புதன், 11 செப்டம்பர், 2019

500 வீடுகளை கொண்ட 5 அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு

Arivalagan S - /tamil.oneindia.com : கொச்சியில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டப்பட்ட 5 அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு 
டெல்லி: கேரளாவில், விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டப்பட்ட 500 வீடுகள் கொண்ட 5 அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து தள்ளுவதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
கேரள மாநிலம் கொச்சி புறநகர் பகுதியில் அமைந்துள்ள மரடு நகராட்சியில் கடற்கரைக்கு நெருக்கமான பகுதிகளில் அடுக்குடிமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு 2006ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது பஞ்சாயத்தாக இருந்த மரடு பகுதி 2010ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 
இந்த நிலையில், மரடு நகராட்சிக்கு உட்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் - III என்று அறிவிப்பாணை செய்த பகுதியில் விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதியை திரும்ப பெறுமாறு மரடு நகராட்சிக்கு கேரள அரசு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்டுமானத்திற்கான அனுமதியை ரத்து செய்வது தொடர்பான அந்த நோட்டீஸை ரத்து செய்யுமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், நகராட்சி அனுப்பிய நோட்டீஸை அதிரடியாக ரத்து செய்தது. கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், விதிமீறல்கள் குறித்து முகாந்திரம் இருப்பதை உணர்ந்து கொண்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய வல்லுனர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
1991ம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மற்றும் 1996ம் ஆண்டு கேரள மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய திட்டம் ஆகியவற்றின்படி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்-III என்ற தடை செய்யப்பட்ட பகுதியின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
கடற்கரை மண்டலங்கள் மற்றும் ஆற்றுப் படுகைகளில் இதுபோன்ற பிரம்மாண்ட கட்டுமானங்களை அனுமதிப்பதால், இயற்கை பேரழிவின்போது பெரும் துயர்களை ஏற்படுத்திவிடும். கடந்த காலங்களில் பெருமழையின்போது சில நகரங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக் காட்டி கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு,"கடற்கரையோரம் தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டப்பட்ட 500 வீடுகள் கொண்ட 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் இந்த அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 மரடு நகராட்சி பகுதியில் உள்ள ஹோலி ஃபெயித், கயலோரம், அல்ஃபா வென்ச்சர்ஸ், ஹாலிடே ஹெரிடேஜ் மற்றும் ஜெயின் ஹவுசிங் ஆகிய 5 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடித்துத் தள்ளுவதற்கு உத்தநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே பகுதியில் மேலும் பல கட்டுமானங்கள் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Read more at: https://tamil.oneindia.com/news/india/supreme-court-orders-demolish-5-apartment-buildings-kochi-violating-coastal-rules-349658.html

கருத்துகள் இல்லை: