வியாழன், 17 அக்டோபர், 2019

புதிய தலைமை நீதிபதியின் பின்னணி.. சென்னை உயர்நீதிமன்ற ....

புதிய தலைமை நீதிபதியின் பின்னணி!மின்னம்பலம் : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, பாட்னா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி, மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.
; கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடியுள்ளது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை நியமிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொலீஜியம் இன்று (அக்டோபர் 17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹிவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றியும், மேகாலயாவில் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டல், மத்தியப் பிரதேச நீதிமன்றத்துக்கு மாற்றியும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கரோல், பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.பி.சாஹி பின்னணி
அம்ரேஷ்வரர் பிரதாப் சாஹி 1959ஆம் ஆண்டு பிறந்தார். 1985 ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2004ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005ல் நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிபதி ஏ.பி.சாஹியின் பதவிக் காலம் 2020 டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது

கருத்துகள் இல்லை: