வெள்ளி, 11 செப்டம்பர், 2020

தாடியும் தலப்பாகையும் மட்டுமல்ல இருவரின் அரசியல் சித்தாந்தங்களும் ஒன்றுதான்... பாரதியும் - மோடியும்

ஒரு கவிஞனாக அவரது எத்தனையோ முரண்களில் புதுமைப்பெண்ணும் ஒன்று.   . அவரது புதுமைப்பெண் ஒரு முரண்பட்ட குழப்பமான கற்பனை. நிஜத்திலோ அவரது அடிப்படை அரசியல் என்பது ஆர் எஸ் எஸ்சின் பாரதமாதா அரசியல். அமெரிக்கை நாராயணன் காங்கிரஸில் இருந்து கொண்டே எச் ராஜாவைவிட ஆண்டாளுக்காக ஆவேசமாக குரல்கொடுத்த கதை.  

LR Jagadheesan : · பொறுமையாக இறுதிவரை படிக்கவும் “ஹிந்துக்களை ஒன்றிணைப்பதே மற்ற எதனையும்விட மேலான காரியம்” ”இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.” ”எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.” 

”இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன:


1 "வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

2 புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்.

3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்.

மதமாற்றம் தவறு

”இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமான முடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது....

ஆம்... ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைப்பட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடராயுள்ளனர்.

“ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை”

உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தை; பரப்ப வேண்டும்

வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம்... சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்ற சமயத்தில் எழுதப்பட்ட வரிகள்).

இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம், மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம்.

மேலும், இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்.

இந்தியாவிற்குப் பாரத தேசம் என்ற பெயர்தான் வேண்டும்

பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்திய படியால் இந்நாட்டிற்கு பாரததேசம் என்ற பெயர் உண்டாயிற்று.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மத மாற்றம் ஏற்பட்டது

திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்.

1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்த போது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது. ..... எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாகத் திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது.
மடாதிபதிகளும், ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம் நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள்.

கிழச்சாம்பான் சொல்லுகிறார்:

ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொருவனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.

பசுவதைத் தடுப்பு

பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும். யாகசாலையையும். கோவிலையும். நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை வீபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே வீபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும் யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்கிறது.


பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்துமாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்.


இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள்.

கிறித்துவ மிஷனரி பாடசாலைகளை விலக்கி வைத்தல் வேண்டும்

கிறித்துவ மிஷனரி பாடசாலைகளில் படிப்பவர்கள் இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாம்

லோக குரு பாரதமாதா

எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக்கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப் படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி. ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி.

இதையொட்டி இரண்டு அடிப்படை கேள்விகள்:

1. இந்த அரசியல் கொள்கைகள், சித்தாந்தம், நிலைப்பாடு, வழிகாட்டல் இந்திய அரசியலில் எந்த அரசியல் கட்சி அல்லது அமைப்புக்கு பொருந்தும்?

2. ஒட்டுமொத்த இந்தியாவிலும் நாங்கள் மட்டுமே மதசார்பற்ற மாணிக்கங்கள் என்று கூறும் இந்திய இடதுசாரிகள் இந்த அரசியல் கொள்கைகள், சித்தாந்தம், நிலைப்பாடு, வழிகாட்டல்களின் ஒரே பேராசானை போற்றிக்கொண்டே மற்ற அரசியல் கட்சிகளுக்கு மதசார்பின்மை குறித்து பாடம் எடுக்கலாமா?

1 கருத்து:

nandhitha சொன்னது…

வணக்கம்
தங்கள் பதிவை நகல் எடுத்துக் கொள்ளலாமா