சனி, 7 ஜனவரி, 2017

நானா படேகர் ...சினிமாவில் ஒரு ஒரிஜினல் ஹீரோ ,... விவசாயிகளின் தற்கொலையை தடுக்க போராடுகிறார் .. கட்டவுட் கழுதைகளே கொஞ்சம் பாருங்க.


பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தும், விவசாய நிலங்களைப் அபகரித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்தும், விவசாயங்களை வளர்த்தெடுக்காமல், அவர்களை கொன்றழித்து வேடிக்கைப்பார்க்கும் அரசு, தன்னை ஆள்வதற்கான வக்கற்ற அரசென்றே பிரகடனப்படுத்திக் கொள்ளவேண்டும்.அதைவிட்டு சிறப்பு பரிசென அவர்களின் இல்லாமையை அரசியலாக்ககூடாது. தமது குடிமக்களை எந்தளவிற்கு தரம் உயர்த்தியுள்ளீர்கள் என்ற அளவீடு உங்கள் பொங்கல் பரிசிலே தெரிகிறது. ஒரு அரசிற்கு இதைவிடவும் அசிங்கமும்,அவமானமும் வேறெதுவுமில்லை. மக்களுக்கு என்ன செய்யனும் என்ற அறிவும் அக்கறையும் உங்களிடம் மயிரளவும் இல்லை. கலைஞனான #நானா_படேகர் தான் சம்பாதிப்பதையெல்லாம் துவண்டு கிடக்கும் விவசாயிகளுக்கு தந்து (#மஹாராஷ்டிரா ) அவர்களை மீட்டு மகிழும், இந்த மீட்பனிடமாவது பாடம் கற்றுக்கொள்ளுங்கள்,அரசியல்வாதிகளே. இல்லையெனில் சிறப்பு பரிசு தரும் உங்களுக்கு விரைவில் செருப்புகள் பரிசாய் வரலாம்.
தமிழகத்தைப் போல நடிகர் நடிகைகளை கொண்டாடும் ஒரு நிலப்பரப்பை இந்தியாவிலேயே எங்கும் காண முடியாது. ஆனால்  நானா படேகர்  போல ஒருவர் தமிழ்மண்ணில்  உருவாகவில்லையே, ஏன்?

வழக்கமாக வடமாநிலங்களில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகமாக நிகழும். தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தாலும் விவசாயம் பொய்த்தாலும் மாற்றுத் தொழில் விவசாயிகளுக்கு இதுவரை கைகொடுத்து வந்தது. இப்போது தமிழகத்திலும் தொடர்ச்சியாக விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வருவது கவலை அளிக்கும் விஷயம். மகாராஷ்ட்ராவின் மராத்வாடா பகுதி போல தமிழகத்திலும்  விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன.
மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாத கிராமமே இந்தப் பகுதியில் இல்லை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை. நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை  அதிகமாக இருந்தது. பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மராத்வாடா பகுதியைச் சேர்ந்தவர்தான். நடிகர் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்டவர். விவசாயிகளுக்கு உதவ நேரடியாகக் களத்தில் குதித்தார்.
விவசாயிகளுக்காக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். மற்றொரு நடிகரான  மன்கர்டுடன் இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு ‘நாம் ‘ என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி நிதி திரட்டத் தொடங்கினார். விவசாயிகளுக்கு நிதியைத் திரட்டுபவர் முதலில்   தானே ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அல்லவா?. அதனால் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியையும் அந்த அறக்கட்டளைக்கு வழங்கினார். ‘நாம்’ அறக்கட்டளை வழியாக இதுவரை 30  கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
நிதி திரட்டுவது மட்டுமல்ல நானா படேகரே  களத்தில் இறங்கி, ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீடுகளைத் தேடி  நேரடியாக சென்று நிதியை வழங்கினார்.  இந்த ஆண்டு நானா படேகர் நடித்த ‘நட்ஸாமரட் ‘ திரைப்படம் வெளியானது. அப்போது நானா படேகர் சொன்ன வார்த்தைகள் ‘எனது படத்தைப் பார்ப்பதை விட ஒரு முறை மராத்வாடா வந்து விவசாயிகளின் நிலையை பாருங்களேன்’ என்பது. எந்த ஒரு நடிகர் இப்படி சொல்வார்? பெரியதாக நடிகர்களைத் தலையில் தூக்கி  வைத்து ஆடாத மகராஷ்டிரத்துக்கு மண்ணை நேசிக்கும், மக்களை நேசிக்கும் நடிகன் கிடைப்பதற்கு அந்த மக்கள் தவம் செய்திருக்க வேண்டும்தானே.
தனது பணி குறித்து நானா படேகர் இவ்வாறு கூறுகிறார் ” கண்ணிருந்தும் விவசாயிகள் தற்கொலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது ஒரு பெருங்குற்றம். நகர மக்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். சாலைகளில் உங்கள் கார் ஜன்னலைத்  தட்டி யாராவது பிச்சை கேட்கலாம். அவர்கள் முன்னாள் விவசாயிகளாக இருக்கலாம். அல்லது அவர்களது குழந்தைகளாக இருக்கலாம். உங்களுக்கு உணவளித்த அவர்களுக்கு உணவு தேவை. கழிப்பறை தேவை, உடைகள் தேவை. அப்படி ஒருவரைத்  தத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது கடினமான விஷயமாகவே இருக்காது.  நாட்டில் பெருமளவு விவசாயம் அழிந்து வருகிறது. கிராமங்களில் இருந்து  வேலை தேடி விவசாயிகள் நகரங்களுக்கு குடியேறத் தொடங்கியுள்ளனர். அதனைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. இந்த சமுதாயத்தின் கடமையும் கூட. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதனைத் தடுக்க நாம் தவறி விட்டோம்.
கோடை நெருங்கி விட்டது. கோடை கோரத்தாண்டவம் ஆடக் கூடும். அடுத்த மாதங்களில் இன்னும் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும். நாட்டின் குளம் குட்டைகளை அழித்து விட்டோம். இருப்பவையும் தூர்த்து போய் கிடக்கின்றன. இவைகள் எல்லாம் ஒரிரு ஆண்டுகளில் நடந்த தவறல்ல. கடந்த 60 ஆண்டுகளாக விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நாம் செய்த துரோகத்தின் அடையாளம்தான் நீர் நிலைகள் தூர்ந்து போய்க் கிடப்பது.
விவசாயிகள் ஏன் தற்கொலையில் ஈடுபடுகின்றனர் என பல நாட்கள் நான் யோசிப்பது உண்டு. அவர்களது கையறு நிலையை நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஒரு விவசாயியைப் பார்க்கும் போது அவர்களின் மூலம் என்னையே நான் பார்க்கிறேன். கூரை இல்லாத வீடு, வற்றிய வயிற்றுடன் கிடக்கும் குழந்தைகள், பாளம் பாளமாக வெடித்த நிலம், பட்டினியாகக் கிடக்கும் கால்நடைகள் இதையெல்லாம்  எந்த விவசாயியால் பார்த்துக் கொண்டு தாங்கிக் கொள்ள முடியும்? .ஒரு மனிதனாக விவசாயிகளின் வேதனைகளைப் புரிந்து வைத்திருக்கிறேன். அதனால்தான் ‘நாம்’ அமைப்பை உருவாக்கினேன். இப்போதுதான் நான் வாழ்வதற்கான அர்த்தத்தையும் உணர்கிறேன்” என்கிறார்.
மகாராஷ்ட்ராவில்,  இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்டறிந்து உதவி செய்து வருகிறது. கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும், மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா படேகர். தமிழகத்தைப் போல நடிகர்- நடிகைகளை கொண்டாடும் ஒரு மாநிலத்தை இந்த நாட்டிலேயே பார்த்திருக்க முடியாது. பார்வையாளர்களை நோக்கிப் பல பன்ச் டயலாக்குகளைப் பேசித்தள்ளும் பல புரட்சி நடிகர்களை உருவாக்கியது தமிழகம். ஏன் முதல்வர்கள் கூட சினிமாத்துறையில் இருந்துதான் தமிழகத்துக்கு கிடைத்திருக்கின்றனர். இன்னமும் கிடைப்பார்கள்…. ஆனால் ஒரு நானா படேகர்தான் இன்னும் கிடைக்கவில்லை  /24realnews.com/

கருத்துகள் இல்லை: