சனி, 4 மே, 2019

சென்னையில் இலங்கை குண்டுவெடிப்பு ஆர்ப்பாட்டம்!

மின்னம்பலம்: இலங்கை குண்டுவெடிப்பில் கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகவும் சென்னையில் நேற்று (மே 3) முஸ்லீம் அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் முக்கிய ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. இதில் 259 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதற்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று (மே 3) நடத்தியுள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளுடன் சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
புரசைவாக்கம் பகுதிகளில் பேரணியாகச் சென்று கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய தவ் ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம், “ இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் எங்களது உறவினர்கள். எங்களுக்கு ஆசிஃபா வேறு, இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த சிறுவர்கள் வேறல்ல என்றார். இஸ்லாத்தின் பெயரில் அனைத்தையும் செய்துவிட்டு சொர்கத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறார்களா? இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்குக் கண்டனம் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், , “இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 40 குழந்தைகள், பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள். 500க்கும் மேற்பட்டோர் உடல் ஊனமடைந்துள்ளார்கள். இந்த மாபாதக செயலை உலகமே கண்டித்துக் கொண்டுள்ளது. தேவாலயங்களில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இச்சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றிருக்கிறது. இலங்கையில் செயல்படக்கூடிய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்போடு இணைந்து இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று இலங்கை அரசு சொல்கிறது.
இந்த வேளையில், இக்குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தமிழக
தவ் ஹீத் ஜமாத்தையும் இணைத்து சில ஊடகங்கள் விஷம பிரச்சாரத்தை செய்து வருகிறது. தீவிரவாதிகள் என்பவர்கள் மனித நேயத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் மனிதக் குலத்துக்கு விரோதிகள். தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடர்ந்து நாங்கள் 40 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். கஜா புயல், பேரிடர் காலங்களில் களமிறங்கி சமூகப் பணியாற்றக்கூடிய, ரத்ததான முகாம்கள் நடத்தக்கூடிய எங்களுடைய ஜமாத்தை தீவிரவாதிகளோடு ஒப்பிட்டுப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாங்கள் நியூசிலாந்து மசூதியில் இஸ்லாமியர்களைக் கொன்றவர்களைக் கிறிஸ்துவ தீவிரவாதிகள் என்றோ, பாபர் மசூதியை இடித்தவர்களை இந்து தீவிரவாதிகள் என்றோ சொல்ல மாட்டோம். தீவிரவாதிகள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மனிதர்களை கொன்றொழிக்கும் மிருகங்கள் தீவிரவாதிகள்” என்றார்.

கருத்துகள் இல்லை: