செவ்வாய், 9 அக்டோபர், 2018

நக்கீரன் கோபால்.. ஆளுநர் மாளிகையில் நடந்த ‘ஆபரேஷன் ’! கைது பின்னணி..

டிஜிட்டல் திண்ணை: ஆளுநர் மாளிகையில் நடந்த  ‘ஆபரேஷன் ’!
.
மின்னம்பலம் :“நக்கீரன் வாரமிருமுறை பத்திரிகையின் ஆசிரியர் கோபாலை இன்று
சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தது தொடர்பான கள விவரங்கள் மின்னம்பலத்தில் வெளியாகியிருக்கிறது. இன்று காலை நடந்த கைது ஆபரேஷனின் பின்னணியை நான் சொல்கிறேன்.
தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைத் தொடர்புகொண்ட மூத்த அதிகாரி ஒருவர், அருப்புக்கோட்டை தேவாங்கர்
கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரையில் நக்கீரன் பத்திரிகையில் அது தொடர்பாக வெளியான செய்திகள், கோபால் சம்பந்தப்பட்ட முந்தைய கோப்புகளை அவசரமாகக் கேட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து தலைமைச் செயலாளர் தரப்பில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு அந்த தகவல்கள் அடங்கிய கோப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அவற்றை அப்படியே மத்திய உள்துறைக்கு ஆளுநர் மாளிகை அனுப்பி வைத்தது. அதோடு இது தொடர்பாக ஆளுநர் மாளிகை நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும் உள்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறையும் கிரீன் சிக்னல் கொடுத்தது.

இந்தநிலையில்தான் அக்டோபர் 5 ஆம் தேதி மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் ஆளுநர் மாளிகை சென்றார்கள். அப்போதும் ஆளுநர் செயலாளர் ராஜகோபாலிடம் கிரிஜா வைத்தியநாதன் ஒரு கோப்பினைக் கொடுத்தாராம். தலைமைச் செயலாளர் கொடுத்த கோப்பு என்னவென்று முதல்வருக்குத் தெரியாது என்பதுதான் வேடிக்கையானது.
ஆளுநர் மாளிகையில் முதல்வர், தலைமை செயலாளர், ஆளுநர், ஆளுநர் செயலாளர் நான்குபேரும் முக்கியமாக மூன்று விஷயங்கள் பற்றி விவாதித்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் நக்கீரன் மீது நடவடிக்கை எடுப்பது. விவாத முடிவில் முதல்வருக்கு ஆளுநர் சில உத்தரவுகளை கொடுத்தாராம். அதோடு ரெடியாக வைத்திருந்த பேப்பர் ஒன்றும் கொடுக்கப்பட்டது அந்தப் பேப்பர்தான் ஆளுநரின் துணை செயலாளர் பெயரில் கோபால் மீது கொடுக்கப்பட்ட புகார். அதாவது தலைமைச் செயலாளரிடம் நக்கீரன் பற்றிய கோப்பு வாங்கியது, அதை மத்திய உள்துறைக்கு அனுப்பியது, அதற்கு ஒப்புதல் கிடைத்தது என எதுவுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு வராமலேயே நடந்திருக்கின்றன.
முதல்வரும் ஆளுநரிடம் உறுதிகொடுத்துவிட்டு வெளியில் வரும்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைப் பார்த்து, ‘இந்தக் கோப்புக் கொடுப்பது பற்றி என்னிடம் நீங்க எதுவும் சொல்லவே இல்லையே?’என்று கோபமாக பேசிவிட்டுக் காரில் ஏறிவிட்டாராம்.
முதல்வர் கோபப்பட்டு வெளியே வந்தாலும் அவரால் இந்த விஷயத்தில் ஆளுநரின் உத்தரவை தட்ட முடியவில்லை. இதையடுத்து புகாரை ஒட்டிய பூர்வாங்க பணிகள் காவல்துறையில் சுறுசுறுப்பாக நடந்தன. புகார் டிஜிபி மூலமாகச் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்து, நேற்று அக்டோபர் 8ஆம் தேதி இரவு திருவல்லிக்கேணி டிசி செல்வநாகராஜனுக்கு அனுப்பப்பட்டது. டிசி அலுவலகத்திலிருந்து புகாரை ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக சுந்தரத்திற்கு அனுப்பினர். நேற்றிரவே கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அடையாறு டி.சி. சசன்சாய், திருவல்லிக்கேணி டி.சி. செல்வ நாகராஜன் இணைந்து அடையாறு போலீஸ் மற்றும் கிண்டி, திருவல்லிக்கேணி போலீஸ் டீம்கள் தயாராக வைக்கப்பட்டன. என்ன ஆபரேஷன் என்று போலீஸ் டீமுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். இதற்கிடையே 7ஆம் தேதி முதலே ஒரு டீம் கோபாலை கண்காணித்து வந்தார்கள். அதன்படி இன்று அக்டோபர் 9ஆம் தேதி சென்னை விமானநிலையத்துக்கு வருகிறார் என்ற தகவல்களை உறுதிசெய்துகொண்டு மீனம்பாக்கம் ஏசி விஜயக்குமார் தலைமையில் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தார்கள்” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதைப் படித்து ப்ளூ டிக் வருவதற்குள் ஃபேஸ்புக் இன்னொரு மெசேஜை டைப்பிங் செய்தது.
“விமான நிலையத்துக்குள் தமிழக போலீசார் சென்று விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி அதன் பின் கோபாலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு அதிகாரி நேரடியாகப் போய் சார் வணக்கம் என்று சொல்ல, கோபாலும் தனக்கே உரித்தான முறையில் எதார்த்தமாக அண்ணே காலை வணக்கம் என்று சொல்லியுள்ளார் சூழ்நிலை தெரியாமல். ’சார் ஒரு விசாரணை ஸ்டேஷனுக்கு போயிட்டு போகலாம்’ என்று அதிகாரி சொல்ல இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பின்னர்தான் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம், எழும்பூர் நீதிமன்றம் என்று காட்சிகள் அரங்கேறின. எழும்பூர் நீதிமன்றம் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்துவிட்டதால் அடுத்து வேறு எந்த வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனைகள் சீரியசாக நடந்து வருகிறதாம்”

கருத்துகள் இல்லை: