வெள்ளி, 18 அக்டோபர், 2019

எழுவர் விடுதலை: நிராகரித்த ஆளுநர்!

 எழுவர் விடுதலை: நிராகரித்த ஆளுநர்!மின்னம்பலம் : எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு முன்பாக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் 161வது பிரிவை பயன்படுத்தி 7 பேரையும் ஆளுநர் விடுவிக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஏழு பேரின் விடுதலைக்காக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தும், அது தொடர்பாக ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்துவந்தார். தமிழக அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக அரசின் சார்பில் ராஜ்பவனுக்கு பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த விவகாரம் பரிசீலனையில் இருப்பதாகவே ஆளுநர் தரப்பு பதில் அளித்தது.
இந்த நிலையில் ஏழு பேரின் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தி இந்து ஆங்கில நாளேடு இன்று (அக்டோபர் 18) செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தொடர்பான அமைச்சரைவை பரிந்துரையை ஏற்க இயலாது என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுவரை தனது முடிவு தொடர்பாக ஆளுநர் தமிழக அரசுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைகளை கடந்த ஆண்டு மத்திய உள் துறை அமைச்சகம் நிராகரித்தது. ஏழு பேரையும் விடுவிப்பது அபாயகரமான முன்னுதாரணமாகிவிடும் எனவும், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தது. இந்த நிலைப்பாட்டைத்தான் ஆளுநரும் தற்போது எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: