வெள்ளி, 11 செப்டம்பர், 2020

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

 minnambalam :கொரோனா தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தி வைக்கப்படுவதாக பூனேவின் சீரம்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின்  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்  மற்றும்  ஆஸ்ட்ராசெனிகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்த  ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.  முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்ற நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடந்து வந்தது.   இதில் பரிசோதனைக்கு உட்படுத்திய தன்னார்வலர் ஒருவருக்கு, விவரிக்க முடியாத பாதிப்பு ஏற்பட்டதால் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனிகா மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதனால்  மற்ற நாடுகளிலும் நடைபெற்று வந்த பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து இந்தியாவில் கோவிஷீல்டு பரிசோதனை மேற்கொள்ளும்  புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம், “இங்கிலாந்தின் சோதனைகள் குறித்து எங்களால் அதிகம் கருத்துத் தெரிவிக்க முடியாது, அவை மேலும் மதிப்பாய்வு செய்ய இடைநிறுத்தப்பட்டுள்ளன, விரைவில் மறுதொடக்கம் செய்யப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை  தொடர்ந்து பரிசோதனை நடைபெறுகிறது” என்று தெரிவித்தது.

இந்நிலையில்,    பிரிட்டனில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளது குறித்து ஏன் தகவல் தெரிவிக்கவில்லை, இந்தியாவில் பரிசோதனை நிலை எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பி  மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) சீரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

தற்போது இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சீரம்  நிறுவனம், “தற்போதைய சூழலை ஆராய்ந்து இந்தியாவில் கொரோனா  தடுப்பு பரிசோதனையை நிறுத்தியுள்ளோம். அஸ்ட்ராசெனிகா மீண்டும் பரிசோதனை தொடங்கும் வரை இங்கு பரிசோதனை நிறுத்தி வைக்கப்படுகிறது.  நாங்கள் டிசிஜிஐ உத்தரவை  பின்பற்றுகிறோம். இவ்விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு எந்த கருத்தும் கூற முடியாது. மேலும் தகவலுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம்" என  தெரிவித்துள்ளது.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: