திங்கள், 14 அக்டோபர், 2019

தலித் இளைஞரை திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை - சித்தூர் ,,, பெற்றோர் கைது

மாலைமலர் :சித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர்
ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை: ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17).
அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒட்டுமரி பகுதியை சேர்ந்த சீனிவாசலு, பத்மம்மா தம்பதியினரின் மகன் பிரபு (19), கட்டிட மேஸ்திரி. சந்தனாவும், பிரபுவும் பள்ளியில் படிக்கும் போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் சந்தனா வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரபுவையும் கண்டித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த 10-ந் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் 11-ந் தேதி கோவிலில் திருமணம் செய்தனர். மகள் காதலனுடன் சென்றதை அறிந்த பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து அவர்களை தேடி வந்தனர்.


காதல் ஜோடியை கண்டுபிடித்த சந்தனாவின் பெற்றோர் மகளை மட்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

பிரபுவை மறந்து தங்களுடன் இருக்குமாறு பெற்றோர் அவரை வற்புறுத்தினர். ஆனால் சந்தனா பிரபுவுடன் தான் வாழ்வேன் என்று அடம்பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சந்தனாவை வீட்டுக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் உடலை வீட்டிற்கு வெளியே கொண்டுவந்து அங்குள்ள விவசாய நிலத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர். எரிக்கப்பட்ட சந்தனாவின் அஸ்தியை மூட்டையில் கட்டி யாருக்கும் தெரியாமல் கர்நாடகா எல்லையான கேசம்பல்லி ஏரியில் வீசினர்.

மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு இதுகுறித்து சாந்திபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனாவின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் சந்தனா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் ஆணவ கொலை செய்து உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை கேட்டு போலீசார் மற்றும் பிரபு அதிர்ச்சியடைந்தனர். வெங்கடேஷ், அமராவதி தம்பதியினரை சந்தனாவை கொலை செய்த வீடு, எரிக்கப்பட்ட இடம் மற்றும் அஸ்தியை வீசிய இடங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவர்களை கைது செய்து இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: