புதன், 1 மே, 2019

புர்கா தடை: சிவசேனா கோரிக்கை!

புர்கா தடை: சிவசேனா கோரிக்கை!மின்னம்பலம் : இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க வேண்டுமென்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டது. அது போன்று இந்தியாவிலும் புர்காவுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது சிவசேனா கட்சி. இது பற்றி, இன்று (மே 1) சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கப் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
“பாதுகாப்புப் படையினர் மக்களை அடையாளம் காண்பதில் சிரமப்படக் கூடாது என்பதற்காக இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிவது அல்லது புர்கா அணிவது என்பது தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுப்பதாகும்” என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத ரீதியான நடைமுறை ஒன்று தேசியப் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்குமென்றால் அதனை முடிவுக்குக் கொண்டுவருவதே நல்லது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

“சர்ஜிகல் ஸ்டிரைக் போன்றே இந்த நடவடிக்கையும் துணிச்சலானது. ஒரே இரவில் பொது இடங்களில் புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடை அணிவதற்குத் தடை விதித்துள்ளார் இலங்கை அதிபர். இது அதிபர் மைத்ரிபால சிரிசேனாவின் தைரியத்தை வெளிப்படுத்துகிறது” என்று சாம்னா தலையங்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடான துருக்கியில் கூட ஒருகாலத்தில் பெண்கள் புர்கா அணியவும், ஆண்கள் நீண்ட தாடி வைக்கவும் தடை இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: