செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

டெல்லியில் மையம்கொள்ளும் திராவிடப்_புயல்..!

ஜீவா வனத்தையன் தமிழரிமா : 1975 ஜூன் 25 ஆம் நாளன்று இந்திய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்த போது அப்போது இந்திராவோடு கூட்டணியிலிருந்த திமுகதான் அதே ஜூன் மாதம் 26 ஆம் நாளே இந்தியாவிலேயே முதல் குரலாக தன் கண்டனத்தை பதிவு செய்தது. கிட்டத்தட்ட இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் சாசனம் பிரிவு 370 ஐ நீக்கியதோடு , அம்மாநில அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு மாநில அந்தஸ்தை பறித்து அம்மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை கண்டித்து சுமார் 17 நாட்கள் கழித்துதான் ஆகஸ்ட் 22 ல் எதிர்க்கட்சிகளை இணைத்து திமுக போராட்டம் நடத்துகிறது. திமுகவின் இந்த முடிவே மிகவும் தாமதமான முடிவுதான் என்பது எம் போன்றோர் கருத்து.
மாநில சுயாட்சி கொள்கையை தம் அடிப்படைக் கொள்கையாக கொண்டுள்ள திமுகவால் எப்படி காஷ்மீர் விவகாரத்தை அனுமதிக்க முடியும்..?
திமுக வின் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் டெல்லி பதறி தன் அடிமைகளை திமுகவின் மீது ஏவி விட்டிருக்கிறது. அதிமுக என்ற அடிமைக்கூட்டமும் தன் எஜமானன் விசுவாசத்தைக் காட்ட திமுகவை பிரிவினைவாதக் கட்சி என்று சொல்லி பாய்கிறது. இந்திராவின் நெருக்கடி நிலையின் போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தது திமுக தான். அன்று திமுக எடுத்த அதே நிலைப்பாட்டைதான் இன்றும் எடுத்திருக்கிறது. அன்று கள்ள மௌனம் காத்த அதிமுக இன்றும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து தங்களை காவிகளின் அடிமைமைகளாக அம்பலப்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ள சூழலில் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிவைத்துவிட்டு ஐநா விடம் கொடுத்த வாக்குறுதியை மீறி காஷ்மீரை துண்டாடியதோடு , அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சிறைபிடித்து விட்டு ஒரு ஜனநாயக படுகொலையை பாஜக செய்யும் போது அதைக்கண்டு அமைதியாகப் போக திமுக அடிமைகளின் கூடாரம் இல்லை. பாஜக வின் எதேச்சாதிகாரத்தை தட்டிகேட்கும் வலிமை காங்கிரசிடம் இல்லாத நிலையில் அல்லது காங்கிரஸ் காட்சியிலேயே இன்னமும் சிலர் இந்துத்துவா பற்றாளர்களாக இருக்கும் போது திமுக மட்டுமே பாஜகவை எதிர்த்து வாள் சுழற்ற வேண்டிய இடத்தில் உள்ளது.
இதுவரை தங்கள் கட்சியின் கொள்கையாக அரசியல் சாசனம் பிரிவு 370 ஐ ரத்து செய்வதை மட்டுமே கொண்டிருந்த பாஜக, 1999 ல் திமுக வுடன் கூட்டணி வைத்த போது அரசியல் சாசனம் பிரிவு 370 ஐ வலியுறுத்த மாட்டோம் என்று ஒப்புக்கொண்ட பாஜக, அந்த கூட்டணியில் காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியையும் சேர்த்துக்கொண்டது என்பது வரலாறு. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை காஷ்மீரின் மேகபூபா முக்தியுடன் கூட்டணி வைத்து ஆட்சியிலும் பங்கெடுத்தது பாஜக. ஆனால் அதே தலைவர்களை வீட்டு சிறையில் வைத்துக்கொண்டு காஷ்மீரை சிதைத்திருக்கிறது.

தற்போது அரசியல் சாசனம் கொடுத்த உரிமையை காஷ்மீரில் பறித்த பாஜக , நாளை தமிழகத்தில் தாமரையை மலர செய்ய அதிமுக என்ற கட்சியை அபகரிக்கும் நோக்கில் எடப்பாடி மற்றும் இதர அமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்து அதிமுகவை முடக்கினால் ஒப்புக்கொள்வாரா ராஜேந்திர பாலாஜி..? ரஜினிக்காக பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம் வகுத்திருக்கிறது. அந்த திட்டத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் ஆவலில்தான் திமுக வை பிரிவினைவாதக் கட்சி என்கிறது அதிமுக.

அண்ணாவே திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தவர்தான். தனித்தமிழ் நாடு மட்டுமே தமிழினத்தின் வளர்ச்சியினை உறுதி செய்யும் என்பது திமுக வின் அழுத்தமான கருத்து. மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலையில் தமிழகம் இந்திய ஒன்றியத்தோடு சேர்ந்து இயங்க முடியாது என்பதை நாம் எப்படி மறுக்க முடியும்..? 1962 ல் திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்ட போது அதற்கான காரணம் அப்படியே இருப்பதாக அண்ணா சொன்னார். அதனால் மாநில சுயாட்சி பற்றி பேசுவது பிரிவினைவாதம் என்றால் அது திமுகவினருக்கு பெருமையே..!! கொள்கை பேசுவதால் திமுக மீது சட்டப்படி நடவடிக்கை என்றால் உடன்பிறப்புகள் படை ஆரியத்தை அழித்தொழிக்க போர் தொடுக்கும்...!

கருத்துகள் இல்லை: