வெள்ளி, 6 ஜனவரி, 2017

மன்னார்குடி பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் ... காலை பிடித்து எழுந்தது ... அதனாலேயே வீழ்ந்தது?

1 ஜெயலலிதா சிறை சென்றால் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது” என்று ரகசியமாகச் சதி செய்த காரணத்தினால் சின்னம்மாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் அம்மா
sasi-revised-post2 மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம்  
3 கடந்த காலச் செயல்பாட்டை காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன்.
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.>மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை அதிகாரப் பூர்வமாக கைப்பற்றிவிட்டது.
முதலமைச்சரும் இன்னபிற அதிமுக தலைவர்களும் பொதுக்குழுவின் வேண்டுகோள் கடிதத்தை சின்னம்மாவிடம் வைத்து கெஞ்சியதையும், வேறு வழியில்லாமல் தலைமைப் பதவியை சுமக்க சின்னம்மா ஒப்புக்கொண்டதையும் தொலைக்காட்சிகள் வாயிலாக சின்னம்மாவே ஒளிபரப்பக் கண்டோம். இதை விஞ்சுகின்ற ஒரு  ஆபாசக் காட்சியை கூகிளில் உலகம் முழுக்க வலைவீசித் தேடினாலும் யாராலும் கண்டு பிடிக்கவியலாது.
தனக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றுமாறு புரட்சித்தலைவர் தன்னிடம் ரகசியமாக சத்தியம் செய்து வாங்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்க வேண்டியிருப்பதாகவும் தனது வாரிசுரிமைக்கு ஆதாரம் காட்டி வாதாட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை அம்மாவுக்கு இருந்தது.
அத்தகைய நிலைமை சின்னம்மாவுக்கு இல்லை.  அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி அவர்தான் என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை. அந்த உண்மையைத் தமிழக மக்களுக்குப் புரிய வைக்கும் பொருட்டுத்தான், மேற்படி ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலை சின்னம்மாவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
“தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவும், தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பும் போற்றப்படவும் எல்லோருக்கும் பயன்தரும் ஒரு ஜனநாயக ஆட்சி முறை உருவாகவும் பெரியாரை மையமாக வைத்து, பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட இயக்க அரசியல் பயணம் அவர் அமைத்துத் தந்த பாதையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அடிச்சுவட்டில் இன்னும் பல தலைமுறைகளுக்கு பயணிப்பதற்கும்” சின்னம்மாவே முதல்வர் பதவியிலும் உடனே அமர வேண்டுமென்று கோரினார் தம்பிதுரை.
இதைவிடக் கேவலமான சொற்களால் தமிழ் மக்களை யாரும் அவமதிக்க முடியாது. இருந்த போதிலும், “துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்படி சொற்களை தம்பிதுரை உதிர்த்திருப்பாராயின் அரசமைப்புச் சட்டம் அவமானத்திலிருந்து தப்பியிருக்குமே” என்று அரசமைப்பு சட்டத்தின் மாண்பு பற்றிக் கவலை வெளியிட்டார் ஸ்டாலின். “வீழ்வது தமிழனாக இருந்தாலும் வாழ்வது அரசியல் சட்டமாக இருக்கட்டும்” என்ற உணர்வு போலும்!
000
“அம்மாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப ஒரு வார்தா புயல்தான் வரப்போகிறது” என்று வட இந்திய அரசியல் ஞானிகள் கூறிக்கொண்டிருக்க, சங்க பரிவாரத்தினரையே விஞ்சும் ராணுவக் கட்டுப்பாட்டை அதிமுகவினர் வெளிப்படுத்தினர். மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அந்த ஞானம் தோற்றுவித்ததுதான் இந்த அதிசயிக்கத்தக்க ஒற்றுமை!
இந்த ஒற்றுமை ஒருபுறமிருக்க, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவிலேயே வெளிவரக்கூடும் என்பதால், முதல்வர் பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டியும் அமைச்சர்களிடையே தீவிரமடைந்திருக்கிறது. மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராகப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால், சின்னம்மாவின் நம்பிக்கையைப் பெறுவதற்கான போட்டி நடக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் பன்னீரை அகற்றி சசிகலாவை முதல்வராக அமர வைத்தால்தானே, உச்சநீதிமன்றம் சசிகலாவை அகற்றும்போது அந்த இடத்தில் அமர முடியும்! அதனால்தான் சின்னம்மாவை முதல்வராக்குவதற்கு எல்லை மீறி உணர்ச்சிவசப் படுகிறார் தம்பிதுரை.
“ஜெயலலிதா சிறை சென்றால் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது” என்று ரகசியமாகச் சதி செய்த காரணத்தினால் சின்னம்மாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் அம்மா. இது 2011 இல் நடந்த கதை. இன்று அதே போயஸ் தோட்டத்தில் அதே சின்னம்மாவுக்கு எதிராக பகிரங்கமாகச் சதி நடக்கிறது.
“நீங்கள்தான் பொதுச்செயலராகி எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கைகூப்பிக் கெஞ்சுகிறார்கள் சதிகாரர்கள். “கூப்பிய கரங்களுக்குள் குத்துவாள் இருக்கிறது” என்று தெரிந்த போதிலும் புன்னகை மாறாத முகத்துடன் தரிசனம் தருகிறார் சின்னம்மா. அம்மாவின் படத்துக்கு முன்னால் நின்று கண்ணீரும் விடுகிறார். “இந்த நாடகத்தைக் காண்பதற்கு அம்மா இல்லையே” என்ற நமது ஏக்கத்தை நிவர்த்தி செய்வதற்காகவாவது, “அம்மாவின் ஆன்மா பார்த்துக் கொண்டிருக்கிறது” என்ற சசிகலாவின் கூற்று உண்மையாகிவிடக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது.
admk-volunteer (1)
அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி சசிகலா என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை.
இன்னொரு புறம், கொலைப்பழியும் சசிகலாவைத் துரத்துகிறது. அரசு அலுவல்கள் அனைத்தையும் மர்மமான அந்தப்புர நடவடிக்கையாக மாற்றி, அதற்கே பழகிவிட்ட ஜெ-சசி கும்பல், அப்போலோவிலும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அப்போலோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக்கொண்டு யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு, “சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறோம்” என்று  அப்போது உறைத்திருக்க நியாயமில்லை.
அன்று எம்ஜியார் சாவுக்கு ஜானகி மீதும், ராஜீவ் சாவுக்கு கருணாநிதி மீதும் பொய்ப்பழி சுமத்தி முதல்வர் நாற்காலியைப் பிடித்தார் ஜெயலலிதா. அவரது சாவுக்கான பழி, உடன்பிறவாத் தோழி மீது விழுந்திருப்பது ஒரு விதத்தில் கவித்துவ நீதி. சீரியல்களின் கலர் கலரான சதிகளால் தமிழ்நாட்டுத் தாய்க்குலத்தின் மூளை கூர்மைப்படுத்தப் பட்டிருப்பதால், சசிகலாவின் ஒவ்வொரு அசைவு பற்றியும் தாய்க்குலத்தின் வாயிலிருந்து ஒரு “எபிசோட்” அநாயாசமாக வந்து விழுந்து, அப்போலோ மர்மத்தை மெகா சீரியலாக மாற்றுகிறது.
இதுதான் சசிகலாவின் நிலை. இன்று சின்னம்மாவின் காலில் விழும் கூட்டம் நாளை எந்தக் காலில் வேண்டுமானாலும் விழும். உட்கட்சி பதவிப் போட்டிக்காக ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்வதை சர்வ சாதாரணமாகச் செய்கின்ற அதிமுக கும்பல், காலில் விழும்போதே முதுகில் அரிவாளும் வைத்திருக்கும் என்பது சின்னம்மாவுக்கோ, மன்னார்குடி மாஃபியாவுக்கோ தெரியாததல்ல.
000
ருப்பினும், அதிமுக என்பது ஒரு “கட்சி” என்பதாகவும், அதன் தலைவியாக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது “அந்தக் கட்சியின் உள் விவகாரம்” என்பதாகவும் மிகவும் நாகரிகமாகப் பேசுகின்றனர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர். “சசிகலா தேர்தலில் நின்று மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்” என்று ஆலோசனை வேறு கூறுகின்றனர்.
“மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவது எப்படி” என்று சசிகலாவுக்குத் தெரியாதா? மன்னார்குடி மாஃபியா மட்டுமல்ல, சேகர் ரெட்டி, அன்புநாதன், ராம மோகன ராவ் போன்றோரும் கூட தேர்தலில் நின்று மக்களின் அங்கீகாரத்தை “வாங்க”வேண்டுமென்றால், “வாங்கி” விடுவார்களே. சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை தொகுதிகளை “வாங்கிக்  கொடுத்தவர்கள்” அல்லவா இவர்கள்! தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதையெல்லாம் சொல்லிப் புலம்பிய எதிர்க்கட்சிகள் இப்போது நடந்ததையெல்லாம் மறந்து விட்டதை எண்ணும்போது புல்லரிக்கிறது.
people-anna-square (4)
உட்கட்சி பதவிப் போட்டிக்காக ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்வதை சர்வ சாதாரணமாகச் செய்கின்ற அதிமுக கும்பல், காலில் விழும்போதே முதுகில் அரிவாளும் வைத்திருக்கும் என்பது சின்னம்மாவுக்கோ, மன்னார்குடி மாஃபியாவுக்கோ தெரியாததல்ல.
சும்மா சொல்லக்கூடாது. ஜெயலலிதா அப்போலோவுக்கு மாறியதிலிருந்தே தமிழகத்தில் அரசியல் நாகரிகம் தலைவிரித்தாடுகிறது. “சசிகலாவைப் பற்றி அவருடைய எதிர்காலச் செயல்பாட்டை வைத்துத்தான் கருத்து கூற முடியும்” என்கிறார்கள் மாண்புமிகு எதிர்க்கட்சிகள். “கடந்த காலச் செயல்பாட்டை”க் காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன். சொத்துக் குவிப்பு வழக்கு முதல் சேகர் ரெட்டியின் மணற்கொள்ளை வரை அனைத்தும் கடந்த காலச் செயல்பாட்டில் விளைந்தவையே என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா என்ன?
ஜெ ஆட்சியின் எந்த செயல்பாடுகளுக்காக “அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் பேசினார்களோ, அந்தச் செயல்பாடுகளுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லையா? முதல்வரின் தோழியாக இருந்தபோதே அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர், முதல்வராகிவிட்டால் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கும்போதே நமக்கு நெஞ்சு நடுங்குகிறதே!
“இருப்பினும் பார்ப்பன மதவெறிக் கும்பல் தமிழகத்தில் வேரூன்ற விடாமல் சசிகலா தடுத்து விடுவார்” என்பது திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தையே குடிகாரர்களாக்கி, தமிழ் மக்களை மத மூட நம்பிக்கைகளிலும் அடிமைத்தனத்திலும் ஆழ்த்தி, அதானிக்கும் அம்பானிக்கும் தமிழகத்தைப் பிரித்து விற்ற கும்பல், பாரதிய ஜனதாவிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றும் என்று நம்புகிறது திராவிடர் கழகம். மலையாள மாந்திரீகம் மற்றும் பில்லிசூனியம் முதலானவற்றில் சசிகலா கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டிலும் பயங்கரமானதாக இருக்கிறது திராவிடர் கழகத்தின் இந்த நம்பிக்கை.
திமுக வின் கதை வேறு. கடந்த காலத்தில் கருணாநிதி அனுபவித்த ராஜீவ் கொலைப்பழி முதல் ரூ. 1,70,000,00,00,000 அலைக்கற்றை ஊழல் என்ற பத்து தலை ராவணன் கதை வரை, பார்ப்பனக் கும்பலால் பலவிதமாகப் பாதிக்கப்பட்டவர் கருணாநிதி. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் வழங்கியிருக்கிறது.
“ஜெயலலிதா  மரணத்தில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்த கற்றறிந்த நீதிபதியின் உணர்ச்சிவயப்பட்ட நாக்கு, “நாம் கருணாநிதியின் மகனுக்கு ஒரு பம்பர் பரிசை வழங்குகிறோம்” என்பதை உணராமலேயே சுழன்றிருக்க வேண்டும்! “இயற்கை நீதி” எனப்படுவது இதுதான் போலும்!
MGR-Jayalalitha-movie
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.
“நான் கூறவில்லை, உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என்ற ஒற்றை வரியின் மூலம், அதிமுகவின் இழிபுகழ் பெற்ற ஓட்டு வங்கியான தாய்க்குலத்தின் வாக்குகளைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கான வாய்ப்பை தளபதிக்கு வழங்கி விட்டார் நீதிபதி. அதுமட்டுமல்ல, இறந்தவர்களை விமரிசிக்கின்ற, “அநாகரிக அரசியலை” தவிர்த்து தப்பிச் செல்வதற்கான சந்தும் ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது.
“முன்னாள் மூன்றாவது அணி சாணக்கியர்” வை.கோபால்சாமியோ, நாஞ்சில் சம்பத் எழுந்திருப்பதற்கு முன்னாலேயே அவருடைய இடத்தில் துண்டைப் போட்டுவிட்டார். மூன்றாவது அணியில் மிச்சமிருக்கும் மூன்று பேரில் முக்கியமானவரான திருமாவளவன், “வருவாய்த்துறை ரெய்டிலிருந்தும், மதவெறி அபாயத்திலிருந்தும் இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் பொருட்டு” சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்.
இடதுசாரிகளின் மூத்த தலைவரான தா.பா, முன்னம் ஒரு நாளில் சசிகலாவை விமரிசித்துப் பேசியிருப்பதை நிருபர்கள் எடுத்துக் காட்டியபோது, “அது நானாக இருக்காது, என் அசரீரியாக இருக்கும்” என்று பதிலளித்தாராம். “மன்னார்குடி மாஃபியாவை ரெய்டு அபாயம் அச்சுறுத்திய சூழலில், கோவையில் வைத்து சுப்பிரமணியசாமியை நீங்கள் ஏன் சந்தித்தீர்கள்” என்று பின்னர் ஒரு நாளில் யாரேனும் ஒரு நிருபர் அவரைக் கேட்க நேர்ந்தால், “அது நான் அல்ல, மங்கி சங்கி” என்றும் அவர் பதிலளிக்கக் கூடும். “டீக்கடைக்காரர் பிரதமராகும்போது, வீடியோக் கடைக்காரி முதல்வராகக் கூடாதா?” என்று வர்க்கப்பார்வையில் வக்கணையானதொரு எதிர்க் கேள்வியையும் எழுப்பக் கூடும்.
Nattu
“முன்னாள் மூன்றாவது அணி சாணக்கியர்” வை.கோபால்சாமியோ, நாஞ்சில் சம்பத் எழுந்திருப்பதற்கு முன்னாலேயே அவருடைய இடத்தில் துண்டைப் போட்டுவிட்டார்.
உண்மைதான். “முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். “தகுதி” பற்றிய கேள்வியை ஜெயலலிதாவோடு நிறுத்திக் கொண்டாலோ, எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.
ஆகையினால், ஆராய்ச்சியை நிறுத்திக் கொள்வோம். எப்படிப் பார்த்தாலும் சசிகலா என்பவர் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கத்தின் தலைவி. நாளை மறுநாள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால் நாளை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அவர் அமரும்போது, “மாண்புமிகு முதல்வர்” என்று என்று அவரை நாம் அழைக்காமலிருக்க முடியாது.
சசிகலாவை அவ்வாறு அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மன்னார்குடி மாஃபியாவையும் “மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். புதியதொரு அரசியல் நாகரிகம் தமிழகத்தில் தழைத்தோங்குவதற்கான துவக்கமாகவும் அது அமையும்.
  • தொரட்டி
    புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

கருத்துகள் இல்லை: