சனி, 2 ஜூன், 2018

தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் எடுக்க அரசு அனுமதி: 3 நிறுவனங்களுக்கு உரிமம்

tamilthehindu :தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் எடுக்கவும், அதில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் 3 நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உரிமங்களை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய அளவில் தென்னை சாகுபடி பரப்பில் முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ம் இடத்திலும் தமிழகம் இருக்கிறது. அதோடு லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. தென்னை மரத்தின் மலராத தென்னம்பாளையில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்குவதற்கும், அதைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உதவும் வகையில், தமிழ்நாடு நீரா விதிகள் 2017-யை வடிவமைத்து, தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.

நீரா பானத்தில் இருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லேட், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும். இதன் தொடக்கமாக, கோவை விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு இதற்கான உரிமங்களை முதல்வர் கே.பழனிசாமி ஜூன் 1-ம் தேதி (நேற்று) வழங்கினார்.
மேலும், நீரா பானத்தை இறக்குவதற்கும், அதில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு பயிற்சி வழங்கும். அதோடு குளிர்பதன அலகுகள், பிற இயந்திரங்கள் அமைக்கவும், நீரா பானம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

கருத்துகள் இல்லை: