திங்கள், 14 அக்டோபர், 2019

பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி... குறைந்த மதிப்பெண்கள் அப்பாவுக்கு தெரிஞ்சிடுமே.. .

அச்சத்தில் குதித்த மாணவி tamil.oneindia.com - /VelmuruganP.   திருச்சி: மதிப்பெண்கள் குறைந்ததால் திருச்சியில் 11-ம் வகுப்பு மாணவி பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி பொன்மலைப்பட்டி செங்கோல் உடையார் தெருவை சேர்ந்தவர் ராக்கி எமல்சன்.
என்ஜினியரான இவருடைய மகள் ஏஞ்சலின்லெமோ (வயது 16). இவர் திருச்சி மேலப்புதூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்.
ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வரும் இந்த பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிந்தவுடன் மதிப்பெண்கள் வழங்கும்போது பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
அப்போது மாணவிகளின் பெற்றோரை அழைத்து தேர்வில் மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அறிவுரை வழங்குவார்கள்.சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில் ஏஞ்சலின்லெமோ மதிப்பெண்கள் குறைவாக எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வீட்டில் அதிக மதிப்பெண்கள் வாங்கியதாக கூறி சமாளித்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடந்தது. குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளின் பெற்றோர் கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஏஞ்சலின்லெமோவின் தந்தை ராக்கி எமல்சனும் பள்ளிக்கு வந்தார்.

அச்சத்தில் குதித்த மாணவி?
அங்கு அவரை பள்ளியின் வாசலில் நிற்க வைத்துவிட்டு மதிப்பெண் சான்றிதழ் வாங்கி வருகிறேன் என்று மாணவி ஏஞ்சலின்லெமோ பள்ளிக்குள் சென்றார். அங்கு அவரை ஆசிரியை திட்டியதாகவும், தந்தையை பள்ளிக்குள் அழைத்து வரும்படியும் கூறியதாகவும் தெரிகிறது. இதனால், தான் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தது தந்தைக்கு தெரிந்துவிடுமே என மாணவி அச்சம் அடைந்தார். உடனடியாக அவர் ஆவேசத்துடன் பள்ளியின் முதல் மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய கால்கள் முறிந்ததோடு, முதுகெலும்பிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை கண்ட ஆசிரியைகள், மாணவியின் தந்தை, மற்றும் கூட்டத்துக்கு வந்த பெற்றோர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு வாகனத்தில் ஏற்றி திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 விசாரணை?
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள், சம்பவத்தை நேரில் பார்த்த பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் பள்ளியின் முதல் மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: