
அருந்ததி ராய் புதிதாக எழுதிய The Ministry of Utmost Happiness என்ற நாவல் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தத் தலைப்பைத் தழுவி ‘உச்சநிலை மகிழ்ச்சியும் உச்சநிலைத் துயரமும்: இன்றைய இந்தியாவின் நாட்குறிப்பு’ (Utmost Happiness and Utmost Sadness: Diary of India Nowadays) என்ற தலைப்பில் லண்டன் நகரில் அக்டோபர் 6 அன்று நடைபெற்ற ஒரு உரையரங்கில் பேசிய அவர், “நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிற காலகட்டத்தை, போலிச் செய்திகள் வரலாறாக்கப்படும் காலம் என்று சொல்லலாம். கல்வியும் வரலாறும் ஒருவகையில் இந்துமயமாக்கப்படுகிற,
கார்ப்பரேட்மயமாக்கப்படுகிற காலகட்டம் இது,” என்றார். லண்டனில் உள்ள கீழைத்தேயம் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான தெற்கு ஆசிய கல்வியகத்தில் இந்த உரை நிகழ்ச்சி நடைபெற்றது. நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை (NIKMT) அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
“என்னைப் பொறுத்தமட்டில், மிகவும் அபாயகரமானதாக எதை நினைக்கிறேன் என்றால், இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே அவர்களுக்குள் என்ன புகுத்தப்படுகிறது என்பதுதான். அது அந்த அளவுக்குத் திரிக்கப்பட்டதாக இருக்கிறது,” என்றார் அவர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் இரண்டு முன்னணித் தலைவர்களான மகாத்மா காந்தி, பாபா சாஹேப் அம்பேத்கர் இடையே நடைபெற்ற உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், 1980களில் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ திரைப்படத்தின் தொடக்கத்தில் “புனைவுக் கதை” என்று போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்றார். “ஏனென்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தின் சிக்கலான கூறுகளைப் பதிவு செய்யத் தவறிய படம் அது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடந்த விவாதம் உங்களுக்கு விடுதலைப் போராட்டத்தின் அந்தச் சிக்கல்கள் என்ன என்பதைக் கூறும். அம்பேத்கரைப் பொறுத்தவரையில் இந்து ஆதிக்கம் என்பது ஒரு வகையான காலனியாதிக்கம்தான். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை விடவும் பல வழிகளில் பயங்கரமானதாக இந்து காலானியாதிக்கத்தைக் கருதினார் அம்பேத்கர். நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்குகிற முயற்சி அதன் காலப் பரிமாணத்தில் சமுதாயத்தை விடவும் வெகு தொலைவு முன்னேறிச் சென்றதாக இருக்க வேண்டும் என்று கருதினார் அம்பேத்கர். அதை மக்களிடம் விட்டுவிட அவர் விரும்பவில்லை. ஏனென்றால், அநீதிகள் இழைக்கப்படுவதைக் கண்டுபிடிக்கத் தென்னாப்பிரிக்கா வரை சென்றாக வேண்டிய தேவை ஏற்படாத மனிதர் அவர்,” என்றார் அருந்ததி ராய்.
உரையைத் தொடர்ந்து நடைபெற்ற உரையாடல் அமர்வில், அருந்ததி ராய், ஆவணப்பட இயக்குநரான தில்லியின் ஜமியா மிலியா பல்கலைக்கழக வெகுமக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர் ஷோஹினி கோஷ் இருவரும் பங்கேற்றனர். அப்போது புனைவிலக்கியத்திற்கும் புனைவல்லாத எழுத்துக்கும் இடையே அங்கும் இங்குமாகத் தான் பயணித்துவருவது பற்றியும், தனது களச் செயல்பாடுகளுக்கும் எழுத்தாக்கத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றியும் பகிர்ந்துகொண்டார் அருந்ததி.
“எனது மரபணுவிலேயே நான் ஒரு புனைவு எழுத்தாளர்தான். ஆனால் புனைவும் மெய்நிகழ்வும் இரு வேறு துருவங்கள் என ஏன் மக்கள் கருதுகிறார்கள் என்பது எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. இரண்டும் இரு துருவங்கள் என்பது உண்மையல்ல. புனைவுதான் உண்மை. குறிப்பாக, இன்றைய போலிச் செய்தி யுகத்தில் புனைவைவிடவும் உண்மையானது வேறில்லை என்பேன் நான்.”
தனது ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ (The God of Small Things) என்ற புனைவு நூலுக்காக 1997இல் புக்கர் விருது பெற்றவரும், ‘மாபெரும் பொது நன்மை’ (The Greatest Common Good) உள்ளிட்ட பல கூர்மையான அரசியல் கட்டுரைகளை எழுதியவருமான அருந்ததி ராய், “எனது அ-புனைவு ஆக்கங்கள் ஒருபோதும் திட்டமிட்டு எழுதப்பட்டவையல்ல. அந்த எழுத்துகள் பெருமளவுக்கு, நிகழ்வுகளை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பதற்கு விடுக்கப்படும் வேண்டுகோள்கள்தான் எனலாம்,” என்றார்.
“என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பேரண்டத்தைக் கட்டுகிற வேலைதான் புனைவெழுத்து. என்னால் முடியும் என்று நான் கற்பனை செய்யக்கூடிய மிக அழகான வேலை அது. இன்றைய நாட்களில், உலகம் மிகக் கடுமையானதாக, பெரிதும் இறுக்கமானதாக, வன்மம் நிறைந்ததாக, முணகல் மிக்கதாக மாறிக்கொண்டிருக்கிறது.
“புனைவெழுத்து உங்களின் குறும்புத்தனத்தை அனுமதிக்கிறது, நீங்கள் கட்டற்று இருப்பதை ஏற்கிறது, ஏதோவொரு வகையில் நம்மிடமிருந்து பறிபோய்க்கொண்டிருக்கிற தன்னாளுமைத் திறனை வழங்குகிறது,” என்றார் மனித உரிமைப் போராளியுமான அருந்ததி ராய்.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/india/we-are-living-through-history-as-fake-news-education-being-corporatised-arundhati-roy-5392579/
தமிழில்: அ.குமரேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக