செவ்வாய், 29 மே, 2018

ஸ்டெர்லைட் : மூடுவிழா என்ற நாடகம்

ஸ்டெர்லைட் : மூடுவிழா என்ற நாடகம்மின்னம்பலம்: ரவிக்குமார்
தமிழ்நாட்டில் அரசியலை சினிமா நகல் செய்கிறதா அல்லது சினிமாவை அரசியல் நகல் செய்கிறதா என்று பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மாவட்ட ஆட்சியர் மூடி சீல் வைக்கும் காட்சியும் அதே நேரத்தில் முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது நாம் பார்ப்பது ஒரு சினிமாவா என்ற சந்தேகம்தான் எழுந்தது.
ஆதாரமில்லாத அரசாணை
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அரசாணை ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது ( G.O.(Ms) No 72 dated 28.05.2018 ) அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இன்று அந்த ஆலையைப் பூட்டி சீல்வைத்திருக்கிறார். மக்களின் உணர்வுகளை மதித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை நாம் வரவேற்கலாம். ஆனால், இது தற்காலிகமான ஒரு தீர்வுதானே தவிர நிரந்தரமானதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 48 A அளித்திருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. “ நாட்டின் வனம் மற்றும் வன உயிரிகளைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தவுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்” என அரசியலமைப்புச் சட்டத்தின் அந்த உறுப்பில் கூறப்பட்டுள்ளது. 1974 ஆம் வருடத்தைய தண்ணீர் ( மாசுபடுவதைத் தடுக்கும்) சட்டத்தின் பிரிவு 18(1)(b)ன் அடிப்படையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆலையை மூடுவதற்காக மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டிருக்கும் உத்தரவை தமிழக அரசு வழிமொழிவதாக இரண்டாவது காரணம் கூறப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதற்குக் கூறப்பட்டுள்ள காரணங்கள் பலவீனமாக இருக்கின்றன. இந்த அரசாணை நீதிமன்ற சீராய்வுக்குத் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால், எந்த மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவைத் தமிழக அரசு வழிமொழிந்திருக்கிறதோ அதுவே பலவீனமான ஒன்றாகும். மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்படி பலவீனமான காரணங்களைக் கூறுவதே ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு வசதி செய்வதற்காகத்தானோ என்று நாம் சந்தேகிக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் ஸ்டெர்லைட்டை மூடும்படி 2010ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அப்படித்தான் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 28.09.2010 அன்று தீர்ப்பளித்தபோது அதற்கான நான்கு காரணங்களைக் கூறியிருந்தது :
1) 1995ல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதியளித்தபோது அந்த ஆலை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடாவின் தீவுகளிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கவேண்டும் எனக் கூறியிருந்தது. 1998ல் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ’நீரி’ அறிக்கையில் ’மன்னார் வளைகுடா தேசிய கடல் பூங்கா’ வில் இடம்பெற்றுள்ள 21 தீவுகளில் வான்தீவு, காசுவார் தீவு , காரைச்சல்லி தீவு , விலங்குசல்லி தீவு ஆகிய தீவுகளிலிருந்து தலா 6 கி.மீ;7,கி.மீ;15கி.மீ தொலைவில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைக்கு எதிரானது.
2) பொதுமக்களின் கருத்தறியும் கூட்டம் நடத்தாமல் இந்த ஆலையைத் துவக்கியது தவறு.
3) ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்கு மரங்கள் கொண்ட ‘பசுமைப் போர்வை’ உருவாக்கப்படவேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருந்த நிபந்தனை பின்பற்றப்படவில்லை.
4) 2005 ஆம் வருடத்தைய ‘நீரி’ அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் ‘சாம்பிள்களில்’ இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாட்டு அளவுக்கு அதிகமாக தாமிரம், காரியம்,குரோமியம்,காட்மியம்,ஃப்ளூரைடு, குளோரைடு ஆகியவற்றின் அளவு மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நான்கு காரணங்களின் அடிப்படையிலேயே ஆலையை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் வினோதமான தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி 28.09.2010ல் உத்தரவிட்டது.அந்த உத்தரவுக்கு இரண்டே நாட்களில் உச்சநீதிமன்றம் 01.10.2010 அன்று இடைக்கால தடை விதித்தது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் சொன்ன விளக்கங்களையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு 02.04.2013 அன்று அது ஆலையைத் தொடர்ந்து நடத்தலாமெனத் தீர்ப்பளித்தது.
மன்னார் தேசிய கடல் பூங்கா அமைப்பதற்கான விருப்பத்தை மட்டுமே தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அதற்கான அறிவிக்கை எதையும் வெளியிடவில்லை. எனவே தேசிய கடல் பூங்காவிலிருந்து 25 கி.மீ.தூரத்திற்குள் ஆலை அமைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பொருந்தாது. அது மட்டுமின்றி தமிழக அர்சின் சார்பில் 14.10.1996ல் அளிக்கப்பட்ட ஒப்புதல் உத்தரவில் இந்த நிபந்தனை நீக்கப்பட்டு கழிவுகளை மறு சுழற்சி செய்துகொள்ளவேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டது என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுட்டிக்காட்டியது. பொது விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற நிபந்தனை ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் நடைமுறையில் இல்லை. எனவே அதுவும் தமக்குப் பொருந்தாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறியது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கும்போது ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைப் போர்வை உருவாக்கப்படவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அப்படி அமைப்பதற்கு 150 ஏக்கர் நிலம் கூடுதலாகத் தேவைப்படும் எனவே அந்த அளவைத் தளர்த்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த கோரிக்கை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்கப்பட்டு 250 மீட்டர் என்பது 25 மீட்டராகக் குறைக்கப்பட்டது. பொதுவாக, ஆலை அமைந்திருக்கும் பரப்பில் 25% மட்டுமே பசுமைப் போரவை வேண்டுமென நிபந்தனை விதிக்கப்படும், தங்களுக்கு மட்டும்தான் 25 மீட்டர் என நிபந்தனை போடப்பட்டிருக்கிறது என ஆலை நிர்வாகம் சொன்னதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
காற்று மற்றும் தண்ணீரில் கலந்திருக்கும் மாசு பற்றிய குற்றச்சாட்டை ஆராய தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியமும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஆலையில் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். ஏதேனும், விதிமீறல்கள் இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அப்படி ஆய்வு மேற்கொண்டபிறகு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த 30 நிபந்தனைகளில் 29 நிபந்தனைகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 1 நிபந்தனையும் 15 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1997 முதல் 2012 வரை லைசென்ஸை புதுப்பிக்காமல் ஆலையை சட்டவிரோதமாக இயக்கியது, சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்களுக்காக 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் நிர்வாகம் 100 கோடி ரூபாயை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் ஐந்து ஆண்டுகளுக்கு ‘டெபாசிட்’ செய்யவேண்டும். அந்தத் தொகையைக் கொண்டு அந்த பகுதியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
” ஸ்டெர்லைட் நிர்வாகம் உண்மைகளை மறைத்து பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதில் அவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்காவிட்டால் ஆலையை மூடவேண்டிய நிலை உருவாகும். அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் தாமிரம் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அங்கு 1300 ஊழியர்கள் வேலை செய்கின்றார். ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் பலர் வேலை செய்கிறார்கள். மத்திய மாநில அரசுகளுக்குக் கணிசமான வரி வருவாயும் கிடைக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்படும் மொத்த சரக்கில் இந்த ஆலை 10% வகிக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 136 இந்த நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கும் விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் தவறான தகவல்களைத் தந்த குற்றத்தை மன்னிக்கிறோம்” என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கும்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எவ்வளவு பலவீனமான வாதங்களை முன்வைத்துள்ளது என்பது தெரிய வருகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்ல மறந்த காரணங்கள் :
உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல இப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக அது 23.05.2018 அன்று பிறப்பித்துள்ள உத்தரவிலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சரியான காரணங்களைக் கூறவில்லை. எனவே, அதை வழிமொழிந்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அரசாணை நீதிமன்றத்தின் முன்னால் தாக்குப் பிடிக்காது. அப்படியானால் அது சொல்லியிருக்கவேண்டிய சரியான காரணங்கள் எவை என்ற கேள்வி எழும். அந்தக் காரணங்களை இங்கே பார்க்கலாம்:
1. தூத்துக்குடி மாஸ்டர் பிளான் சட்டப்படி ஸ்டெர்லைட் போன்ற ஆபத்து விளைவிக்கும் ஆலைகள் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கக்கூடாது. இந்த காரணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கவேண்டும்.
2. தமக்கு 102.5 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் திடக்கழிவு சேகரிப்பு, பசுமைப் போர்வை, காற்று மாசு கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றை அமைத்திட 69 ஹெக்டேர் நிலம் கூடுதலாகப் பெற இருப்பதாகவும் ஸ்டெர்லைட் அளித்த தகவலை நம்பியே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியில் 172.17 ஹெக்டேர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டெர்லைட்டிடமிருப்பது 102.5 ஹெக்டேர் நிலம் மட்டுமே. இது ஸ்டெர்லைட் செய்துள்ள மோசடியாகும். இந்த காரணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கவேண்டும்
3. 250 மீட்டர் சுற்றளவில் பசுமைப் போரவை அமைக்கப்படவேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனையை 10ல் ஒன்றாகக் குறைத்து 25 மீட்டர் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாற்றியது. கடந்த இருபது ஆண்டுகளில் அதன் உற்பத்தி பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அது ஒப்புக்கொண்ட 25 மீட்டர் பசுமைப் போர்வையைக்கூட அது அமைக்கவில்லை. இந்த காரணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கவேண்டும்
4. உற்பத்தி அதிகரித்ததற்கேற்ப அதன் புகைக் கோபுரத்தின் உயரம் அதிகப்படுத்தப்படவேண்டும். 60 மீட்டர் என்பதிலிருந்து 123 மீட்டராக அதை உயர்த்தியிருக்கவேண்டும். அப்படி செய்யப்படவில்லை. இந்த காரணத்தையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கவேண்டும்
5. கடந்த 28.03.2018 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளேயும் வெளியிலுமாக 15 தண்ணீர் சாம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்தது. மனிதர்களின் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடியதும், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை நாசம் செய்யக்கூடியதுமான காரீயம் அபாயகரமான அளவில் தண்ணீரில் கலந்திருப்பது தெரிய வந்தது. இந்த காரணத்தையாவது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கவேண்டும்
6. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு நடந்தபோது அந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி ஒருமுறைகூட சோதனை நடத்தப்படவில்லை. இந்த காரணத்தையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூற மறந்துவிட்டது.
எதிர்க்கட்சிகள் செய்யவேண்டியது என்ன ?
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கைக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்பு 48 A-வில் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைத் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான இந்த அதிகாரம் முதலில் மாநிலப் பட்டியலில் இருந்தது. அவசர நிலைக்காலத்தின்போது இந்த அதிகாரமும் கல்வி உள்ளிட்ட நான்கு அதிகாரங்களும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டன. எனவே, வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக மாநில அரசு எடுக்கும் எந்த முடிவும் அது தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவையாகும். இப்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அறிவிக்கையோடு முரண்பட்டால் நிச்சயம் இது செல்லுபடி ஆகாது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியுள்ள தீர்ப்போடு இந்த ஆணை முரண்படுகிற காரணத்தால் இதற்கு தடையாணை பெறுவது மிகவும் எளிது. இது தமிழக அரசுக்குத் தெரியாத ஒன்றல்ல. தெரிந்தேதான் மக்களின் வாயை அடைப்பதற்காக இப்படியொரு அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதனால்தான் இதைக் கண் துடைப்பு நாடகம் என்று சொல்லவேண்டியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராடுகிற அரசியல் கட்சிகள் அத்துடன் தமது கடமை முடிந்துவிட்டது என்று எண்ணிவிடக்கூடாது.
* ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும்,
* ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு சரியான காரணங்களைப் பட்டியலிட்டு திருத்தப்பட்ட விரிவான அரசாணையை வெளியிடவும் தமிழக அரசை வலியுறுத்தவேண்டும்.
* அவசரநிலைக் காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட வனம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட நான்கு அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, கார்பரேட் நலன்களுக்குப் பணிந்து போகாத மாற்று தொழிற் கொள்கை ஒன்றை மக்கள் முன்னால் வைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: