ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தமிழ் உணர்வைத்தூண்டாத பாடநூல்கள்... சம்ஸ்கிருத திணிப்பு சொற்கள் ..

சம்ஸ்கிருத / வடமொழி எழுத்துக்களையும் சொற்களையும் தமிழுக்குள் திணிக்கும் ஆர் எஸ் எஸ் அஜெண்டா ஆரம்பம் .. இதுதானே ஆயிரமாண்டுகளாக செய்துகொண்டு வருகிறார்கள் .. தமிழின் சீரிளமை திறம் கண்டு வெறுப்புற்ற கூட்டம் .. அனுமதிக்கலாமா?
தமிழ் உணர்வைத் தூண்டாத பாடநூல்கள்...
- ஐவி.நாகராஜன்
ஒருவர் தன் குழந்தைகளுக்காக வாங்கியிருந்த தமிழ் 7, 8ஆம் வகுப்பு பாடநூல்களை ஒரு ஆர்வத்தில் வாங்கிப்புரட்டினேன். இரண்டுமே கனமான புத்தகங்கள். 250 பக்கங்கள் இருக்கலாம். அழகுணர்வே இல்லாமல் மிகமோசமான வடிவமைப்பு. வரையப்பட்டிருந்த படங்கள் அழகற்றவையாக இருந்தன. சாதாரணமாக ஒருவாரப் பத்திரிகையில் வரும் ஓவியங்களின் நேர்த்தியான அச்செழுத்து வடிவமைப்பை கூட அதில் காண முடியவில்லை. கிடைத்த இடத்தில் எல்லாம் பசுஞ்சாணியை உருட்டி அடித்து வரட்டி தட்டியது போல, நிரப்பி இருக்கிறார்கள். 7 அல்லது 8-ஆம் வகுப்பு தமிழ்மொழிப் பாடத்துக்கு இவ்வளவு பக்கங்கள் இவ்வளவு கனமான விஷயங்கள் தேவையா? இப்படி பல கேள்விகள் எனக்குள் எழுந்தது. மதச்சார்பின்மை என்ற அரசியல் முகமூடி போட்டு தமிழ்க்கவிதை கட்டுரைகளைப் பாடத்திட்டத்தில் வைக்கிறார்கள். இவைகளில் எதுவும் தமிழ் மீதோ, தமிழ் இலக்கியச் சுவை மீதோ ஆர்வம் கொள்ளச் செய்ய இயலாதவை. வெறும் தகவல் களஞ்சியமாக மொழிப்பாட நூலை மாற்றிவிட்டால் இன்னும் மோசமாகிவிடும் அளவிற்கு பாடநூலின் உள்ளடக்கம் உள்ளது.
மொழிப்பாடம் என்பது தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு என்று எதுவென்றாலும் ஒரு மொழியை எவ்வாறு பிழையின்றி எழுதுவது படிப்பது என்று சொல்வதுடன் அந்த மொழியின் வரலாறு, சிறந்த படைப்புகளை அடையாளப்படுத்தும் விதமாக எளியபதங்களுடன் இலக்கியச் சுவை குன்றாத சில பாடல்களை படிக்கச் செய்வது என்பதாக இருந்தால் போதுமானது.

1979-ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி தமிழ் ஆங்கிலம் இரு பாடநூல்களும் அதிகபட்சம் 100 பக்கங்களாக இருந்தன. இரண்டையும் ஒன்றாக பைண்டிங் செய்வதே பலரது வழக்கமாக இருந்தது. அறிவியல் கணிதம் வரலாறு, பக்கங்களுக்கும் மேலானவை என்பது குறிப்பிடத்தக்கது. அன்று தமிழ் மொழி பாடநூலை தயாரித்த ஆசிரியர்கள் 1949-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழ் உணர்வு உண்டு. வெறி கிடையாது. அதைவிட முக்கியமாக மதச்சார்பின்மை என்கிற போலி முகமூடிகளும் கிடையாது. ஆகவே அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு புரியக்கூடிய எளிய பதங்கள் கொண்ட கட்டுரைகளை அமைத்தார்கள், கவிதைகளைத் தேர்வு செய்தார்கள். பாடத்திட்டம் எளிமையாகவும், இனிமையாகவும் இருந்தது. தமிழ் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்கு பிறகும் தமிழை வேறு தளங்களில் படிக்கத் தூண்டியது.
ஒரு மொழியை பிழையின்றி கையாள பயிற்றுவிப்பதுதான் மொழிப்பாடம். மொழியைக் கையாளத் தெரிந்த மனம் இயல்பாகவே ஒரு வளரும் கொடிபோல, பற்றுதலோடு தேடும். அது பாடத்திட்டத்துக்கு வெளியேயும் அழகுற அமையும். வாரஇதழில் வரும் தொடர் அல்லது நாவல் சிறுகதை, கவிதை, அறிவியல் உலகம், வரலாறு தத்துவம், தனக்குப் பிடித்த கவிஞன் எழுத்தாளன், என்று மெல்ல, மெல்ல அவரவர் தேடலுக்கு ஏற்ப கொடி படர்ந்தும் ஏறும். ஆனால் இப்போதைய தமிழ்ப் பாடநூல்களில் பக்கம் பக்கமாக கொட்டி நிரப்புகிறார்கள். அதிலும் சுவை இல்லாத பகுதிகள் துவைத்த துணிகளை சலவை போடுவதற்காக ஒரு பையில் கண்டபடி அமுக்கி கொண்டுபோய் கொடுப்பதுபோல் மாணவர்களிடம் இதைக் கொடுத்துள்ளனர்.
இவ்வளவு தமிழைக் கொடுத்தும் ஏன் மாணவர்கள் தமிழை பிழையின்றி எழுத தெரியாதவர்களாக வெளிய வருகின்றனர்? பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ்மொழிப்பாடம் தேவையில்லை என்ற கருத்து வந்தவுடன் இங்கே விவாதங்கள் முன்னுக்கு வந்தது. பிளஸ் 2 என்பது அறிவின் விரிவைத் தேடும் காலகட்டம் அங்கு மொழி ஒரு வழித்துணை மட்டுமே. அது ஆங்கில வழி தமிழ் வழி என்று இதை தனிப்பிரிவாக பிளஸ் 2 விலேயே படிக்க வைக்க செய்யலாம். சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மருத்துவம் பயிலச் செல்லும் மாணவர்களுக்கு சீன, ரஷ்ய மொழியை எழுதப்படிக்க மருத்துவம் சார்ந்த சொல்லாடல், உரையாடும் சொற்கள் இவை மட்டுமே ஒரு மாதத்தில் கற்றுத்தேற முடிகிறது. அவர்கள் புஷ்கின் டால்ஸ்டாய் ஷோலக்காவ் இப்படி எல்லோரையும் படித்தாக வேண்டியதில்லை. இதையெல்லாம் படிக்க விரும்புவோர் சீன இலக்கியம் ரஷ்ய இலக்கியம் தனியாக படிக்கலாம்.
தமிழ்நாட்டில் படிக்கும் எல்லா மாணவர்களிடமும் தமிழ்ப் பாடநூல் மூலம் தமிழ் உணர்வைத்திணிக்க முடியாதுதான். அப்படிச் செய்யும்போது அவர்கள் நேர்மாறாக தமிழைப் படிக்க விரும்பாதவர்களாக கூட இருக்கலாம். இந்த உளவியல் சிக்கலைத்தான் இன்றைய தமிழ்ப்பாடநூல்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செம்மொழி தமிழை சிதைக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்துணையையும் மத்திய பிஜேபி அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் மொழி சார்ந்த பிரச்சனைகளில் எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை. ஒருகாலத்தில் தமிழகத்தில் இந்தி திணிப்பு நடந்தப்போது தமிழ்நாடே பொங்கி எழுந்தது. தமிழை காக்க பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இளைஞர் மாணவர்களின் எழுச்சியும் அப்போதைய மத்திய அரசை பணியவைத்தது.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியின் பலவீனத்தை அறிந்துகொண்ட பிஜேபி அரசு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பின்னுக்குதள்ளி மெல்லமெல்ல இந்தியை அரங்கேற்றம் செய்ய துடிக்கிறது. அதன் முதற்படியாகத்தான் தமிழ் பாட நூல்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர்களை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ரயில்வேயில் இந்தி பேசும் வடநாட்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து அண்மையில் தபால்துறையிலும் இந்தியின் கிளைகளை படர முனைப்பு காட்டிய மத்திய அரசு கடும் எதிர்ப்புக்கு பின்னால் பின்வாங்கியது.
அரசியல் அமைப்புச்சட்டம் அங்கீகரித்த மொழிகளின் சமத்துவத்தை பேணிகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமைகளில் ஒன்றல்லவா? மத்திய அரசு பணியிட தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் வினா தாள் தருவதே இந்திய இறையான்மைக்கு நலன் சேர்க்கும் செயலாகும். அந்த வகையில் தமிழ் பாடநூல்கள் மட்டுமல்ல தபால் துறை போன்ற தேர்வுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதே சரியானதாக இருக்க முடியும்

கருத்துகள் இல்லை: