புதன், 12 ஏப்ரல், 2017

பெப்சி கோக் தடை நீக்கப்பட மாட்டாது!


பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!தமிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.
இது ஒன்று போதாதா? உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.
இது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.
”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த்து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.
அடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான்! அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் ! இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.
பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!  வினவு

கருத்துகள் இல்லை: