வியாழன், 11 அக்டோபர், 2018

மேல்முறையீடு..! - நக்கீரன் கோபால் விவகாரத்தில் ஆளுநர் மாளிகை

விகடன் -அ.சையது அபுதாஹிர் :
நக்கீரன் கோபால்
நக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்தப் புகாரின் அடிப்படையில் அவர் நேற்று காலை கைது செய்யப்பட்டார். சட்டப்பிரிவு 124-ன் படி அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ஆனால், நீதிபதி கோபிநாத் நீண்ட விசாரணைக்குப் பிறகு சட்டப்பிரிவு 124-ன் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்தது தவறு, அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என்ற அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆறுமாதத்துக்கு முன்பு வெளியான நக்கீரன் இதழை அடிப்படையாக வைத்தே இந்தப் புகார் ஆளுநர் மாளிகையிலிருந்து அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஒரு பிரிவின் கீழ் மட்டும் வழக்கு போட்டதுதான் கோபால் விடுதலையானதற்குக் காரணம் என்று ஆளுநர் மாளிகை தரப்பு நினைக்கிறது. மேலும், ஆளுநர் அலுவலகத்திலிருந்து அளித்தப் புகாரில் ஒருவர் விடுதலையானது ஆளுநர் தரப்புக்கு ஷாக் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று சட்டத்துறையினருடன் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். இதே வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்ற முடிவுக்கு அப்போது வந்துள்ளார்கள். இந்தத் தகவல் நக்கீரன் கோபாலுக்குத் தெரிந்தாலும், அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் ``அவர்கள் மேல்முறையீடு செய்யட்டும். அப்போதும் நாம் வெளியே வந்துவிடுவோம்” என்று சொல்லியுள்ளார்

கருத்துகள் இல்லை: