வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து :அதே RSS ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் ! கூட்டு களவாணிகள்!

சகாரா-பிர்லா பேப்பர்ஸுக்கும் விஜயபாஸ்கர் பேப்பர்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அது மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்குக் கொடுத்ததாக முதலாளி எழுதிய கணக்கு. இது மக்களுக்கு கொடுத்ததாக மந்திரி எழுதிய கணக்கு.
ஆர்.கே. நகர் தேர்தலைத் தள்ளி வைப்பதற்காகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில் காணப்படும் முத்தான வரிகள் கீழ்வருமாறு:
  • “வாக்காளர்களைக் கவர்வதற்குப் பணமும் பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டிருப்பதால் சூழல் நஞ்சாகிவிட்டது. காலப்போக்கில் இந்த நச்சுச் சூழல் மாறி, சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்படும்போது, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும்.”
  • “வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்டங்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.”
  • “கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகள், தவறு செய்யும் தங்களது வேட்பாளர்கள் மீது தார்மீக செல்வாக்கையும் அதிகாரத்தையும் செலுத்தி,  அவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.”

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனை.
கண்காணிப்புக் கேமராக்கள், பறக்கும் படைகள், துணை ராணுவம், தொகுதி தேர்தல் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் இடமாற்றம், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 6 பார்வையாளர்கள்… என்று உடம்பு முழுவதும் ஆயுதம் தரித்திருந்த தேர்தல் ஆணையம் விட்டிருக்கும் அறிக்கை இது.
ஆர்.கே. நகரை தினகரன் தடுத்தாட்கொண்ட கதையைக் கிண்டலாக எழுதுகின்றன ஊடகங்கள். ஜெயலலிதா போட்டியிட்ட கடந்த இரண்டு தேர்தல்களில் எந்தெந்த திருமண மண்டபங்களில் ஆட்களைத் தங்கவைத்தார்களோ, அதே மண்டபங்கள், அதே பணப்பட்டுவாடா, அதே ஆம்பூர் பிரியாணி என்று எழுதுகின்றன. அதே பிரியாணி மாஸ்டர், அதே தேர்தல் ஆணையம் என்று சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
“தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் கைப்பாவை” என்று சொல்லித்தான் அன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிறகு பொதுத்தேர்தலின்போது ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் ஜெயலலதாவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையம்தான், தற்போது சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த முயன்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கரூர் அன்புநாதன் வீட்டில் நடந்த சோதனை. (உள்படம்) அன்புநாதன். (கோப்புப் படம்)
ஏற்கெனவே நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகள், மோடியின் கருப்புபண ஒழிப்பு நாடகத்தை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்டவை. தற்போது நடத்தப்படுபவை தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்த பிரமையைத் தோற்றுவிப்பதற்கானவை. இவை இரண்டுக்கும் பின்னால், அ.தி.மு.க. கோஷ்டிகளுடன் பா.ஜ.க. நடத்திவரும் திரைமறைவு பேரங்களும் இருக்கின்றன. இந்த ரெய்டுகள் எவ்வளவு “பயங்கரமானவை” என்று அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், சேகர் ரெட்டி சிறையிலிருந்து மாப்பிள்ளை போல மினுமினு என்று நீதிமன்றத்துக்கு வந்து போகும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கவும்.
சென்ற பொதுத்தேர்தலின் போது பிடிபட்ட “ஆம்புலன்ஸ் அன்புநாதன்” மீதான வழக்குகள் என்ன ஆயின? ஜெயலலிதாவின் கன்டெயினர் விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் என்ன? அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை என்ன? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
எடப்பாடி முதல்வராகிவிட்டார். ராம மோகனராவ் பா.ஜ.க. அரசின் ஆசியுடன் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு விட்டார். நத்தம் ஓ.பி.எஸ். அணியில் இணைந்து நல்லவராகிவிட்டார். சேகர் ரெட்டியின் சகபாடி பன்னீர்தான் பா.ஜ.க. அமைத்திருக்கும் பாண்டவர் அணியின் தருமர். தினகரன் அணியைச் சேர்ந்த கௌரவர்கள் பன்னீர் பக்கம் தாவிவிட்டால் – இதுவும் ஒரு “கர் வாப்ஸி” தான் – அனைவரும் பாண்டவர்களாக கருதப்படுவார்கள் என்பது புதிய கீதை. இந்த பாரத யுத்தத்தின் கிருஷ்ண பரமாத்மா பாரதிய ஜனதாக் கட்சி. அன்று ஜெயலலிதாவுக்கு சோ என்றால், இன்று பன்னீருக்கு குருமூர்த்தி. மோடி அரசு நடத்தும் இந்த அசிங்கம் பிடித்த நாடகத்தை ஊழல் ஒழிப்பு தர்ம யுத்தமாகச் சிங்காரித்துக் காட்டுவதற்கு முன்னாள் அதிகாரிகள், நடுநிலையாளர்கள் எனப்படுவோர் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர்.

அமலாக்கத்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியுடன், பா.ஜ.க.வால் முட்டுக் கொடுக்கப்படும் உத்தமர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)
பணம் கொடுத்தவர்களைத் தண்டித்த பிறகுதான் தேர்தல் நடத்தவேண்டுமாம். இது முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் அறச்சீற்றம். ஆணையத்தின் அறிக்கையோ “தகுதி நீக்கம் செய்ய சட்டமே இல்லை” என்கிறது. சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி, அப்புறம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, குமாரசாமிகள், தத்துக்களைத் தாண்டி குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அப்புறமல்லவா தண்டனை! நமக்கு தெரிந்த இந்த உண்மை முன்னாள் ஆணையருக்குத் தெரியாதா? இருந்த போதிலும் புருவத்தை நெரித்துக்கொண்டு, நெற்றி நாமம் நெளிய காமெராவுக்கு முன்னால் பொளந்து கட்டுகிறாரே கோபாலஸ்வாமி, சும்மா சொல்லக்கூடாது, மேன்மக்கள் மேன்மக்கள்தான்.
பணம், பரிசு, சாதி-மதவெறி, கள்ள ஓட்டு உள்ளிட்ட எதுவும் இல்லாத சுதந்திரமான, நியாயமான தேர்தல் இந்த நாட்டில் எந்தக் காலத்தில் நடந்திருக்கிறது?  எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது? ஆனால், அப்படி ஒரு பிரமையை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் டி.என்.சேஷன் உருவாக்கினார். (சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து பெரியவாள் ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை விடுவிப்பதற்காக, சட்டையைக் கழற்றி வீசிவிட்டு களத்தில் நின்றாரே, அந்த நேர்மையாளர் சேஷனேதான்.)
விளம்பரச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, சுவருக்கு வெள்ளையடிப்பது என்பன போன்ற கெடுபிடி காமெடிகள் அப்போதிருந்துதான் அரங்கேறத் தொடங்கின. மக்களின் கருத்துரிமையையும் எளிய வேட்பாளர்களின் பிரச்சார உரிமையையும் பறிப்பதற்குத்தான் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் பயன்பட்டன. அதே நேரத்தில், இந்த 25 ஆண்டுகளில் தான் தேர்தல்களில் பணம், சாதி, மதவெறி என்பது அதுவரை இல்லாத உச்சத்தை எட்டின.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நேர்மையான தேர்தல் பிம்பத்தை உருவாக்க முயன்ற டி.என்.சேஷன்
கார்ப்பரேட் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதிகார வர்க்கமும் ஓட்டுக்கட்சிகளும் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளைத் தனியார்மயம் எந்த அளவுக்கு உருவாக்கித் தந்ததோ அந்த அளவுக்கு, கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் எந்த அளவுக்கு இல்லாமல் போயினவோ அந்த அளவுக்கு, கட்சிப் பிரமுகர்கள் முதலாளிகளாகவும், முதலாளிகள் கட்சிப்பிரமுகர்களாகவும் உருமாற்றம் பெறுவது எவ்வளவு நிகழ்ந்ததோ அந்த அளவுக்கு, கட்சிப் பதவிகள் தந்தை வழி சொத்துரிமையாக எந்த அளவுக்கு குடும்பத்துக்குள் கைமாற்றி விடப்பட்டதோ அந்த அளவுக்கு, மக்கள் நல அரசு என்ற வாய்ப்பேச்சும் கூட அற்றுப்போய், மக்களுக்கு பதில் சொல்லும் கடப்பாட்டிலிருந்து எந்த அளவுக்கு அரசு வழுவியதோ அந்த அளவுக்கு – பணம், சாதி, மதம் ஆகியவற்றின் பாத்திரம் அதிகரித்தது.
“கரூரிலும் அரவக்குறிச்சியிலும் தேர்தலை ரத்து செய்தீர்களே, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டபோது பணம் தரப்படவில்லையா? பணம் விளையாடுகிறது என்று கூறி இடைத்தேர்தலை ரத்து செய்யும் ஆணையம், இதே காரணத்துக்காக பொதுத்தேர்தலையும் ரத்து செய்யுமா?” என்பன போன்ற கேள்விகளை கட்சிக்காரர்களே எழுப்புகிறார்கள். ஆனால், இந்த அரசமைப்புக்குள்ளே தீர்வு தேடும் யாரிடமும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.

தேர்தலை ரத்து செய்த ஆணையத்திடம் “இழப்பீடு” கேட்கிறார் ஜி.இராமகிருஷ்ணன்
தேர்தல் நடக்கும் என்று “நம்பி” பிரச்சாரத்துக்கு செலவு செய்து விட்டதாம் மார்க்சிஸ்டு கட்சி. தேர்தலை ரத்து செய்த ஆணையத்திடம் “இழப்பீடு” கேட்கிறார் ஜி.இராமகிருஷ்ணன். நியாயம்தான். இது ஜனநாயகம்தான் என்று இத்தனை காலம் மக்களை நம்ப வைத்திருக்கிறார்களே, அதன் பொருட்டு இவர்களும் மக்களுக்கு இழப்பீடு தரவேண்டியிருக்கும்.
வாக்குக்குப் பணம் கொடுத்த காரணத்துக்காக ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதாகச் சொல்கிறது ஆணையம். சாதி, மதம் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் ஆணையத்தின் விதிகளின்படி காசு கொடுப்பதற்கு இணையான குற்றங்கள்தான். அதையும் அனுமதிக்க முடியாது என்று முடிவு செய்தால், சமீபத்திய உ.பி. தேர்தல் நடந்திருக்குமா? மோடி பிரதமரானது இருக்கட்டும், குஜராத் முதல்வராக அவர் நீடித்திருப்பாரா?
“பணம், சாதி, மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தலை அனுமதிக்கக் கூடாது” என்று முடிவு செய்தால், தேர்தலை நடத்தாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஆணையத்தின் முன் உள்ள ஒரே வழியாக இருக்கும். “புனிதமான” இந்த ஜனநாயக அமைப்பின் தோல்வியை விளக்குவதற்கு இதனினும் வேறு சான்றுகள் தேவையில்லை.
000
ஆர்.கே. நகர் தேர்தலை ஒட்டி நடைபெறும் விவாதங்களில், சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசமைப்பின் வரம்புக்குள் நின்று பலரும் கூறுகின்ற தீர்வுகள், ஊழல் அதிகார வர்க்கத்தின் (தேர்தல் ஆணையம்) அதிகாரத்தை மேலும் கூட்டுவதற்கும், கிரிமினல் பாரதிய ஜனதாவை நல்லொழுக்கவாதியாகக் காட்டுவதற்குமே தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்கின்றன.
ஊழல் விவகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பா.ஜ.க.-வின் யோக்கியதை என்ன? “மணல் மாஃபியாவுக்கு தினந்தோறும் இத்தனை கோடி வருகிறது, டாஸ்மாக் வருமானம் இவ்வளவு” என்று தொப்பிக்காரர்களைப் பற்றித் தொலைக்காட்சிகளில் புள்ளி விவரம் கொடுக்கிறார்கள் பா.ஜ.க. நாக்குமாறிகள். இத்தனைக்கும் மூல முதல்வரான ஊழல்ராணியை வழக்கிலிருந்து காப்பாற்றி, தேர்தலில் வெற்றி பெற வைத்துப் பாதுகாத்தது யார்? மன்னார்குடி மாஃபியாவுக்குப் பஞ்சாயத்து செய்து வைத்தவர் வெங்கய்யா நாயுடு என்று ஊடகங்களில் சந்தி சிரிக்கவில்லையா? நல்லொழுக்க சீலர் சோ, மிடாஸ் சாராயக் கம்பெனியில் இயக்குநர் பதவி வகிக்கவில்லையா? சோ மறைவுக்குப் பின் துக்ளக் ஆசிரியராகியிருக்கும் குருமூர்த்தி, ஜெயா மறைவுக்குப் பின் பன்னீர் அண்டு கம்பெனியில் ராஜகுரு பதவி வகிக்கவில்லையா?
கல்லூரியிலும், குவாரியிலும், சுகாதாரத் துறையிலும் விஜயபாஸ்கர் அடித்த கொள்ளை முதல் இதர அமைச்சர்களின் திருட்டுகளையெல்லாம், ஆர்.கே. நகரில் ஓட்டுக்குப் பணம் கொடுத்த பின்னர்தான் இவர்களும், இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறையினரும் கண்டுபிடித்தார்களா?  “வாக்காளர்களுக்குப் பணம்” என்ற சட்டகத்தின் வழியாக தேர்தல் அரசியலின் ஊழல் தன்மையைப் பற்றிப் பேசுவது மக்களைக் குற்றப்படுத்தும் சூழ்ச்சி.
கார்ப்பரேட் முதலாளிகளிடம் காசு வாங்கும் கட்சிகளில் முதலிடத்தில் இருப்பது பாரதிய ஜனதா. அதானி காசில் பிரதமரானவர் மோடி என்பது நாடறிந்த உண்மை. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்குவதற்கு, கைப்பிள்ளையைப் போல பிரதமர் மோடியையும் அழைத்துக் கொண்டு போனார் அதானி.  கூடவே அதானிக்கு கியாரண்டி கையெழுத்து போடுவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாசார்யாவையும் அழைத்துக் கொண்டு போனார் மோடி. கிட்டத்தட்ட கலெக்டர் ஆபீசில் வேலையை முடித்துக் கொடுக்கும் புரோக்கரைப் போன்ற இந்த நடத்தைக்கு என்ன பொருள்? இது ஊழல் என்ற வரையறையில் வராதா?
கட்சிகள் கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணம் வாங்கினால் அது ஜனநாயகமாம். வாங்கின காசுக்கு அவர்கள் கூவ மாட்டார்கள் என்று நாம் நம்ப வேண்டுமாம். ஆனால், தினகரனிடம் 4000 ரூபாய் வாங்கிக்கொண்டு தொப்பிக்கு ஓட்டுப்போட்டால் அது காசுக்கு ஓட்டை விலை பேசும் நடவடிக்கையாம். மக்கள் கட்சியின் கொள்கையை மட்டும் பார்த்து வாக்களிக்க வேண்டுமாம்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது மத்திய ரிசர்வ் போலீசாரிடம் சிக்கிக் கொண்டவர்கள்.
கட்சிகளுக்கு கொள்கையே இல்லாமல் போய்விட்ட நிலையில் எதைப்பார்த்து வாக்களிப்பது? எல்லாக் கட்சிகளும் “நாட்டை அறுத்து விற்பது” என்ற கொள்கையில் ஒன்றாகிவிட்ட பின்னர், நாலாயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும் இடையிலான வேறுபாடுதானே, ஒரேயொரு கொள்கை வேறுபாடாக எஞ்சியிருக்கிறது!
“உடனே ரிசல்ட் கொடுக்கும் கடவுளைக் காட்டு” என்று பக்தியே சுரண்டல் லாட்டரியாக முன்னேறிவிட்ட காலத்தில், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொருட்டு, கட்சிகளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து மக்கள் காத்திருப்பார்களா, வந்த விலைக்கு வாக்குகளை விற்பார்களா? இது வாக்குக்கு பணம் வாங்குவதை நியாயப்படுத்துவதற்கான வாதம் அல்ல. எதார்த்த நிலைமை குறித்த சித்திரம்.
தேநீர் செலவு முதல் விமானப் பயணம் வரை அனைத்துக்கும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் கையேந்தி நிற்கும் கட்சிகள், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொருட்டு வாக்காளர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குடும்ப நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தனது மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஸ்திரீ லோலனான புருசனைப் போல!
000
விஜய பாஸ்கரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய காகிதத்தில் எந்தெந்த அமைச்சர் எந்தெந்த வாக்குச்சாவடிக்குப் பொறுப்பு, அங்கே விநியோகிக்கப்பட வேண்டியது எத்தனை ரூபாய் என்ற பட்டியல் உள்ளது. இதே போல வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டவைதான் “சகாரா பிர்லா பேப்பர்ஸ்” எனப்படும் காகிதங்கள். அவற்றில் குஜராத் முதல்வர் (மோடி) முதல் ஷீலா தீட்சித் வரையிலான பல்வேறு கட்சி அரசியல்வாதிகளுக்கும் பட்டுவாடா செய்யப்பட்ட பணம், கொடுக்க வேண்டிய பாக்கி ஆகியவை குறித்த விவரங்கள் உள்ளன.
“இவை குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார். “தின்ன மாட்டேன், தின்னவும் விடமாட்டேன்” என்று பஞ்ச் டயலாக் பேசிய மோடி அதற்குச் சம்மதிக்கவில்லை. அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இவையெல்லாம் உதிரி காகிதங்கள். அதில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதி வைத்துக் கொள்ளலாம்” என்று வாதாடினார். உச்ச நீதிமன்றம் மோடிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.

இப்போது விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய காகிதங்களைக் காட்டித் தேர்தலை நிறுத்தியிருக்கிறது ஆணையம். சகாரா-பிர்லா பேப்பர்ஸுக்கும் விஜயபாஸ்கர் பேப்பர்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அது மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்குக் கொடுத்ததாக முதலாளி எழுதிய கணக்கு. இது மக்களுக்கு கொடுத்ததாக மந்திரி எழுதிய கணக்கு.  மக்களின் ஒழுக்கமல்லவோ ஜனநாயகத்துக்கு முக்கியம்!
கருப்புப் பணத்தை ஒழிக்கும் பொருட்டு, உள்ளாடை வாங்குவதாக இருந்தாலும் அதை பே டிஎம் வழியாக வாங்கு என்ற கட்டாயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியவர் மோடி. அப்பேர்ப்பட்ட நல்லொழுக்க சீலர்,  “இனி கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கும் முதலாளிகள், இன்னாருக்கு அல்லது இன்ன கட்சிக்கு என்று பெயர் குறிப்பிட்டுக் கணக்கு எழுதத் தேவையில்லை” என்று சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார். இனி எந்த சகாரா பேப்பரைக் கைப்பற்றினாலும், அது கறைபடியாத வெள்ளை பேப்பராகவே இருக்கும் என்பதால் ஜனநாயகத்துக்கும் நல்லொழுக்கத்துக்கும் ஆபத்தில்லை.
000.
“தேர்தல்தான் மக்களின் ஆதாரமான ஜனநாயக நடவடிக்கை” என்பது ஒரு பொய். அந்தப் பொய்யின் மீதுதான் ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முதன்மை முக்கியத்துவம் வழங்குகின்ற பார்வை உருவாக்கப்படுகின்றது. விவசாயிகள் போராட்டமும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டமும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
உண்மையில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் என்பது, மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதையே நோக்கமாக கொண்ட இந்த அரசமைப்பின் நிறுவனங்கள், தமக்கான நியாயவுரிமையை மக்களிடமிருந்தே தருவிக்கின்ற ஒரு சூது. “ஹைட்ரோ கார்பனையும் மீத்தேனையும் திணிப்பதற்கும், காவிரி ஆணையத்தை மறுப்பதற்கும், வறட்சி நிவாரணத் தொகையை வெட்டுவதற்கும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால் நான்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்” என்கிறார் மோடி. “சாராயக் கடையை உங்கள் தெருவில் திணிப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது” என்கிறார் எடப்பாடி.
இவர்களுக்கும் இவர்களால் தலைமை தாங்கப்படும் அரசமைப்புக்கும் எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள், தங்களுடைய போராட்டம்தான் ஜனநாயகத்துக்கான நடவடிக்கையேயன்றி, ஆர்.கே. நகரில் நடப்பது அல்ல என்பதை உணரவேண்டும். அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவது அல்ல, அதிகாரத்தை மக்கள் தம் கையில் ஏந்துவதுதான் ஜனநாயகம் என்பதை எந்த அளவுக்கு மக்கள் உணர்ந்து கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு ஆர்.கே. நகர் விவகாரம் புறக்கணிக்கத்தக்கதாக மாறும். அது எந்த அளவுக்குப் புறக்கணிக்கத்தக்கதாக மாறுகிறதோ, அந்த அளவுக்கு அதிகாரத்துக்கான மக்களின் போராட்டம் வீரியம் பெறும்.
– மருதையன்  vinavu.com

கருத்துகள் இல்லை: