புதன், 9 செப்டம்பர், 2020

தனித்துவிடப்படுகிறதா அதிமுக?

 டிஜிட்டல் திண்ணை:  தனித்துவிடப்படுகிறதா அதிமுக?

minnambalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.  “தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் இங்கே முக்கியமான முதன்மையான போட்டி நடைபெறும், மூன்றாவது அணி என்பதெல்லாம் அரசியல் சலசலப்புகளை ஏற்படுத்துமே தவிர தேர்தலுக்குப் பிறகான ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை.

இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலை திமுக ஏற்கனவே அமைத்துள்ள கூட்டணியோடு சந்திக்கிறது என்பதே இப்போதைய நிலைமை. திமுக கூட்டணியில் பிரச்சினை என்று வருமானால் அது தொகுதிகள் ஒதுக்கீடு அடிப்படையில் காங்கிரஸோடு ஏற்படும் முரண்பாடாகத்தான் இருக்கும். காங்கிரஸைக் கழற்றிவிடுமாறு திமுகவுக்கு பாஜகவின் அழுத்தங்கள் அதிகமாக இருந்தபோதும்... திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இப்போதுவரையில் பிரச்சினை இல்லை. பிரச்சினை என்று வந்தால்கூட அடுத்து வரக் கூடிய தேர்தலில் தங்களது வெற்றியை அது பாதிக்கக் கூடும் என்ற வகையில் திமுகவும் சரி, அந்தக் கூட்டணிக் கட்சிகளும் சரி எச்சரிக்கையோடே காய் நகர்த்துகின்றன.

அதிமுக கூட்டணியிலும் இதே எச்சரிக்கை உணர்வு இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளின் ஊடகப் பேட்டிகள் அந்தக் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வியை உண்டாக்கியிருக்கின்றன. சமீப நாட்களாக பாஜகவின் தமிழகத் தலைவர் எல்.முருகனின் பேச்சுகளும் பேட்டிகளும் அதிமுகவை பாஜக மதிக்கிறதா, இல்லையா என்ற கேள்வியை உருவாக்கின.

குறிப்பாக எல்.முருகன் கடந்த மார்ச் மாதம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே பாஜகவுக்கும், அதிமுகவுக்குமான உரசல் ஆரம்பமாகிவிட்டது. தமிழக பாஜக தலைவரானதும் முருகனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். கூட்டணிக் கட்சி என்ற முறையில் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், கூட்டணிக் கட்சித் தலைவர், மத்திய ஆளுங்கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முருகன் முயற்சி செய்தும் சந்திக்க நேரமே கொடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமி. இதுவரை இருந்த பாஜகவின் மாநிலத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் சந்திக்க ஒப்புக்கொண்ட முதல்வர், தமிழக பாஜகவின் மற்ற தலைவர்களை எல்லாம் சந்திக்க நேரம் ஒதுக்கும் முதல்வர்... முருகனை மட்டும் ஒதுக்குவது ஏன் என்று தமிழக பாஜகவில் மட்டுமல்ல; அதிமுகவிலும் சலசலப்புகளைக் கிளப்பியது. இதை முருகன் தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாகவே கருதுகிறார். மார்ச் மாதம் பாஜக தலைவரான முருகனை ஆகஸ்ட் மாதம்தான் முதல்வர் சந்திக்கிறார். அதுவும் விநாயகர் சதுர்த்தி விவகாரம் என்ற அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த அடிப்படைக் காரணத்தின் மேல் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உரசல்கள் அதிகரித்தன. பாஜக தனித்துப் போட்டியிட்டால் 60 இடங்களில் ஜெயிப்போம் என்று முருகன் சொன்னதும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்று முருகனால் அழைத்து வரப்பட்ட வி.பி.துரைசாமி சொன்னதும் யதேச்சையானது அல்ல. இப்போது பிரதமரின் கிசான் நிதியில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதை முதல்வர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார் முருகன். இதை வைத்தே பாஜக வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்றல், தனி அணி அமைத்தல், தமிழகம் முழுவதும் பாஜகவை கிராமங்கள் வரை கொண்டு செல்லல் என்ற திட்டத்தில் இருக்கிறார் முருகன்.

அடுத்து அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தேமுதிக தொடர்ந்து சவால் விட்டுக்கொண்டே இருக்கிறது. மாற்று அரசியலை மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். திமுக, அதிமுக ஆகிய பூனைகளுக்கு மணி கட்டுவது யார் என்று பிரேமலதா பேசி வருகிறார். ஆனால் தேமுதிகவை கடிந்துகொள்ளும்படியாக அதிமுக ஏதும் பதிலளிக்கவில்லை. கூட்டணி தொடர்கிறது, கூட்டணியில் சில பிரச்சினைகள் இருக்கலாம் என்று மழுப்பி வருகிறது அதிமுக.

பாஜக, தேமுதிகவை அடுத்து கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே வடமாவட்டத்தில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று இரு கட்சியினருமே சொல்லி வந்தார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு நடந்த மினி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி தொடர்வதற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை பாமக கூட்டணி மூலமாகவே எடப்பாடி பெற்றார். மேலும் தனது எடப்பாடி தொகுதியில் கூட பாமகவின் கணிசமான ஓட்டுகள் இருப்பதால் தனது தனிப்பட்ட தேர்தல் வெற்றிக்கும் பாமக தேவை என்று கருதுகிறார். அதனால் கூட்டணியில் பாஜகவை விட, தேமுதிகவை விட பாமகவையே எடப்பாடி மதிக்கிறார் என்ற தோற்றமும் ஏற்பட்டது. ஆனால் அதுவும் இப்போது மங்கி வருகிறது.

பாமக பிரமுகர்களோ, ‘எங்கள் ஐயாவுக்கு எதிராக ஒரு வன்னியர் சங்கத்தை வளர்க்க கூர் சீவி விட்டுவருகிறது அதிமுக. பாமக தலைமைக்கு எதிரான செய்திகள் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது. ‘இன்றைய சூழ்நிலையில் வன்னியர்களின் வாழ்வாதாரம், ராமதாஸின் அரசியல் சூதாட்டத்தில், களவாடப்பட்டுள்ளது. பாமக ராமதாஸ் சொல்வதும் ஒன்றும், செய்வது ஒன்றுமாக, அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் கொச்சையாக விமர்சனம் செய்தும், வன்னியனை ஏமாற்ற பொய்யான சத்தியங்களைச் செய்தும், திராவிட கட்சிகளோடு இனி கூட்டணியே சேர மாட்டேன் என்று தாயின் கற்பை அடக்கு வைத்து, வாய்கிழிய மேடை தோறும் பேசிவிட்டு, தேர்தல் வந்துவிட்டால் கூட்டணி பேரத்திற்கு இறங்கி வருபவர் ராமதாஸ். வட தமிழகத்தில் பெரும்பான்மையாகவுள்ள வன்னியச் சமூகத்தினர் அனைத்து கட்சியிலும் உள்ளனர், அந்த கட்சிகள் வன்னியர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இதைப் பயன்படுத்தி ராமதாஸ், வன்னியர்கள் தனது பின்தான் இருக்கிறார்கள் என்று, காலி பெருங்காய டப்பாவை வைத்துக்கொண்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார்’ என்று ராமதாஸ் பற்றி சமூக தளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இது மாநில உளவுத் துறையின் வேலையாக இருக்கலாம் என்ற எண்ணமும் பாமக பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் மீண்டும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும், நானே தலைமை தாங்குவேன் என்று செப்டம்பர் 6ஆம் தேதி பாமக இணையப் பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் ராமதாஸ். கட்சி நிகழ்ச்சிகளில் அதிமுக மீதான அட்டாக்கும் பாமகவில் ஆரம்பமாகிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி இப்போது பாஜகவுடன் உள்ள நெருக்கத்தை அதிமுகவுடன் காட்டுவதில்லை.

இப்படியாக அதிமுக அணியில் இடம்பெற்றிருந்த பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் ஆகிய நான்கு கட்சிகளுமே இப்போது அதிமுகவுடன் சுமுகமான உறவில் இல்லை. பெரிய கட்சி, ஆளுங்கட்சி, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி என்ற வகையில் அதிமுகதான் தனது கூட்டணிக் கட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வேண்டும். ஆனால் அதிமுகவுக்குள் என்றைக்கும் வெடிக்கத் தயாராகும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல், சசிகலா வருகை போன்ற காரணிகளால் அதிமுக மீதுதான் கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அதிமுகவுக்கு முக்கியக் கூட்டணிக் கட்சிகள் ஏதும் இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய சூழலும் ஏற்படலாம் என்பதே இப்போதைய நிலை. எடப்பாடியும், பன்னீரும் இதற்கு அனுமதிப்பார்களா என்பதே கேள்வி” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: