வியாழன், 11 அக்டோபர், 2018

ப சிதம்பரம் குடும்பத்தினர் சொத்துக்கள் முடக்கம்!

ப சிதம்பரம் குடும்பத்தினர் சொத்துக்கள் முடக்கம்! மின்னம்பலம் : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று (அக்டோபர் 11) முடக்கியுள்ளது.
கொடைக்கானலில் உள்ள ரூ.25 லட்சம் மதிப்பிலான விவசாய நிலம், ஊட்டியில் உள்ள ரூ.3.75 கோடி மதிப்பிலான பங்களா, கோத்தகிரியில் உள்ள ரூ.50 லட்சம் மதிப்பிலான பங்களா மற்றும் டெல்லியில் உள்ள ரூ.16 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள சொத்தில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கார்த்திக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள ரூ.8.67 கோடி மதிப்பிலான வீடு, காட்டேஜ் மற்றும் ஸ்பெயினில் உள்ள ரூ. 14.50 கோடி மதிப்பிலான டென்னிஸ் கிளப் ஆகிய சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

கார்த்தியின் நிறுவனமான அட்வாண்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்த ரூ.90 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது.
சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதற்கு கார்த்தி சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த நடவடிக்கை சட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவில்லை மாறாக பைத்தியக்கார உத்திகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தலைப்பு செய்திகளை கவரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவேன்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் வழக்கு
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் (எஸ்ஐபிபி) இருந்து சட்ட விரோதமாக அனுமதி பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டிருந்த நிலையில், முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அக்டோபர் 25ஆம் தேதிவரை சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை: