புதன், 10 அக்டோபர், 2018

இன்டெர் போல் போலீஸ் தலைவர் சீனாவில் கைது செய்யப்பட்டது உறுதி

சர்வதேச போலீஸ் அமைப்பு தலைவர் ராஜினாமா - சீனாவில் கைது செய்யப்பட்டது உறுதிதினத்தந்தி : காணமல் போனதாக  கூறப்பட்ட சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் சீனாவில் கைது செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.
பீஜிங், சர்வதேச போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) தலைவர் மெங் ஹோங்வெய், தனது சொந்த நாடான சீனாவுக்கு சென்றபோது திடீரென மாயமானார். அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் இதுபற்றி சீனா கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், மெங் ஹோங்வெய் கைது செய்யப்பட்டதை சீனா தற்போது உறுதிபடுத்தி உள்ளது. சீனாவின் பொது பாதுகாப்பு துறையின் துணை மந்திரியாகவும் பதவி வகித்து வரும் மெங் ஹோங்வெய், சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பொதுத்துறை ஊழியர்கள் ஊழல் உள்பட அனைத்து ஊழல் விவகாரங்களை கவனித்து வரும் சீனாவின் தேசிய மேற்பார்வைக் குழு ஹோங்வெயிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சீனாவில் கைது செய்யப்பட்ட மெங் ஹோங்வெய், தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளார். இதை சர்வதேச போலீஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது.

அதனை தொடர்ந்து தென் கொரியாவை சேர்ந்த மூத்த துணைத்தலைவர் கிம் ஜாங் யாங் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த மாதம் துபாயில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா மெங்கை பிடித்து வைத்திருப்பது குறித்து உறுதிப்படுத்துவதற்கு சற்று முன்னதாக பத்திரிகையாளர்களிடம் பேசிய மெங்கின் மனைவி கிரேஸ் மெங், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேச போலீஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வெய், லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டுவிட்டார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: