வெள்ளி, 6 ஜனவரி, 2017

குறைந்த மழையளவு: வரலாறு காணாத வறட்சியை நோக்கித் தமிழகம்…

thetimestamil : சரவணன் சந்திரன் சரவணன் சந்திரன்:  நம்மை மிரட்டப் போகிற, வதைக்கப் போகிற மிகப் பெரிய பிரச்சினை இது. ஏதோ இதில் விவசாயிகள் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நமக்கேன் கவலை என்றெல்லாம் ஒதுங்கிப் போக முடியாது. எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அடையாள ரீதியிலாக ஒரு அமைச்சரவை கூட்டத்தை மட்டும் போட்டு விட்டு, மத்தியானத்திற்கு மேல் போயஸ் கார்டனில் அட்டெண்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் தீவிரத்தை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை? கொத்துக் கொத்தாக விவசாயிகள் செத்துக் கொண்டிருப்பதால், இது ஏதோ காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மட்டும் அனுபவிக்கப் போகிற துயர் என்கிற மாதிரியான பொதுப் புரிதல் இருக்கிறது. அது தவறு என்பதைத்தான் சொல்லப் போகும் புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும். இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 30ம் தேதிக்கு பிறகு தொடங்கியது. ஆனாலும், தமிழகத்தில் ஆங்காங்கே விட்டு, விட்டு மழை பெய்தது. சராசரியை காட்டிலும் அதாவது, 440.10 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால், 160 மி.மீ மழைதான் பதிவாகியுள்ளது. சுமார் 280 மி.மீட்டர் இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, 62 சதவீதம் வரை பருவமழை குறைந்துள்ளது.
வர்தா புயல் காரணமாக கடந்த டிசம்பர் 12ம் தேதி சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. இந்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை. இந்தச் சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்தப் பருவமழையில் 89 அணைகள், 39 ஆயிரம் ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்குக்கூட நிரம்பவில்லை. ஏற்கனவே தமிழகம் முழுக்க இப்போது முதலே குடிநீர் 2 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது. வரும் கோடை காலத்தில் பானையைத் தூக்கிக் கொண்டு பல கிலோமீட்டர் அலைய வேண்டிய தேவை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இதைச் சொல்கிறேன் என்பதற்குக் கீழே சொல்கிற புள்ளிவிபரங்களே சான்று. வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, நிலத்தடி நீர்மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும். வழக்கமான ஆய்வுதான் அது. இந்த ஆய்விற்காக, அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு, மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படும்.
இந்த ஆய்வில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், நீலகிரி, தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் நிலத்தடி நீர்மட்ட விவரங்களை தெரிவிக்க கடந்த 1 வருடத்திற்கு முன் பொதுப்பணித்துறைக்குத் தடை விதித்ததால் அதன் விவரங்கள் தற்போது வரை வெளியிடாமல் மறைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிபரத்தைப் படித்திருப்பீர்கள்தானே? வரலாறு காணாத வறட்சியை நோக்கித் தமிழகம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து உரத்துப் பேச வேண்டிய தருணம் இது. ஏதோ விவசாய நிலங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல இது. ஒட்டுமொத்தமாகவே தமிழக மக்கள் தண்ணீருக்காகக் கண்ணீர் வடிக்கப் போகிற நிலைதான் உருவாகப் போகிறது. ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலம் அந்தமான் அருகே உருவாகியிருப்பதாக வந்திருக்கிற தகவல் உண்மையிலேயே மெல்லிய ஆறுதலைத் தரும் செய்தி. எதிர்பார்த்த அளவிற்கு அது மழையைத் தராது. ஆனாலும் சிறு தூறல் கிடைத்தால்கூட சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். இதிலிருந்து எப்படித் தப்பிப்பது? இது சம்பந்தமாக வரக்கூடிய செய்திகளையும் கட்டுரைகளையும் படித்துப் பாருங்கள் தெரியும். நீங்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து இதுசம்பந்தமாகத் தொடர்ந்து அப்டேட் செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். ஒரு விவசாயியாக இதை என்னுடைய கடமையாகவும் கருதுகிறேன். இப்போதைக்கு அந்த நெருப்பு எங்கள் அடிமடியில் இருக்கிறது. நாளை அது உங்கள் மடியையும் தாக்கக்கூடும். அப்போது புரியும் அதன் வலி என்ன என்பது?
சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

கருத்துகள் இல்லை: