ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

தலைமை நீதிபதிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மின்னம்பலம் : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2020 அக்டோபர் 2ஆம் தேதி வரை தஹில் ரமணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் அவரை இடம் மாற்றம் செய்திருக்கிறது. அவருக்குப் பதிலாக மேகாலயா நீதிமன்ற தலைமை நீதிபதி மிட்டல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்யப்பட இருக்கிறார். தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்ததால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தஹில் ரமணி அனுப்பியிருக்கிறார்.

தஹில் ரமணிக்கு ஆதரவாக ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வைகை, சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தனர். அதில், மூத்த நீதிபதிகளில் ஒருவரான தஹில் ரமணியை 3 நீதிபதிகள் மட்டும் உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைத்திருப்பது ஏற்க தக்கது அல்ல. அவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிட ஆவண செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாகச் செப்டம்பர் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தயிருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறிவித்திருக்கின்றனர். ”தலைமை நீதிபதி பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய கொலீஜியத்துக்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும், தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவி விலகல் முடிவிலிருந்து மறுபரீசிலனை செய்ய வலியுறுத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆவின் நிலையம் அருகே மதியம் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பனோ (Bilkis Bano) பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு தஹில் ரமணி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: