செவ்வாய், 10 செப்டம்பர், 2019

தமிழில் ரயில்வே தேர்வுகள் எழுதலாம்... திமுக கோரிக்கை ஏற்பு!

தமிழில் ரயில்வே தேர்வுகள் எழுதலாம்!மின்னம்பலம் : ரயில்வே பணியாளர்களுக்கு நடத்தப்படும் ஜி.டி.சி.இ தேர்வைத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் General Departmental Competitive Exam எனப்படும் ஜி.டி.சி.இ தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.

இதற்குp பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. திமுக எம்.பி கனிமொழி தலைமையில் சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்தத் தேர்வைத் தமிழில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
ரயில்வே தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நேற்று மாநில மொழிகளில் ஜி.டி.சி.இ தேர்வை நடத்தலாம். மாநில மொழிகளில் தேர்வு எழுதத் தடையில்லை என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில்வேயில் துறை சார்ந்த ஜி.டி.சி.இ தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திமுக போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து திமுக உறுதியுடன் போராடும்” என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: