செவ்வாய், 3 ஜனவரி, 2017

சசிகலா பேனர்கள் கிழிப்பு: எல்லா மாவட்டங்களில் மக்கள் கடும் எதிர்ப்பு .

அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றதற்கு, பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாவட்டங்களில், பெரும்பாலானவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட, சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அடித்து நொறுக்கியும், போஸ்டர்களை கிழித்தும் வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானியிலும், கிருஷ்ணகிரியிலும், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பெயரில் வைக்கப்பட்ட பேனர்களை, மர்ம நபர்கள் கிழித்துவிட்டுச் சென்றனர். பின், தகவலறிந்து வந்த போலீசார், உடனடியாக அதை அகற்றினர்.
 சசிகலாவை வாழ்த்தி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் வைக்கப்பட்ட பேனரை, மர்ம நபர்கள் கிழித்து, சாலையோரத்தில் வீசியுள்ளனர்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம், கபிலர்மலை ஒன்றியம், கோப்பணம்பாளையம் ஊராட்சி, தன்னாசி மேடு பகுதியில், தீபாவை, அ.தி.மு.க.,விற்கு தலைமையேற்க வலியுறுத்தி, கட்சியின் உண்மைதொண்டர்கள் என, பேனர் வைக்கப்பட்டுள்ளது.


 கடலுாரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இருந்த சசிகலா படம் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், 'மக்கள் பணியாற்றிட வர வேண்டும்' என, தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, பேனர் வைக்கப்பட்டுள்ளது.சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டு வருவதால், அ.தி.மு.க., நிர்வாகத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். சசிகலா, தீபா பேனர்களை அகற்ற போலீசார் உத்தரவு சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே,கெங்கவல்லி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கடைவீதி, ஆணையம்பட்டி ஆகிய இடங்களில், 'பிளக்ஸ்' பேனர் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, கடைவீதியில் இருந்த பேனரில் சசிகலா படம் மற்றும் பேனர் முழுவதும் கிழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர், கெங்கவல்லி போலீசில் Advertisement புகார் செய்தனர். இதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள், ஜெ.தீபாவுக்கு வைத்திருந்த பேனரை அகற்றும்படி போலீசார் கூறியுள்ளனர். அதற்கு, தீபா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, 'சசிகலா பேனர்களை அகற்றினால் தான், தங்களது பேனரும் அகற்றுவோம்' என, கூறினர். 'கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த அனைத்து பேனர்களையும், நேற்று இரவுக்குள் அகற்றப்பட வேண்டும். பேரூராட்சி, ஊராட்சிகளில் அனுமதி பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும்' என்று, போலீசார் தெரிவித்துள்ளனர். - நமது நிருபர் குழு -தினமலர்

கருத்துகள் இல்லை: