செவ்வாய், 29 மே, 2018

மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்! ஆய்வு முடிவுகள் - 5

மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்! ஆய்வு முடிவுகள் - 5மின்னம்பலம்:  இந்திய அளவில் பாஜகவும், பாஜகவின் ஆட்சியும் மக்களின் ஆதரவை எந்த அளவுக்குப் பெற்றிருக்கின்றன என்பதை டெல்லியைச் சேர்ந்த சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக் நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவை ABP செய்தி நிறுவனத்துக்காக நடத்திய ஆய்வு முடிவுகளின் மூலம் மின்னம்பலத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இதுவரை மோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வர முடியுமா என்பது பற்றியும், இந்துக்களில் அனைவரும் பாஜகவை ஆதரிக்கிறார்களா என்பது பற்றியும், பாஜக எதிர்கொள்ளும் அதிருப்தி அதன் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்கொள்கிறதா என்பது குறித்தும் நடந்த ஆய்வின் முடிவுகளைப் பார்த்தோம்.

இனி, இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பாஜகவுக்கும் அதன் ஆட்சிக்குமான செல்வாக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை அந்த ஆய்வு முடிவுகளின் மூலமாகப் பார்க்கலாம்.
தென்னிந்தியா
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் பாஜக இப்போது அதிக செல்வாக்கோடு இருப்பது கர்நாடகாவில்தான். கர்நாடகா மூலமாக நாங்கள் தென்னிந்தியாவில் வலிமையோடு நுழைவோம் என்று பாஜகவின் அகில இந்தியத் தலைமை சொல்லிவந்த நிலையில் கர்நாடகாவைத் தவிர பாஜக வேறு எங்கும் செழிக்கவில்லை என்பதே களம் சொல்லும் உண்மை.
இந்த ஆய்வில் ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் பாஜக எப்படி இருக்கிறது என்று அலசப்பட்டிருக்கிறது.
“ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் இந்த மாதம் (மே 2018) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பாஜகவின் பலம் என்பது 18% என்பதாக இருக்கிறது. ஆனால், லோக் நீதி ஆய்வின் இரண்டாம் கட்டம் கடந்த ஜனவரி மாதம் நடந்தபோது தென்னிந்தியாவில் பாஜகவின் பலம் 25% ஆக இருந்தது. ஆனால், ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. அதற்குக் காரணமாக அக்கட்சி பாஜக மீது வைத்த குற்றச்சாட்டுகளும் பாஜகவின் தென்னிந்திய செல்வாக்கைப் பெருமளவு குறைத்திருக்கிறது.
மேலும் இன்னொரு தகவலும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இருந்த நிலையைவிட இப்போது தெலுங்குதேசம் கட்சி சிறப்பான நிலையில் இருக்கிறது என்பதுதான் அது.
தென்னிந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு மிகவும் குறைவாக இருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணமாக இந்த ஆய்வில் குறிப்பிடப்படுவது யாதெனில், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம், தமிழகத்தில் திமுக, கேரளாவில் இடது சாரிகள் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலைபெற்றிருப்பதுதான்.
தென்னிந்தியாவில் காங்கிரஸுக்கு வாக்களிக்கலாம் என்று எண்ணுவோரின் சதவிகிதம் சற்றே அதிகரித்துக் குறைந்திருக்கிறது. 2017 மே மாதம் நடந்த முதல்கட்ட ஆய்வில் 34% செல்வாக்கு பெற்ற காங்கிரஸ், கடந்த ஜனவரி மாதம் 39% ஆக அதிகரித்தது. ஆனால், இந்த மே மாதம் மூன்றாவது ஆய்வில் காங்கிரஸ் 38% ஆக தனது செல்வாக்கில் சிறு சரிவு கண்டிருக்கிறது.
தென்னிந்தியாவில் மாநிலக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற என்ற தியரி மீண்டும் நடைமுறைக்கு வருவதாகச் சொல்கிறது லோக் நீதி ஆய்வு முடிவுகள்.
2017 மே மாதம் 33% ஆக இருந்த மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு, 2018 ஜனவரி மாதம் 36% ஆக உயர்ந்தது. இப்போது மே மாதம் அது 44% ஆக எகிறியிருக்கிறது.

வடஇந்தியா
பொதுவாகவே வடஇந்தியாவில் பாஜக வளமாக இருக்கிறது என்றொரு அபிப்ராயம் பரவலாக ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பது பாதி உண்மை. ஆனால், ஐந்து மாதங்களுக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது இன்றைக்கு பாஜகவுக்கு வடஇந்தியாவில் செல்வாக்கு குறைந்திருக்கிறது என்பது மீதி உண்மை.
லோக் நீதி ஆய்வுகள் கடந்த வருடம் மே மாதம் நடத்தப்பட்டபோது பாஜகவுக்கு வடஇந்தியாவில் 50% செல்வாக்கு நிலவியது. இரண்டாம்கட்ட ஆய்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டபோது வடஇந்தியாவில் மட்டும் பாஜகவுக்கு 45% மக்கள் ஆதரவு அளித்து கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், இந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்கட்ட ஆய்வில் அதாவது ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் பாஜகவின் செல்வாக்கு 39% மக்களிடம்தான் இருக்கிறது. பொதுப்படையான வடஇந்தியாவில் பாஜகவின் இந்தச் சரிவு 6% என்றால், வடஇந்தியாவின் ‘தலையாக’க் கருதப்படுகிற உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு கடந்த ஜனவரியை விட இந்த மே மாதத்தில் 8% குறைந்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
கடந்த மார்ச் மாதம் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒற்றுமையின் காரணமாக கோரக்பூர், புல்பூர் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்றது. இந்த இரண்டு தொகுதி மக்கள் மட்டுமல்ல, உத்தரப் பிரதேச மாநிலமே பாஜகவுக்கு எதிரான இந்தக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை ஆதரிப்பதாகச் சொல்கிறது மே மாதம் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வு. இந்தக் கூட்டணி அமைந்தால் அது பாஜகவை மிக எளிதாக எதிர்கொள்ளும் என்கிறது மூன்றாம் கட்ட ஆய்வு.
வடஇந்தியாவின் முக்கியமான மாநிலமான ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் காங்கிரஸும், பாஜகவும் ஒன்றை ஒன்று விளிம்பு நிலையில் முந்திக் கொண்டிருக்கின்றன என்ற முடிவு வந்திருக்கிறது. இந்த மாநிலம் இப்போது பாஜகவின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த விளிம்பு நிலை முன்னேற்றம் காங்கிரஸுக்கே சாதகமாக இருக்கும் என்று சொல்கிறது இந்த ஆய்வு.
வடஇந்தியாவில் காங்கிரஸின் நிலைமையும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. 2017 மே மாதம் காங்கிரஸுக்கு ஓட்டளிப்போம் என்று சொன்னவர்கள் வடஇந்தியாவில் 18% பேர். இந்த விகிதம் அதிகரித்துக் கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸை ஆதரிப்பவர்கள் 22% பேராக அதிகரித்தனர். ஆனால், காங்கிரஸ் இதை தக்கவைத்துக் கொள்ளவில்லை. இதோ இந்த மே மாதம் நடந்த மூன்றாம் கட்ட ஆய்வில் காங்கிரஸுக்கு வடஇந்தியாவில் 21% வாக்குகளே கிடைக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
அதேநேரம் காங்கிரஸ், பாஜக அல்லாத சக்திகளின் வாக்குகள் வடஇந்தியாவிலும் வளர்ந்து வருகின்றன. மே 2017 இல் 32%, ஜனவரி 2018 இல் 33% என வளர்ந்து இப்போது 2018 மே மாதத்தில் 40% ஆக இருக்கிறது காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் வடஇந்திய வாக்கு வங்கி.
ஆக தென்னிந்தியா, வடஇந்தியா இரண்டிலுமே காங்கிரஸ், பாஜக பக்கம் சாயாதவர்களை நோக்கி மக்கள் சாய்கிறார்கள் என்ற கருத்து இந்த ஆய்வு முடிவுகள் மூலம் வெளியாகியுள்ளது.
மத்திய, கிழக்கு, மேற்கு இந்தியாவில் என்ன நிலைமை? திசை தோறும் பார்ப்போம். நாளை
ஆய்வு முடிவுகள்-1
ஆய்வு முடிவுகள்-2
ஆய்வு முடிவுகள்-3
ஆய்வு முடிவுகள்-4

கருத்துகள் இல்லை: