வியாழன், 5 ஜனவரி, 2017

வெனிசுலா ... மோசமான பொருளாதாரம் .. ஊழல் ஊழல்.. இராணுவமே மக்களை சூறையாடும் கொடுமை

மின்னம்பலம் :  வெனிசூலா ஒரு ரொட்டி துண்டு கூட கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் பொழுதில், அதன் இராணுவ அதிகாரிகள் உணவை விற்று கோடி கோடிகளாக சம்பாதிக்கிறார்கள். வெனிசுலா இராணுவம் பெரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு, முன்னாள் வெனிசுலா அமைச்சர் ஹுகோ சாவேஸ் உணவு அமைச்சகம் ஒன்றை உருவாக்கி, உணவின் மீதான முழு கட்டுப்பாட்டையும் இராணுவத்திற்கு அளித்தது. அவருடைய அரசு, பண்ணைகளையும், உணவு உற்பத்தி செய்யும் நிலையங்களையும் தேசியமயமாக்கி பின்னர் அத்திட்டத்தை ரத்து செய்தது. இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தி குறைந்து, வெனிசுலா உணவை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
2014 ஆம் ஆண்டில், வெனிசுலாவின் உணவு தட்டுப்பாடு மிக மோசமான நிலையை அடைந்தது. வெனிசுலா மக்கள் ரொட்டிக்காக நாள் முழுதும் வரிசையில் காத்திருந்தனர், மருத்துவமனைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளால் நிறைந்திருந்தது.
இதற்கு எதிராக போராட மக்கள் தெருக்களில் குதித்த போது, உணவு விநியோக அதிகாரத்தையும், துறைமுகங்கள் மீதான கட்டுப்பாட்டையும் இராணுவத்திற்கு அளித்தார் அதிபர் நிகோலஸ் மடூரோ.
வெண்ணையிலிருந்து அரிசி வரை அத்தனையும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சிக்கல் நேரத்தில் நாட்டிற்கு உதவ வேண்டிய இராணுவமோ, அதற்கு நேர் மாறாக இயங்கி,எரிந்து கொண்டிந்த வெனிசுலாவில் லாபம் பிடுங்க தொடங்கியது.ஹோஸே காம்போஸ் எனும் வணிகர், உணவு பொருட்கள் வாங்க சந்தைக்கு சென்ற போதுதான் அங்கே சட்ட முறைகேடான சந்தை இயங்கி கொண்டிருந்ததை கண்டு பிடித்திருக்கிறார். அரசு நிர்ணயித்த விலையில் இருந்து நூறு மடங்கு அதிக விலையில் இராணுவம் உணவுப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தது.
“கட்டுக்கட்டாக பணம் இருந்த பைகளை இராணுவம் கவனித்துக் கொண்டே இருந்தது. எனக்கு தேவையானவை எல்லாம் எப்போதும் அவர்களிடம் இருந்தது” என்கிறார் கம்போஸ். வெனிசுலாவின் பெரும்பாலான மக்கள் பசியால் துடிக்கும் வேளையில், அங்கே உணவு கடத்தல் முக்கிய வணிகமாக மாறியிருக்கிறது. பட்டினியாக இருக்கும் ஒரு நாட்டின் அத்தியாவசிய தேவையை பயன்படுத்தி, உணவின் விலையை வானளவு உயர்த்தி, பணம் சம்பாதிக்கிறது இராணுவம். ஜெனரல்களிலிருந்து சிப்பாய்கள் வரை அத்தனை பேரும், இந்த ஊழல் இணையத்தின் பங்காகவே இருக்கிறார்கள். இதனால், பசித்திருப்போரை உணவு எட்டவில்லை.
“சமீபமாக, போதை மருந்தை விட, உணவு கடத்தல் சிறப்பான வணிகமாக இருக்கிறது. உணவு மேலாண்மைக்கு இப்போது இராணுவம் தான் பொறுப்பு எனும் போது, தங்களுடைய பங்கை எடுத்துக் கொள்ளாமல், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்” என்கிறார் ஓய்வு பெற்ற ஜெனரல் க்ளிவர் அல்கலா. உணவு அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கை, சந்தை விலைகளோடு ஒப்பிடுகையில், பெருமளவு பணம் செலுத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது.
“ இதில் ஆச்சரியமானது என்னவென்றால், இது மிக சிறப்பான ஊழல் முறையாக இருக்கிறது. போதைப் பொருள் கடத்தலை போலத்தான் இதுவும், ஆனால் இதை உங்களால் வெளிச்சத்திலேயே செய்ய முடியும்” என்கிறார் கரபோபோ மாநில சட்டமன்ற உறுப்பினர் நெய்டி ரோசல்.
சோளம் இறக்குமதி செய்த தென் அமெரிக்க வணிகர் ஒருவரின் 52 கோடி டாலர் காண்ட்ராக்ட்டை, அப்போதைய சந்தை விலைகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர் 20 கோடி டாலர் அதிக பணம் செலுத்தியிருப்பது தெரிகிறது. சரக்கு கொண்டு வரப்படும் வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கப்படும் போதே ஊழல் தொடங்கிவிடுகிறது - சரக்குகளை தேசியமயமாக்கும் பணியை தங்கள் பங்கு பணம் கையில் வரும் வரை சுங்க அதிகாரிகள் தொடங்குவதில்லை. அவர்கள் முதலில் தங்கள் பங்கை எடுத்துக் கொள்கிறார்கள்.
சரக்கு துறைமுகத்திலிருந்து கிளம்பிய பிறகு உணவை கடத்துபவர்கள், நெடுஞ்சாலைகளிலும், சோதனை சாவடிகளிலும் இராணுவத்திற்கு லஞ்சம் கொடுத்தபடியே நகர்கிறார்கள். ஊழல் இராணுவ அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளின் தட்டுகளில் இருந்து உணவை பறிப்பதாக உணர்கிறார்கள் பசித்திருக்கும் குடிமக்கள்.
“என் பேரக் குழந்தைகள் இளைக்கும் போது, இராணுவம் பெருக்கிறது. வெனிசுலாவின் உணவு அனைத்தும் இங்கிருந்து தான் செல்கிறது, ஆனால், எங்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை” என்கிறார் 74 வயதான புயெர்ட்டோ காபெல் குடிவாசி ஒருவர்.

கருத்துகள் இல்லை: