புதன், 4 ஜனவரி, 2017

திமுக நடத்திய நீதிக்கட்சி .. கருத்தரங்கில் கொளத்தூர் மணி , கோவை ராமகிருட்டிணன்,விடுதலை ராஜேந்திரன் ...

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். திமுக தலைவர் கலைஞரோடும், திமுகவோடும் நெருக்கமாக இருந்த கி.வீரமணியின் இந்த அறிக்கை திமுகவில் வருத்தங்களை உருவாக்கியுள்ளது . இது வெளியில் தெரியவில்லை. ஆனால் சில தி.க தோழர்கள் சசிகலாவை ஆதரித்து வீரமணி வெளியிட்ட அறிக்கையை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோட்பாட்டு ரீதியான காரணங்களோடு கட்டுரைகள் எழுதி வெளியிடும் நிலையில், நேற்று முன்தினம் (02-01-2017) அன்று காலை திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சென்று தனித்து செயல்படும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர்கள் கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலைஞர் ஓய்வில் இருக்கும் கோபாலபுரம் இல்லம் சென்று ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் நலம் விசாரித்திருக்கின்றனர். வழக்கமாக வீரமணியோடு திமுகவினர் நெருக்கத்தில் இருப்பதால் அவர்களிடம் இருந்து பிரிந்தவர்களோடு நெருக்கம் வைத்துக் கொள்ள மாட்டார்கள் திமுகவினர். இச்சந்திப்பின் போது திமுகவின்  முன்னணி  தலைவர்கள் மு.க.தமிழரசு, திரு.மு.க.முரசொலி செல்வம்,  ஆ.ராசா, பொன்முடி,. எ.வ.வேலு,சு.முத்துச்சாமி ஆகியோர் மகிழ்ச்சியோடு உடன் இருந்தனர்.
இச்சந்திப்பு பற்றி மருத்துவர் எழிலன் நாகநாதன் எழுதியிருக்கும் பதிவு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது அவர் தன் பதிவில்,
காவி பயங்கரவாதம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் திவிக தோழர்களின் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. Inclusive இல்லாமல் Exclusive இல்லை. பெரியார் சுமார் 20 ஆண்டு காலம் காமராஜரை ஆதரித்தார். தேர்தலில் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் பாடுபட்டு கொண்டுவந்த ஆட்சியில்தான் இந்தியாவையே அதிரச் செய்த சட்ட எரிப்பு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தினார். பெரியாருக்கு யாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும். யார் ஆட்சியில் இருந்தாலும் தனது கொள்கைக்கான போராட்டங்களை எப்படி நடத்த வேண்டும். யார் ஆட்சியில் இருந்தால் தனது கொள்கைகளை சாதிக்க முடியும் என்பதையெல்லாம் பெரியார் அறிந்து வைத்திருந்தார். திவிக, தபெதிக-வாக ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பெரிதாக Inclusive Politics பற்றி அக்கறை காட்டியதில்லை என்றே நினைக்கிறேன். இது திவிகவுக்கும் நல்ல மாற்றம்.
திமுக தலைவர் கலைஞர் மட்டுமே பெரியார் கொள்கைகளை பேசுவார். அக்கொள்கைகளை சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்துவார். அவருக்கு பின்னால் இந்த கொள்கைகளைப் பேச திமுகவில் ஆள் இல்லை என்ற பரவலான கருத்தை தனது சமீபத்திய நிகழ்வுகள் மூலம் பொய்யாக்கி இருக்கிறார் திரு. ஸ்டாலின். திருச்சியில் திராவிடர் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் மாநாட்டு சிறப்புரை ஆற்றியது. ஆசிரியர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி என்று தெரிந்தும் ஆசிரியர் பிறந்த நாளன்று நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது. திவிக தலைவர்களுடனான சந்திப்பு. இன்று நடைபெறும் திமுக கருத்தரங்கில் திவிக, தபெதிக தலைவர்கள் உரையாற்றுவது போன்ற நல்ல செயல்பாடுகள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
திமு கழகத்தை தமிழகத்தின் ஒரே நம்பிக்கைக்குரிய இயக்கமாக, கலைஞரை தங்கள் ஒரே நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவராக பெரியார் தொண்டர்கள் பார்ப்பதற்கான காரணம் ஒன்று தான் கலைஞர் ஒரு பெரியார் தொண்டர். பெரியார் கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்தவர். அந்த புரிதல் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது. திமுகவும் தங்களுடைய சாதனைகளின் பெருமையாக இன்றும் சொல்லிக் கொள்வது பெரியாரின் கொள்கைகளுக்கு கலைஞர் கொடுத்த சட்ட வடிவங்களைத்தான். இதை திமுக தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இரு இயக்கங்களும் சரியான பாதையில் பயணிக்கின்றன. என்று தெரிவித்துள்ளார் மருத்துவர் எழிலன்.
இந்நிலையில், நேற்று நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கை திமுக நீலாங்கரையில் நடத்தியது. அந்தக் கருத்தரங்கில் சமஸ்கிருத திணிப்பு என்ற பெயரில் கொளத்தூர் மணியும், பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் கோவை இராமகிருட்டினனும் உரையாற்றினார்கள். கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், கோவை இராமகிருட்டினன் ஆகியோர் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை துவங்கினார்கள். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிளவினால் கோவை ராமகிருட்டினன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரிலேயே செயல்படுகிறார். கொளத்தூர்மணி, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயரில் செயல்படும் நிலையில், பிரிந்து நின்றவர்களை திமுக ஒரே மேடையில் ஏற்றியுள்ளதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் கழகத்தினர்.

கருத்துகள் இல்லை: