செவ்வாய், 10 ஜனவரி, 2017

தமிழக பாஜகவுக்கு இறுதி ஊர்வலம்? ஜல்லி கட்டுக்கும் ஆப்பு .. தைப்பொங்கலுக்கும் ஆப்பு ...

தேசிய விடுமுறை நாள்கள் பட்டியலில் இருந்து தைப்பொங்கல் நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் பண்டிகை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டுக் கொண்டாடப்படும் சிறந்த பண்டிகை. பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறையாக இருந்த நிலையில் தற்போது விருப்ப விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது" என்று குற்றம் சாட்டி உள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. மிகவும் தவறான முடிவு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு பொதுவான பண்டிகைக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்து இருப்பது குறித்து மத்திய அரசின் கவனதிற்கு எடுத்துச் சென்று, கட்டாய விடுமுறை அளிக்க வலியுறுத்துவோம்" என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பொங்கல் திருநாள் தமிழக மக்களின் மிக முக்கியமான திருநாளாகும். எனவே பொங்கல் தினத்தை தமிழகத்தில் பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் முதன்மைத் திருநாளான பொங்கல் திருநாளுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாளில் இடம் பெறுவதற்கான அனைத்துச் சிறப்புகளும், தகுதிகளும் உள்ளன. அவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் திருநாள் கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவ்வாறு செய்யப்படவில்லை. இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் விவசாயிகளின் சொல்லவொண்ணா துயரம், ஜல்லிக்கட்டிற்கு நீடிக்கும் தடை. மேலும் பாதிக்கும் வகையில் பொங்கலை கட்டாய பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது வருந்தத்தக்கது. இந்து கலாச்சார பண்டிகையான தீபாவளி பண்டிகையை வெள்ளை மாளிகையில் கொண்டாட ஒபாமா தயங்கவில்லை. ஆனால் வாழையடி வாழையாய் கொண்டாடப்பட்ட தமிழர்களின் திருநாளை கொண்டாட கட்டாய பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசுக்கு ஏன் தயக்கம் என்று தெரியவில்லை" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை: