சனி, 13 அக்டோபர், 2018

வைகோ :சிபிஐ விசாரணைக்குள்ளான பழனிசாமிக்கு முதல்வர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை... திமுக கேவியட் மனு தாக்கல் ..




tamilthehindu : தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்கிறேன்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் முதல்வருக்கு நற்சான்று அளித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் வருமான வரித்துறையினர் தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் நாகராஜன், செய்யாதுரை ஆகியோர்கள் தொடர்புடைய எஸ்பிகே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்பிகே ஹோட்டல்ஸ், எஸ்பிகே அண்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தினர்.

இந்தச் சோதனைகளில் ரூ.180 கோடி பணமும், 105 கிலோவுக்கும் அதிகமான தங்கமும் பிடிபட்டன என்று செய்திகள் வெளிவந்தன.
எஸ்பிகே குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் நாகராஜன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம் நடத்தி வரும் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணி, மதுரை வட்டச்சாலைப் பணி, வண்டலூர் - வாலாஜா நான்கு வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளின் ஒப்பந்தங்களும் முதல்வரின் உறவினர் பி.சுப்பிரமணியம் தொடர்புடைய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையின் மூவாயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்புடைய ஒப்பந்தப் பணிகள் முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் விதிமுறைகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்திய திமுக தான் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, துறைதோறும் தொட்டதெல்லாம் ஊழல், ஊழல், ஊழல் என்று ஊழல் சேற்றில் மூழ்கிக் கிடக்கின்றது.
உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி :முதல்வருக்கு எதிரான முறைகேடு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 முதலமைச்சருக்கு எதிரான முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் எனவும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: