜென்ஸி வந்து... சர்க்காரியா கமிஷன் வந்து.... ஆட்சி போய்... எம் ஜி ஆர் ஆட்சி பத்தாண்டு காலம் நடந்து... அவரும் மறைந்து... மீண்டும் 1989இல் கலைஞர் ஆட்சிக்கு வந்து....

அப்பொழுது கலைஞர் அமைச்சரவையில் அண்ணன் துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக அமர்த்தப்படுகிறார். அமர்த்தியவுடன் அவரை அழைத்து மேக்கரை தண்ணீர் பிரச்சினையை கூறி... அந்த கோப்புகளையும் கொடுத்து அங்கே அணை கட்டும் பொறுப்பினையும் வழங்குகின்றார்.

அண்ணன் திருநெல்வேலியில் டேரா போட்டு, மேக்கரை விவசாயிகளிடம் பேசிப் பேசி... தேவையான நிலங்களை பெற்று... வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி... அதை அவ்வப்பொழுது கலைஞருடனும் ஆலோசனை செய்து அவர் அறிவுரையையும் பெற்று ப்ராஜெக்ட் ரெடி செய்து அமைச்சரவையில் வைத்து ஒப்புதலும் பெற்று டெண்டரும் ரெடியாகிவிட்ட நிலையில்....

மேதகு பிரபாகரனுக்கு கலைஞர் தான் உதவுகின்றார் என்று கூறி அவர் அரசு 91ஆம் ஆண்டிலேயே... அதாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டு...

மக்கள் அவருக்கே மீண்டும் வாக்களித்து அரசமைக்க தயாராக இருந்த வேளையில்... தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பாக மேதகு பிரபாகரன் ஆளனுப்பி தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை கொல்ல....

ஆல் இந்தியா ரேடியோவில் கலைஞர் தான் பிரபாகரண்ட்ட சொல்லி ராஜீவை கொன்றார் என்று வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸார் அழுது புலம்ப... அதை நம்பிய மக்கள் முதன் முதலில் ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்துகின்றனர்.

அதன் பிறகு வழக்கம் போல, மேக்கரை அணை பிரச்சினை அப்படியே கிடப்பில் போடப்பட....

மீண்டும் 1996இல்... அதாவது ஐந்து ஆண்டுகள் கழித்து கலைஞர் ஆட்சிக்கு வருகின்றார். மீண்டும் அண்ணன் துரைமுருகனே பொதுப்பணித்துறை அமைச்சர்.

மீண்டும் மேக்கரை அணை திட்டம் கையில் எடுக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டபடியால், திட்டச் செலவு சற்று கூடுதலாகிறது. அப்பொழுது கலைஞர் மத்திய ஆட்சியிலும் தொடர்ந்து பங்கேற்கும் நிலையில் இருந்ததால்.... நிதி ஆதாரங்களை சற்று இலகுவாகப் பெற்று...

அந்த அணை மிக அற்புதமாகவும், பிரம்மாண்டமாகவும் கட்டி முடிக்கப்படுகின்றது..! தலைவர் கலைஞர் எப்பொழுதுமே உலக தரத்திலான கட்டமைப்புக்களை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அந்த வகையில் தான் ஆசியாவிலேயே மிகச் சிறப்பு மிக்கதான சென்னை அண்ணா மேம்பாலம், நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், சென்னை கத்திப்பாரா வண்ணத்துப்பூச்சி மேம்பாலம், குமரி வள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம், சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்... இப்படி நிறைய்ய ஆசியாவிலேயே முதல் முறையாக, அல்லது சிறப்பானதாக சாதித்திருக்கின்றார்.

அந்த வகையில் இந்த மேக்கரை அணையும் ஆசியாவிலேயே இரண்டாவது வித்தியாசமான அணையாக கட்டியுள்ளார். அந்த மலை ஓரிடத்தில் கிட்டத்தட்ட 90 டிகிரி திரும்பும். அதை பயன்படுத்தி நீர் தேக்கத்தை முக்கோண கூம்பு வடிவில் கட்டமைத்து மலையில் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஒரு நீண்ட சீனப்பெருஞ்சுவர் போன்ற கிட்டத்தட்ட 2000 அடிக்கும் சற்று கூடுதலான அணையை கட்டினார். அதில் நடுவில் மட்டும் 300 அடிக்கு இரண்டு பக்க மதில்களுக்கு சற்று உயரம் கம்மியாக மதில் சுவற்றை கட்டினார்.

அணையின் உயரமான 132 அடியை ஜுன், ஜூலை, ஆகஸ்ட்டில் நீர் எட்டும் பொழுது அந்த 300 அடி மதில் சுவற்றில் இருந்தும் நயாகரா அருவி போன்று மிக அற்புதமாக நீர் வழிந்தோடி கீழே வரும்..! அது காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அப்படியே அது கால்வாய்கள் வழியாக செல்லத்துவங்கும்..!

இரண்டு பக்க பெரும் மதில்களிலும் இரண்டு ஷட்டர்கள் மட்டுமே. அதை திறந்தால் மேக்கரைக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக இரண்டு கால்வாய்கள் மூலமாக கிட்டத்தட்ட 500 கிராமங்களில் இருக்கும் 7500 ஏக்கர் நிலங்களுக்கு நேரடியாகவும், 700 ஏக்கர் நிலங்களுக்கு மறைமுகமாகவும் இரண்டு போகம் முழுமையாக பயிர் செய்ய தண்ணீர் கிடைக்கும்..! இப்பொழுது கிடைத்து வருகின்றது..!

ஒரு வீடு கட்டவே குறைந்த பட்சம் ஓராண்டு தேவை என்கிற பொழுது... இவ்வளவு பெரிய்ய அணையை கட்ட ஐந்து ஆண்டுகள் போதுமா..?! அணை கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில்... அணைக்கு வெளியே பூங்கா போன்றவை மட்டுமே கட்ட வேண்டிய நிலையில்....

2001இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி..!

அப்பறம் என்ன...?! வழக்கம் போல மெட்ரோ ரயில் போல, வள்ளுவர் கோட்டம் போல, கோயம்பேடு பேருந்து நிலையம் போல, முட்டம், நீலத்தநல்லூர் பாலங்கள் போல.... இந்த அணையையும் ஓராண்டு கழித்து...

2003இல் ஜெயலலிதா, அணைக்கு கூட வராமல் 100 கிலோமீட்டர் தள்ளி திருநெல்வேலியில் நின்று கொண்டு காணொளி மூலம் திறந்து வைத்து அகமகிழ்ந்தார்..!

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக்விக்கின் நினைவிடத்தை யாரோ சேதப்படுத்தி விட்டதாக... அதைக் கண்டித்து இன்றைக்கு திமுக தலைவர் தளபதி அவர்கள் ஒரு அறிக்கை கொடுத்திருந்தார்.

அவரிடம் இந்த நேரத்தில் நான் வைக்கும் கோரிக்கை... மீண்டும் கழக ஆட்சி அமையும் பொழுது....

ஹாங்... நான் சொல்லவே மறந்து விட்டேன்... இந்து மத எதிரி என்று சித்தரிக்கப்பட்டிருக்கும் தலைவர் கலைஞர் அந்த அணைக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா...?!

அடவி நயினார் கோவில் அணை...!

அந்த அடவி நயினார் கோவில் அணையில் அதை கட்டிய கலைஞருக்கு ஒரு நினைவிடமும்...
அந்த அணையின் சுவற்றின் உயரத்திற்கு அவர் உருவச்சிலையும் அமைத்து... திமுக செய்த சாதனைகளை மக்களுக்கு உரக்கச் சொல்ல வேண்டும்...!

இப்படிக்கு....
கொக்கரக்கோ சௌமியன் 01-09-2020

Sugumaran Ramasamy

கருத்துகள் இல்லை: