வியாழன், 5 ஜனவரி, 2017

புகாரி குழுமத்தின் 76 இடங்களில் வருமான வரி சோதனை ..

எம்.ஜி.ஆரின் நண்பர் பி.எஸ். அப்துர்ரஹ்மானின் புகாரி குழுமத்தின் 76 இடங்களில் வருமான வரித்துறை சோதனை! மறைந்த பிரபல தொழில் அதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மானின் வாரிசுகள் நடத்தி வரும் புகாரி குழுமத்தின் 76 இடங்களில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இவரை நினைவில் வைத்து தான். “மேரே நாம் அப்துல் ரஹ்மான்” என்ற பாடலை எம்.ஜி.ஆர். ஒரு திரைப்படத்தில் பாடுவார்.   100 கோடி வரி ஏய்ப்புச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

‘இரவு 2 மணிக்கு அழைத்தாலும், சொல்கின்ற இடத்துக்கு வர வேண்டும்’ என்றுதான் வருமான வரித்துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் சோதனை என்ற தகவல் யாருக்கும் சொல்லப்படவில்லை. ‘புகாரியா குழுமம், ஈ.டி.ஏ குழுமம் என பெரும் நிறுவனங்களை நேற்று குறிவைத்தது வருமான வரித்துறை. இதன்பின்னணியில், தமிழக அரசை நடத்தும் சிலரது ரியல் எஸ்டேட் வர்த்தகமும் அடக்கம்’ என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களில் கோலோச்சிய சேகர் ரெட்டி, சீனிவாசலு, கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம் குமார் ஆகியோர் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டனர். 
இவர்களுடன் வர்த்தகத் தொடர்பில் ஈடுபட்டிருந்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக்கின் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. கூடவே, ராமமோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். ‘என் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமைச் செயலகத்துக்குள் வருமான வரித்துறை வந்திருக்குமா?’ என அதிர வைத்தார் ராம மோகன ராவ். இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ‘தன் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப அவர் இவ்வாறு சொல்கிறார்’ எனப் பதில் அளித்தார்.
இந்த சர்ச்சையில் சில நாட்கள் எந்தவித ரெய்டும் நடக்கவில்லை. ‘நாங்கள் பதிலடி கொடுத்ததும் மத்திய அரசு அமைதியாகிவிட்டது’ என அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வந்தனர். ஆனால், ‘ கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் விவகாரங்களை அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியாது’ என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். அவர் நம்மிடம், “சேகர் ரெட்டி உள்பட மூன்று பேரை சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வருமாறு ராமமோகன ராவ் மகனுக்கு பலமுறை அறிவுறுத்தியும் வரவில்லை. ‘சட்டப்படியே உங்களை வரவழைப்போம்’  என எச்சரித்த பிறகே, கடந்த வாரம் டிசம்பர் 30-ம் தேதி அன்று, மாலை 5.30 மணியளவில் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தார். இரவு 8 மணி வரையில் அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. நாங்கள் எதை குறிவைத்து தேடுதலைத் தொடங்கினோமோ, அந்த நோக்கத்தை நோக்கியே சோதனை தீவிரமாக நடந்து வருகிறது” என விவரித்தவர்,

“தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக அபூர்வா ஐ.ஏ.எஸ் இருக்கிறார். இந்தத் துறையின்கீழ் எடுக்கப்பட்ட பல டெண்டர்களில் விவேக் உள்ளிட்டவர்களுக்குத் தொடர்பிருக்கிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட சுகாதாரத்துறையின் அனைத்து மட்டத்திலும், தற்காலிக பணியாளர்கள் ஏராளமாக உள்ளனர். இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பே 127 கோடி ரூபாய். இந்தப் பணிகள் அனைத்தும் விவேக்கின் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் ஃபைல்களை சி.பிஐ குடைந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் மிதிவண்டி திட்டம், முட்டை கொள்முதல் உள்பட மிகப் பெரிய டெண்டர்களில் இந்தக் கூட்டணி விளையாடியிருக்கிறது. இதுதொடர்பாக, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கான பரிவர்த்தனைகளுக்குப் பாலமாக தமிழக அமைச்சர்கள் சிலர் இருந்துள்ளனர். இதில், பெரும் பகுதி சேர வேண்டியவர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. இவர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர் இருந்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் 75 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ‘தி.மு.கவுக்கு நெருக்கமான ஈ.டி.ஏ குழுமத்தில் சோதனை’ என்று தகவல் பரப்புகின்றனர். ஆனால், ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து செயல்பட்டதற்கு ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளன. விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே ஒவ்வொரு இடமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” என்றார் விரிவாக.
“வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகளிடையே, தீவிர ஆலோசனையில் இருக்கிறார் இயக்குநர் ஜெனரல் முரளி குமார். கடந்த பத்து நாட்களாக, ரெய்டு நடத்தப்போகும் இடங்கள் குறித்த தகவலை வெகு ரகசியமாகக் கையாள்கின்றனர். நேற்று காலை 5 மணிக்குக் கிளம்பிய அதிகாரிகள், இன்னமும் சோதனை விவரங்களை அறிக்கையாகத் தரவில்லை. அப்படியானால், தேடுதல் இன்னமும் முடியவில்லை என்று அர்த்தம். ‘ புகாரி குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டார்கள்’ என்ற காரணம் ஒருபுறம் இருந்தாலும், அவர்களது பரிவர்த்தனைகளில் அதிர்ச்சிகரமான சில விஷயங்கள் கிடைத்துள்ளன.
‘யார் யாருக்கு பணத்தை வாரிக் கொடுத்தார்கள்’ என்பது குறித்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ள அறிக்கையும் மிக முக்கியமானது. நிதித்துறை அமைச்சகத்தில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. 600 பேர் கொண்ட வருமான வரித்துறை ஊழியர்கள், துணை இயக்குநர் தலைமையில் உறக்கமில்லாமல் ‘தேடி’ வருகின்றனர். இதில், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், தமிழக அரசில் உள்ள சிலரையும் வளைக்க இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில், ‘யாரை நோக்கி கை காட்டப்பட்டாலும் தயங்க வேண்டாம். உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டாம்’ என உறுதியாகக் கூறிவிட்டனர். வரக் கூடிய நாட்களில் ரெய்டு நடவடிக்கைகள், அரசை அதிர வைக்கும்” என்கின்றனர் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ என முக்கோண வளையத்தில் விசாரணைகள் வேகமெடுத்து வருகின்றன. ‘யாரை குறிவைத்து நடத்தப்படுகிறது?’ என்பதும் நிதித்துறை அமைச்சகத்துக்கே வெளிச்சம்.
– ஆ.விஜயானந்த்
vikatan

கருத்துகள் இல்லை: