வியாழன், 13 ஏப்ரல், 2017

ஊழல் ராணி கீதாலட்சுமி இந்திய அரசின் மருத்துவதுறை உயர் விருது பெற்றவராவர்

கீதாலட்சுமியின் மருத்துவ சேவையைப் பாராட்டி, மருத்துவத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பி.சி.ராய் விருது வழங்கியிருக்கிறது இந்திய அரசு.
 விஜயபாஸ்கர் - கீதாலட்சுமி இணைந்த பின்னணி  இதுதான்..?
வருமான வரித்துறையின் ஒரு ரெய்டு, ஓர் இடைத்தேர்தலையே நிறுத்தியிருக்கிறது. உள்குத்து அரசியல், பழிவாங்குதல், உள்நோக்கம் கொண்டதென ரெய்டுகளுக்கு பல காரணங்களை சொன்னாலும் உண்மையில் இந்த ரெய்டில் பல்வேறு உண்மைகளைக் கண்டு கலங்கிப்போயிருக்கிறது வருமான வரித்துறை வட்டாரங்கள். சாதாரண ரெய்டுகளைப் போல இதுவும் கடந்து விடும், சில வாரங்கள், மாதங்கள் தாண்டி இந்த ரெய்டும் இதன் பின்னணியில் நடந்த சம்பவங்களும் நீர்த்துப் போய்விடுமென்று நம்பிய நேர்மையான அதிகாரிகளை புரட்டிப் போட்டிருக்கிறது ஒரு கடிதம். ஆம்... ஏப்ரல் 11இல், வருமான வரித்துறைக்கு வந்த ஒரு ரகசிய கடிதம், தமிழக மருத்துவத்துறையில் நடந்த ஊழல்களையும் விஜயபாஸ்கருக்கும் கீதாலட்சுமிக்கும் இடையே நடந்த பல்வேறு பரிமாற்றங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மக்களை நேசிக்கும் நேர்மையான மருத்துவர்கள் யாரோ அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமிக்குமிருக்கும் உறவு குறித்து பத்துப் பக்கங்களுக்கு மேலாக இருக்கும் கடிதம் ஒன்றை வருமான வரித்துறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதம்தான் வருமான வரித்துறையின் இப்போதைய துருப்பு சீட்டு...
இதுகுறித்து நம்மிடம் பேசினார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், “தமிழக அரசிலுள்ள அனைத்துத்துறைகளில் நடக்கும் ஊழல்களைவிட மருத்துவத்துறையில்தான் அதிக ஊழல்கள் நடந்துள்ளது. குறிப்பாக விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்த ஊழல்களின் பட்டியல் இதுதான் என்று ஒரு பட்டியல் இருந்தது. அதில் தமிழகத்திலுள்ள அரசு மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகளில் தினசரி பயன்படுத்தும் மருந்துகள், மாத்திரைகள் என்ன? அதை கொள்முதல் செய்து வாங்கும் கமிஷன் தொகைகள், அடுத்ததாக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் மிகப் பெரிய பட்டியல், அதில் நூற்றுக்கணக்கான கோடிகள், பிறகு முதல்வர் காப்பீடுத் திட்டத்தில் தமிழக அரசு அறிவித்த தொகையை அப்படியே இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கமிஷன் முறையில் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் செய்யாத ஆபரேஷனுக்குப் போலியான பில்கள் என அதில் மட்டும் சில நூறு கோடிகள் என நீள்கிறது அந்தப் பட்டியல். அடுத்ததாகத் தனியார் மருத்துவமனைகளில் நடந்த பெரும் ஊழல் என்று உடலுறுப்பு தானம் திட்டத்தை குறிப்பிட்டு இருந்தனர். அதில் இலவசமாக வாங்கும் இதயம், கண்கள், கல்லீரல் என பல்வேறு உறுப்புகளை லட்சக்கணக்கில் விற்கும் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தவர், இந்த ஊழல்களைக் கண்டு கொள்ளலாமலிருக்க மாதந்தோறும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செல்லும் தொகைகள் என்று கோடிகளில் ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அடுத்து சாதாரண மருத்துவராக இருந்த கீதாலட்சுமி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்தபோது மாணவர்களிடம் லஞ்சமாக முதலில் வாங்கியது நல்லி சில்க்ஸ், ராஜ்மஹால் ஜவுளிக்கடைகளில் விற்கும் பட்டுப்புடவைகள்தான். மாணவர்களை வைவா, ஹவுஸ் சர்ஜன் போன்ற பிரிவுகளில் பாஸ் போட அப்போதே லஞ்சமாக பட்டுப்புடவைகளை வாங்கிக்கொண்டு இருந்தார். பின்பு ஒரு முக்கியமானவரின் அறிமுகம் கிடைத்து அரசியல் வட்டத்தில் அவர் மூலம் நட்பு வளர்த்தவர், அமைச்சர் மூலம் மருத்துவக் கல்வி இயக்குநராகப் பதவியில் வந்து அமர்ந்தவர், ஒரு மருத்துவருக்குப் பணி மாறுதலுக்கு பத்து லட்சம் கமிஷன் வாங்கினார். அவரது காலத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவப்பணி மாறுதல்கள் போடப்பட்டன. தவிர மருத்துவத்துறையில் நடந்த பல்வேறு பணி நியமனத்தில் எல்லாமே பணம், பணம்தான். இவரிடமிருந்துதான் அமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பணம் செல்லும். இதற்காக மருத்துவர்களின் சங்கத்தைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மதுரைக்கார மருத்துவர் ஒருவர், விழுப்புரம் மருத்துவர் ஒருவர் என மூன்று நபர்கள்தான் அமைச்சருக்கும், கீதாலட்சுமிக்கும் இடைத்தரகர்கள் என்று அந்த மூன்று மருத்துவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். அந்த இடைத்தரகர்களின் சொத்துகளே நூறு கோடிகளைத் தாண்டி இருக்கிறது. அவர்களின் சொத்து விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டவர் மீண்டும் கீதாலட்சுமியின் விஷயத்துக்கு வந்தார் அந்த அதிகாரி.
“கீதாலட்சுமி மருத்துவக்கல்லூரி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றதும் இனியாவது மருத்துவத்துறை நிம்மதியாக இருக்குமென்று நம்பிய நிம்மதியடைந்த அடுத்த நாளே அவருக்கு, அடுத்த பதவியாக மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கொடுத்தார்கள். அங்குச் சென்றவர் எம்.எஸ்., எம்.டி. படிக்கும் மாணவர்களுக்கு பாஸ் போட வேண்டுமென்று பிஜி படிக்கும் மாணவர்களிடம் தலை ஒன்றுக்கு சிலரிடம் இருபது லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். தனியார் மருத்துவக்கல்லூரிகளின் பல்வேறு கோப்புகளில் கையெழுத்துப்போட லட்சக்கணக்கில் லஞ்சம் என வாங்கிக் குவித்துக்கொண்டிருந்த ஒருவரைத்தான் சரியான நேரத்தில் வருமான வரித்துறை சோதனை செய்திருக்கிறது. விசாரணைக்கு அழைத்தால் வராமல் நீதிமன்றம் சென்று அங்கும் யாருக்காவது பணத்தை கொடுத்து தப்பிக்க பார்க்கிறார். இவர் சம்பாதித்த சொத்துகளை பல்வேறு இடங்களில் நிலம், எஸ்டேட், தங்கம், வெளிநாடுகளில் ஹோட்டல் என முதலீடு செய்துள்ளார். பட்டுச்சேலையில் ஆரம்பித்த அவரது லஞ்சப் பயணம் எங்கும் நிற்காமல் துணைவேந்தர் பதவி வரை வந்திருக்கிறது. அப்பாவி மக்களின் ரத்தங்களையும், எண்ணற்ற அரசு ஊழியர்களின் வியர்வைகளையும் உறிஞ்சியதால் விஜயபாஸ்கருக்கும், கீதாலட்சுமிக்கும் கடவுள் சரியான நேரத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆகையால் இதை வைத்து நீங்கள் புலன் விசாரணை செய்தால் இவர்களுடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் சிக்குவார்கள். இந்தக் கடிதத்தை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று முடிந்தது அந்தக் கடிதம்” என்றார் அந்த அதிகாரி.
பொதுவாக இதுபோல ரெய்டுகளின்போது அலுவலகத்துக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வருவதுண்டு. ஆனால் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் பார்த்தபோது ஆடிப்போயிருக்கிறது வருமான வரித்துறை அலுவலகமே. இதை வைத்தே அவரிடம் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
கீதாலட்சுமியின் மருத்துவ சேவையைப் பாராட்டி, மருத்துவத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பி.சி.ராய் விருது வழங்கியிருக்கிறது இந்திய அரசு.
- சண்.சரவணக்குமார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: