ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

செக்ஸ் இல்லாத் திருமண வாழ்க்கை: பரவும் வெறுமை!

செக்ஸ் இல்லாத் திருமண வாழ்க்கை: பரவும் வெறுமை!கெல்சி போரெசென்- மின்னம்பலம் : கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த விஷயம் தானா கிடைச்சிடும் என்று சொல்பவர்கள் நம்மூரில் அதிகம். உலகம் முழுக்கவே திருமணம் மற்றும் சேர்ந்து வாழ்தலின் அடிப்படையாக செக்ஸ் மட்டுமே உள்ளது. உலகம் முழுக்க இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான். ஆனால், திருமண வாழ்வின்போது சில கட்டங்களில் செக்ஸ் இல்லாமை எனும் பிரச்சினையைப் பல தம்பதிகள் எதிர்கொள்கின்றனர். இந்த அனுபவம் பெரும்பாலும் எல்லா தம்பதிகளுக்கும் வாய்க்கின்றன. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

சில நேரங்களில் ஒரே அறையில் தங்கியிருப்பவர்கள் போன்ற வாழ்க்கை முறை, செக்ஸ் உறவைப் பகிர்ந்துகொள்ளும் ஜோடிகளுக்குள்ளும் உருவாகிறது. இது தொடரும்போது சந்ததிகளின் பெருக்கம் நின்று போகிறது. அது மட்டுமல்லாமல் மூர்க்கமான, மோசமான முறையில் செக்ஸ் கொள்ளும் ஆர்வம் பெருக்கெடுக்கிறது. இப்போது வரை செக்ஸ் இல்லாத திருமண வாழ்வை விலக்கப்பட்டதாகவே இந்த சமூகம் கருதுகிறது.
திருமண வாழ்வில் செக்ஸ் காணாமல் போவதென்பது யாரோ ஒருவருக்கும் மட்டும் நிகழவில்லை. செக்ஸ் தெரபிஸ்ட்கள் தரும் விளக்கங்கள் இதனை நமக்கு உணர்த்துகின்றன.
செக்ஸ் பற்றிய பேச்சுகள்
எந்த உறவானாலும் தொடர்பு என்பது மிக முக்கியம். குறிப்பாக செக்ஸை பொறுத்தவரை நிறைய அந்தரங்க விஷயங்கள் உண்டு. செக்ஸ் குறித்த ஆசைகள், விருப்பங்கள், பாதிப்புகள் குறித்த பயம் பற்றிப் பேசும்போது, சில நேரங்களில் சிலருக்கு அது ஒவ்வாததாக இருக்கக் கூடும். அதற்காக, அந்த பேச்சை நிறுத்த வேண்டுமென்பதில்லை. நிறைய பேசப் பேசத்தான் உரையாடல்கள் எளிதாகும்.
“செக்ஸ் பற்றிப் பேசாத தம்பதிகள் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றனர். செக்ஸ் உறவில் தாங்கள் விரும்புவது என்னவென்பதைப் பற்றி அறியாமலே இருக்கின்றனர். ஒருவருக்கொருவர் தொடர்பற்று, தங்களது உண்மையான செக்ஸ் விருப்பம் என்னவென்று தெரியாமலே வாழ்கின்றனர்” என்கிறார் செக்ஸ் நிபுணரான ஷானான் சாவேஸ்.
இறுக்கும் மனஅழுத்தம்
மனதில் அழுத்தங்கள் பெருகும்போது செக்ஸ் என்பது விருப்பப் பட்டியலின் கடைசிக்குப் போய்விடும். கல்விக் கடன், குழந்தை பராமரிப்பு போன்ற விஷயங்களில் மூழ்கும்போது கார்ட்டிசோல் ஹார்மோன் சுரப்பு குறையும். அதன்பின், எங்கிருந்து செக்ஸ் ஆசை வரும்?
“குழந்தைகளோ, நிதிப் பற்றாக்குறையோ, எது பற்றிய கவலைகளாக இருந்தாலும் மன அழுத்தம் என்பது செக்ஸ் ஆர்வத்துக்குத் தடை போடுவதாகவே அமையும். செக்ஸ் ஆசை குறைவதோடு மட்டுமல்லாமல், அதற்கான சக்தி மற்றும் நேரமும் குறைத்துவிடும்” என்கிறார் செக்ஸ் தெரபிஸ்ட் ஜெஸ்ஸி கான்.
அதேநேரத்தில், மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கும் நோக்கில் செக்ஸ் உந்துதல் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார் சாவேஸ். “வேகமான இந்த வாழ்க்கை முறையில் செக்ஸ் தானாக வரும் வரை காத்திருப்பது நடவாத காரியம். சில நேரங்களில் செக்ஸை திட்டமிட வேண்டியுள்ளது. இதன் மூலமாக செக்ஸ் என்பது தானாக நிகழ்வது என்ற தவறான கற்பிதத்தைப் பின்னுக்குத் தள்ள வேண்டியுள்ளது” என்கிறார் ஜெஸ்ஸி கான்.
பொருந்தாத செக்ஸ் ஆர்வம்
ஒரே நேரத்தில் ஜோடிகள் இருவருக்கும் செக்ஸ் ஆசை எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது நிச்சயம் நியாயமில்லை. இருவருக்குமான செக்ஸ் ஆர்வமும் ஒரே அளவில் இருக்காது. இது குறித்து இருவரும் பேசினால் மட்டுமே வேறுபாடுகளை எப்படித் தீர்ப்பது என்ற ஆலோசனை நிகழும். அதன்பின் இருவருக்குமான பிரச்சினை காணாமல் போகும்.
அதிக ஆசைகள் கொண்ட ஒருவர் செக்ஸ் இல்லா வாழ்வை எதிர்நோக்கும்போது அதிகளவில் கோபமடைவார். இணையின் அதிக ஆசைகளுக்கு ஈடு கொடுக்கமுடியாத வருத்தத்தில் குறைந்த ஆசைகள் கொண்டவர் மனதுக்குள் குமைவார். அதிக ஆசைகள் கொண்டவர் தான் புறக்கணிக்கப்பட்ட எரிச்சலில் உழல்வார். “இந்த ஏற்றத்தாழ்வை பேசித் தீர்த்துவிடலாம். அவ்வாறு தீர்க்கப்படாதபோது, நாம் உரையாடலை முழுதாகத் தவிர்க்க வேண்டியதிருக்கும். இதையடுத்து நமது செயல்பாடுகளும் தவிர்க்கப்படும் நிலை உருவாகும்” என்கிறார் ஜெஸ்ஸி கான்.
மனநலமும் முக்கியம்
மனிதர்களின் உடல் நலம் போலவே, மனநலமும் செக்ஸ் செயல்பாடு நிகழக் காரணமாக உள்ளது. சில சிகிச்சைகள் மூலமாக இந்த பிரச்சினையைத் தீர்க்கலாம். “இது குறித்த கவனம் நேரடியாக செக்ஸ் ஆசையில் தாக்கம் ஏற்படுத்தும். உடல் தொடர்புக்கான தேவையை உருவாக்கும். சுய மதிப்பீடு குறைதல், உடல் தோற்றம் குறித்த பிரச்சினைகள் உள்ளிட்டவை கூட செக்ஸ் ஆசை மற்றும் இணையுடனான நெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார் சாவேஸ்.

மோசமான காலகட்டம்
வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபடுவது, நம்பிக்கைச் சீர்குலைவில் இருந்து மீள்வது அல்லது இணை உடனான தொடர்பு அறுந்துபோகும்போது படுக்கையறையில் பிரச்சினைகள் மட்டுமே மீந்திருக்கும். “உறவுச் சிக்கல் எல்லாமே கோபம், சீற்றம், ஏமாற்றம், காயம், துரோகம் மற்றும் ஆசை குறைவுக்கு வித்திடும். இந்த பிரச்சினைகள் ஒருபோதும் தீர்க்கப்படாது. அதை மீறித் தீர்வு கண்டாலும், அதிகளவில் காயப்பட்டதாகவோ அல்லது உறவு முறிந்ததாகவோ எண்ணம் தோன்றும்” என்கிறார் சாவேஸ்.
சில தம்பதிகள் கோபம் ஏற்படும் போதெல்லாம் செக்ஸ் கொள்வர் என்கிறார் செக்ஸ் தெரபிஸ்ட் கிரேசி லேயன்ஸ். ஆனால், இது எல்லாருக்கும் பொருந்தாது என்றும் கூறுகிறார். “உறவு குறித்த கோபம், தீர்க்கமுடியாத வாதம் ஆகியன எல்லாம் செக்ஸ் தொடர்பு சரியாக அமைந்தால் கரைந்துபோகும்” என்கிறார் இவர்.
தொடரும் விமர்சனங்கள்
உறவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஜான் காட்மேனைப் பொறுத்தவரை, விவாகரத்துக்கான முக்கியக் காரணமாக இருப்பது ஒருவர் மீதான அடுத்தவரின் விமர்சனங்கள். இது ஆரோக்கியமான விமர்சனமாகக் கட்டாயம் இருக்காது என்பது கண்கூடு. காயப்படுத்தும் வகையில் அமையும் விமர்சனங்கள் கண்டிப்பாகப் படுக்கையறையிலும் பிளவை ஏற்படுத்தும் என்கிறார் செக்ஸ் நிபுணர் ஸ்டீபன் ஸ்நைடர். “எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுதல் மட்டுமே உறவுகளைச் செழிக்க வைக்கும். குறிப்பாக செக்ஸ் உறவுகளைப் பொருத்தவரை, இணையை விமர்சிப்பதென்பது எளிதில் காயமடைய வழிவகுக்கும். இதனால் இது போன்ற விஷயங்களை எந்த விலை கொடுத்தேனும் தவிர்ப்பது நல்லது” என்கிறார்.
இயற்கைக்கு மாறான எதிர்பார்ப்பு
சில நேரங்களில் செக்ஸ் என்பது அசாதாரணமானது; உடல்கள் இணையும் சாகசம் என்று நினைக்கிறோம்.சில நேரங்களில் செக்ஸ் என்பது சாதாரணமானது. ஆனால் ஒவ்வொரு இணைவும் மனதை மயக்குவதாக இருக்க வேண்டுமென்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பானது. இந்த எதிர்பார்ப்பே செக்ஸ் முயற்சிகளில் இறங்குவதைத் தடுக்கும். “செக்ஸ் குறித்த யதார்த்தத்துக்குப் புறம்பான எதிர்பார்ப்புகளே அழுத்தத்தை உருவாக்கும். அதனால் செக்ஸ் செயல்பாடு பாதிக்கப்படும். இது உடல் தொடர்பைக் குறைத்து, இருவருக்குமான நேரத்தை முழுங்கிவிடும். அதிகமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, செக்ஸ் ஆசை குறைந்து அதனைத் தவிர்க்கும் சூழல் ஏற்படும்” என்கிறார் சாவேஸ்.
செக்ஸ் தொடர்பான பதற்றம்
பெர்பார்மன்ஸ் சரியில்லை என்று இணை சொல்லிவிடக்கூடாதே என்ற கவலையே பலரையும் கவலைக்கு உட்படுத்துகிறது. முக்கியமாக ஆணுறுப்பு விரைப்பது, உச்சகட்டம் அடைவது குறித்த கவலையே அதில் பிரச்சினைகள் உருவாகக் காரணமாகிறது. இதனால், நாம் முயற்சிக்காவிட்டால் தோல்விக்கே இடமில்லை என்ற சிந்தனை எழுகிறது. விளைவு, இருவருக்குள்ளும் செக்ஸ் என்பதே இல்லாமல் போகிறது.
“அமைதிதான் வெட்கத்தை உருவாக்குகிறது; வெட்கம் பதற்றத்தை உண்டாக்குகிறது” என்று இதற்குக் காரணம் கூறுகிறார் ஜெஸ்ஸி கான்.
சாகசங்கள் குறித்த தயக்கம்
பொதுவாழ்வில் மட்டுமல்ல படுக்கையறையிலும் சாகசங்களை விரும்புபவர்கள் உண்டு. அதனை வெளிப்படுத்தாதபோது, படுக்கையறை நரகமாக மாறும். வழக்கமான உடலுறவில் இருந்து விலகி வேறு விஷயங்களில் ஈடுபட விரும்புவோர் பலர் உலகில் உண்டு. இதில் இருபாலரும் அடக்கம். இதற்கு சமூகமும் கலாசாரமும் அனுமதி அளிக்குமா என்பது தனி விவாதத்துக்கானது.
இந்த சாகச நடவடிக்கைகளுக்கு இணை எவ்வாறு எதிர்வினை புரிவாரோ என்ற தயக்கமே, இருவரில் ஒருவரின் செயல்பாட்டை முடக்கும். “புதிய விஷயங்களில் ஈடுபடுவது பற்றி இணை என்ன நினைப்பாரோ என்ற சிந்தனையில், சிலர் இனப்பெருக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். ஆனால், இதுவே அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தி, அதன்பின் இருவருக்குமான உறவையும் பிரிக்கிறது. அபாயகரமான முயற்சிகளில் இறங்குவது குறித்த பயமே, செக்ஸ் உறவில் இருந்து சக்தியைப் பிரித்தெடுத்து விடுகிறது” என்கிறார் கிரேசி லேயன்ஸ்.
சலிக்கும் உறவு
இது அனைத்தையும் தாண்டி, பலரையும் பாதிக்கும் ஒரு விஷயம் உள்ளது. அது, பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்ற சமாச்சாரம் தான். எந்த ஒரு உறவும் ஒருகட்டத்தில் சலித்துப்போகும் வாய்ப்புண்டு. ஒரே விஷயத்தைத் தொடர்ந்து பழக்கமாக்கிக் கொள்ளும்போது, அதுவே ஒருகட்டத்தில் செக்ஸ் ரீதீயான சோர்வை ஏற்படுத்தும். புதிய விஷயங்களைப் பழகுவதும் கண்டுபிடிப்பதும் மட்டுமே இதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறை என்கிறார் ஜெஸ்ஸி கான்.
“ஆர்வப்படுவதில் இருந்து ஒதுங்குவது, வளர்ச்சியில் இருந்து விடுபட எத்தனிப்பது போன்றவை நிகழும்போது செக்ஸ் என்பது சாதாரணமாகிப் போகும்” என்கிறார் ஜெஸ்ஸி கான். “அப்போது காமம் குறித்த நமது எண்ணங்கள் குறித்து மீளாக்கம் செய்ய வேண்டும். எது உங்களுக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது பற்றி அறிய வேண்டும். அந்த ஆர்வத்தை, எதிர்பார்ப்பை, விளையாட்டுத்தனத்தை மீட்டெடுக்கும் வழிகளைக் கண்டறிந்து அதனைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உங்களது செக்ஸ் திறமையால் வாழ்வு மேம்படும்” என்பது இவரது அறிவுரை.
குழந்தைகள், கவலைகள், உடல் தோற்றம், சரியான சூழலின்மை போன்ற பல காரணங்களால் இந்தியாவில் தம்பதிகள் தங்களுக்குள் செக்ஸ் இல்லா வாழ்வை மேற்கொள்கின்றனர். அவர்களது உறவுச்சிக்கல்களுக்கும் அதுவே அடிப்படையாக இருக்கும். அதனை அறிந்து களைந்துவிட்டால், உறவின் தொடக்கத்தில் இருந்த செழுமை என்றும் தொடரும்!
நன்றி: ஹப்பிங்க்டன் போஸ்ட்

கருத்துகள் இல்லை: