சனி, 4 மே, 2019

21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

தீக்கதிர்  : புதுதில்லி: வாக்கு ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளில் 50
சதவீத வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதி யிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மார்ச் 14-ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம், லோக் தாந்திரிக் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வருகின்ற மக்களவைத் தேர்தலில், ஒரு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் முதல் 3 கட்ட வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்கு எந்தி ரத்தில் கோளாறு ஏற்பட்டதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து வாக்கு ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்கு களை மின்னணு வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில் 21 எதிர்க்கட்சி கள் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை வருகின்ற வாரத்தில் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: