வெள்ளி, 1 ஜூன், 2018

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது
மாலைமலர் : சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.


மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் இதுதொடர்பாக மத்திய அரசிதழ் துறைக்கு பரிந்துரை மின்னஞ்சல் கடிதம் அனுப்பியுள்ளது.

இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் இன்று மாலை வெளியிடப்பட்டது.

காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: