புதன், 30 மே, 2018

மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம்: துரைமுருகன் பேச்சு நீக்கம்!.. முதல்வரை துடைப்பக்கட்டை என்று விமர்சிப்பது தவறு.

மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம்: துரைமுருகன் பேச்சு நீக்கம்!மின்னம்பலம்: திமுகவின் மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று(மே 30) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், காவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்த திமுக, அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
திமுக சட்டப் பேரவை கொறடா சக்கரபாணி சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக கூட்டணியிலிருந்து வெற்றிபெற்ற முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கருணாஸும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடி வழங்கும் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் மு.க.ஸ்டாலின்.
இந்தத் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் அபுபக்கர், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் கீதா ஜீவன், ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆஸ்டின் ஆகியோர் பேசினர்.
காவிரி விவகாரம் குறித்த சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது மு.க.ஸ்டாலின், “காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியது. எனினும், அதை அமைக்க வேண்டிய மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் கால தாமதம் செய்துவந்தது. தற்போது அதிகாரம் குறைந்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதையும், அமைக்காமல் தாமதப்படுத்திவருகிறது. ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

துரைமுருகனைக் கண்டித்த சபாநாயகர்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசும்போது, “அன்றைய முதல்வர்கள் எல்லோரும் எதிர்க்கட்சிகள் வெளியேறினாலும் வெளியேற்றப்பட்டாலும் அழைத்து வந்து சட்டப் பேரவைக் கூட்டத்தை நடத்துவார்கள். தற்போது எதிர்க்கட்சி இல்லாமல் சட்டப்பேரவையை நடத்துவது அவமானகரமானது. பாதிக்கும் மேலான எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் சபை நடத்தப்பட்டுவருகிறது. இதற்கு ஒரு சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர் வேறு. துடைப்பக்கட்டைக்கு நூல் கிடைத்த மாதிரி” என்று விமர்சித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சக்கரபாணி, “முதல்வரை துடைப்பக்கட்டை என்று விமர்சிப்பது தவறு. துடைப்பக்கட்டை என்ற வார்த்தை சபை மரபுக்கு எதிரானது என்பதால் அதனைத் திருப்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
எனினும், தான் முதல்வரைக் குறிப்பிடவில்லை துடைப்பக்கட்டையைத்தான் குறிப்பிட்டேன் என்று தெரிவித்த துரைமுருகன், “எனது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடுங்கள். அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படாத எனது பேச்சுகளே இல்லை” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: