செவ்வாய், 3 ஜனவரி, 2017

மீனவர் படகுகள் விடுவிக்க இலங்கை அரசு ஆலோசனை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 114 படகுகளையும் விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் மீனவர் பிரச்னை தொடர்பாக, இந்தியா, இலங்கை அமைச்சர்கள் குழு நேற்று பேச்சு நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், தமிழக மீன்வளத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடி, மீன்வளத்துறை இயக்குனர் அந்தோணி சேவியர் உள்ளிட்டோர் இலங்கை சென்றனர். இலங்கை தரப்பில் அமைச்சர் மகிந்திரா அமரவீரா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் இலங்கை அரசால் தமிழக மீனவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாகும் விவகாரம், இழுவை மீன்பிடி வலைகள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து முக்கியமாக பேசப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின், இலங்கை அமைச்சர் . மகிந்திரா அமரவீர செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தமிழக மீனவர்களின் சிறைபிடிக்கப்பட்ட 114 படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இரு நாட்டு அமைச்சர்கள் அளவிலான அடுத்த கட்ட பேச்சு ஏப்ரல் மாதம் கொழும்பு நகரில் மீண்டும் நடைபெறும். இலங்கை கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் இழுவலைகளை பயன்படுத்தி மீன்படிக்க இந்தியஅரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் குறித்தும், அவர்களை விடுதலை செய்வது குறித்து நிலையான நடைமுறை பின்பற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். மினன்ம்பலம்

கருத்துகள் இல்லை: