வியாழன், 12 ஜனவரி, 2017

அதிபர் டிரம்ப் : (Conflict Of Interests) நலன்களின் முரணா ? நகைப்புகளின் முரணா ?


மெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவர் பதவி ஏற்றதும் ஏற்படப் போகும் நலன்களின் முரண்கள் (Conflict Of Interests) பற்றி ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ உலகில் புழங்கும் பல்வேறு வார்த்தைகள் ஏதோ மாபெரும் தத்துவ விளக்கத்தைக் கொண்டிருக்கும் சிக்கலான நுட்பங்களாக நினைக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வார்த்தைகளை ஒரு பள்ளிக் கூட சிறுவன் ஆய்வு செய்தாலே அவற்றில் இருப்பது வெறும் வார்த்தைகளே அன்றி வாழ்க்கை பற்றியவை அல்ல என்பதை அறியமுடியும்.
அதன்படி நலன்களின் முரண்கள் என்றால் என்ன? டிரம்ப் எனும் தனிமனிதரின் நலன்களும், அதிபர் என்ற முறையில் உள்ள நலன்களும் மோதிக்கொள்கின்றனவாம். எனில் டிரம்ப் எனும் நபரின் நலன்கள் ஏன் அதிபர் என்ற வகையில் முரண்படவேண்டும்? அதாவது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கையில் வர்த்தகம் சார்ந்தவை இருக்க கூடாதாம்.

trump
டொனால்ட் டிரம்ப்
இது குறித்து எதிர்வினையாற்றிய டிரம்ப் முதலில், நலன்களின் முரண்களைச் சுட்டிக் காட்டுபவர்களை கடுமையாக தாக்கி, முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்து வந்தார். “தேர்தலுக்கு முன்னரே உலகம் முழுவதும் உள்ள எனது சொத்துக்களில் எனக்கிருக்கும் நலன்கள் அனைவரும் அறிந்தது தான். சில நேர்மையற்ற ஊடகங்கள் தான் தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்குகின்றன” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கருத்திட்டிருந்தார்.
பின்னர் தனது வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொள்ளப்போவது தொடர்பாக டிசம்பர் 15 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று வரை நடைபெறவில்லை. ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் அச்சந்திப்பு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தனது நிலைப்பாட்டை சிறிது மாற்றிக் கொண்டதாக அவர் காட்டிக் கொண்டாலும், சட்டவிதிகளின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொள்ள தனக்கு எந்த கட்டாயமும் இல்லை என்பதை சுட்டிகாட்டி வலியுறுத்தி வருகிறார். அதாவது, நலன்களின் முரண் தொடர்பான அமெரிக்க சட்டத்தில் அதிபருக்கு விலக்கீட்டு உரிமை (Impunity) இருப்பதாக அவர் கூறுகிறார். எனவே அவர் சொல்லும் எதுவும் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பதை இது காட்டுகிறது.
trump-tower-wall-streetவானளாவிய உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் கோல்ப் மைதானங்கள், ஆண்கள் ஆடைகள், தளவாடங்கள் மற்றும் உலகம் முழுவதும் அவரது தனிப்பட்ட ”பிராண்ட்”டுக்கான உரிமம் ஆகியவற்றை உள்ளடக்கியது டிரம்ப்பின் மீப்பெரும் வணிக சாம்ராஜ்யம். இது வணிகம் மற்றும் அரசியலுக்கிடையில் முடிவற்ற பின்னல்களைக் கொண்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் நன்கொடைகள் அளிப்பதன் மூலம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும், செல்வந்தர்களும் அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதையே அமெரிக்கர்கள் அரசியலில் ஊழல் எனக் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
ஆனால், டிரம்ப்பின் நிர்வாகம் இவற்றைத் தாண்டி மிக நேரடியான ஊழல் வகை அபாயத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, இங்கே தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கொடை பெறுவது என்பதையும் தாண்டி அதிபரின் சொந்த தனிப்பட்ட செல்வக்கொழிப்பு (Personal Enrichment) என்ற அபாயத்தைக் கொண்டிருக்கிறது. எனினும் சட்டப்படியே இந்த தனிப்பட்ட செல்வக் கொழிப்பு சரிதான் என்று நிறுவுவதே டிரம்பின் விருப்பம். ஊழலை சட்டபூர்வமாக்கி, கையூட்டையும், கழிவையும், தரகர் வேலைகளையும் வர்த்தக சேவை என்று மாற்றிய பிறகு முதலாளித்துவம் தன்னைக் ‘கற்புக்’கரசனாக பிரச்சாரம் செய்ய முடியாது. செய்தால் அது நலன்களின் முரண் அல்ல, முரண்களின் நகை.
இந்த ஊழல்கள், நலன்களின் முரண்கள் இல்லாதபோதும் கூட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலாளிகளின் உள்நாட்டு மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்த வகையில் மட்டுமே அமெரிக்க அரசின் அரசியல், கொள்கை முடிவுகள் நடைமுறை படுத்தப்படுகின்றன.
அதாவது, இதுவரை கோட்டு சூட்டு கனவான்கள் அமெரிக்க அதிபராக கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை செய்த ’பாரம்பரிய மரபு’ போய், ஒரு கார்ப்பரேட் முதலாளியே நேரடியாக அதிபராகியிருக்கிறார். அதிலும், ட்ரம்பை போன்ற ஒரு பொறுக்கி அதிபராகியிருப்பது அமெரிக்க ஜனநாயகத்தை முற்றிலும் அம்மணமாக்கி விட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவ பத்திரிக்கைகள் நலன்களின் முரண்களைக் குறித்து ஒப்பாரி வைக்கின்றன. அந்த ஒப்பாரி ஏகாதிபத்திய நலன்களை நல்லதென்று அங்கீகரிக்கும் வரை பலருக்கும் ஆணவச் சிரிப்பாகவே தோன்றும். எனினும் இந்த நலன்களின் முரண்கள் குறித்து அவர்கள் அழுவதை அப்படி முழுவதுமாக அலட்சியம் செய்து விடமுடியாது. அதன்படி டிரம்ப் சார்பாக எழுந்திருக்கும் இந்த நலன்களின் முரண்களை முதாலளித்துவத்தின் போட்டியாகவும் பார்க்கலாம். இறுதியில் அவர்கள், அவர்களே சொல்லிக் கொள்ளும் ஜனநாயகத்தின்படி கூட வாழ முடியவில்லை. இந்த இலட்சணத்தில் முதலாளித்துவ தாசர்கள் அனைவரும்  விரதமிருந்து மலையேறுவதால் பயனில்லை.
இனி நலன்களின் முரண்களைப் பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நலன்களுக்கிடையிலான முரண்கள் :
பொது சேவைகள் நிர்வாகம் (General Services Administration): முரண்களில் ஒன்று வெள்ளை மாளிகைக்கு மிக அருகிலேயே இருக்கும் வாசிங்டன் டிரம்ப் சர்வதேச விடுதி (Trump International Hotel, Washington DC). 2013-ம் ஆண்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் டிரம்ப் குழுமம் அமெரிக்க மைய அரசிடமிடுந்து பழைய தபால் அலுவலக கூடத்தை (Old Post Office Pavilion) குத்தகைக்கு எடுத்துள்ளது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசு அதிகாரியும் இந்த குத்தகையில் பங்கு வைத்திருப்பதையோ அல்லது அதிலிருந்து ஆதாயமடைவதையோ அதன் ஒப்பந்த விதிகள் தடை செய்கின்றன.
பழைய தபால் அலுவலகம் பெவிலியன் குத்தகையை கண்காணிக்கும் பொறுப்பு பொது சேவைகள் நிர்வாக அமைப்பிடம் இருக்கிறது. டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும் அமெரிக்க அரசு மாற்றத்தின் பகுதியாக இவ்வமைப்பின் தலைவரை நியமனம் செய்யவிருக்கிறார்.
அதிபரின் குடும்பத்தினருடன், குத்தகை விதிகள் குறித்து மறுபேச்சு (Renegotiation) நடத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு பொது சேவைகள் நிர்வாகம் தள்ளப்படும்.
TrumpConflicts_GSA-post
தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (National Labor Relations Board): லாஸ் வேகாஸ் டிரம்ப் விடுதியின் பெரும்பான்மை தொழிலாளிகள் அங்கத்தினராக உள்ள தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த பிரச்சினையில் சென்ற நவம்பர் மாதம் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் டிரம்ப் விடுதி நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.
இப்போது புதிய அரசில் தேசிய தொழிலாளர் வாரியத்தின் உறுப்பினர்கள் ஐவரில் காலியாக இருக்கும் இருவரை நியமிக்கும் பொறுப்பில் இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். மேலும் அடுத்த 2017 நவம்பரில் இவ்வாரியத்தின் சட்ட ஆலோசகரின் (General Counsel) பதவிக்காலம் முடிவடையவுள்ளது. புதிய ஆலோசகரை நியமிக்கும் அதிகாரமும் ட்ரம்பின் கையில் தான் இருக்கிறது.
இவ்வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப் குழுமம் மேல்முறையீடு செய்துள்ளது. அவ்வழக்கில் டிரம்ப்பால் நியமிக்கப்படுபவர்கள் டிரம்ப் குழுமத்தை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படும்.
TrumpConflicts_NLRB-post
அமெரிக்க நீதித்துறை (Department of Justice -DoJ): டாயிஷே வங்கி தனது கடன் பத்திரங்களை (mortgage securities) கைமாற்றியதில் செய்த முறைகேடுகளும் 2008 பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. இதை விசாரித்த அமெரிக்க நீதித்துறை (Department of Justice -DoJ) 2016-ம் ஆண்டு செப்டம்பரில் டாய்ஷே வங்கிக்கு 14 பில்லியன் டாலர் (92,400 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
அபராதத் தொகையை குறைக்க அமெரிக்க நீதித்துறையுடன் டாய்ஷே வங்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. உடன்பாடு எட்டப்படாத நிலையில் ட்ரம்பின் அரசிலும் பேச்சுவார்த்தைகள் தொடரும். இப்பேச்சுவார்த்தைகள் அமெரிக்க தலைமை வழக்குரைஞரின் மேற்பார்வையில் நடக்கும்.
ட்ரம்பிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் டாய்ஷே வங்கியின் முக்கிய கடனாளிகளாக உள்ளனர். சுமார் 2.5 பில்லியன் டாலர் (16250 கோடி ரூபாய்) அளவிற்கு டிரம்ப் குழும நிறுவனங்கள் டாய்ஷே வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளன.
இந்நிலையில், புதிய அரசுத் தலைமை வழக்குரைஞரை (அட்டர்னி ஜெனரலை) நியமிக்கும் அதிகாரமும், அமெரிக்க நீதித்துறையை மேற்பார்வையிடும் அதிகாரமும் அதிபராகப் பொறுப்பேற்கும் டிரம்ப்பிடம் உள்ளது.
TrumpConflicts_DeutscheBank-post
பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission): நியூயார்க்கின் வால் வீதியில் எண் 40-ல் இருக்கும் 72 மாடி கட்டிடம் ட்ரம்புக்கு சொந்தமானது. இதை டிரம்ப் குழுமம் பல்வேறு நிதி சூதாட்ட நிறுவனங்களுக்கு அலுவலக குத்தகைக்கு விட்டுள்ளது. பங்கு பத்திர மோசடிகள் தொடர்பாக இக்கட்டிடத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய குடியிருப்போருக்கு எதிராக ஐந்திற்கும் மேற்பட்ட அரசாங்க விசாரணைகள் நடந்து வருகின்றன.
இவ்விசாரணைகளை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மேற்கொள்கிறது. டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் ஆணையத்தின் புதிய தலைவரை நியமிக்கவிருக்கிறார்.
உள்துறை (Interior department – DoI): அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் சுமார் 18,000 கோடி ரூபாயில் டகோட்டா ஆக்சஸ் பைப்லைன் எண்ணெய் திட்டம் வர இருக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தங்களது நீர் வளம், நில வளம் அழிக்கப்படும் என அங்குள்ள பூர்வகுடி மக்கள் போராடி வருகிறார்கள்.
இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் நிறுவனத்தில் சுமார் ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6,50,00,000) டிரம்ப் முதலீடு செய்துள்ளார். டிரம்ப் தனது பங்குகளை விற்றுவிட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் சொன்னாலும், டிரம்ப் பங்குதாரராக இருக்கும் மற்றொரு நிறுவனமான ’பிலிப்ஸ் 66’ டகோட்டா பைப்லைன் திட்டத்தில் சுமார் 25% பங்குகளை வைத்திருக்கிறது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்க உள்துறை தற்காலிகமாக திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அரசு மாற்றத்தில் டிரம்ப் உள்துறை செயலரையும் நியமிக்கவிருக்கிறார்.
trumpplaneஇரகசிய சேவை அமைப்பு (Secret Services): அமெரிக்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்கும் கடமையை செய்வது இரகசிய சேவை அமைப்பு (Secret Services). அமெரிக்க அதிபர் வேட்பாளரையும் பாதுகாக்கும் கடமையையும் இவ்வமைப்புக்கு உள்ளது.
டிரம்ப் அதிபர் வேட்பாளராக பிரச்சாரத்திற்கு சென்ற போது அவரது டிரம்ப் ஏரோப்பிளேன் கம்பெனியின் (TAG Air) விமானத்தில் சென்றார். அவரது பாதுகாப்பிற்காக இரகசிய சேவை அமைப்பினரும் உடன் சென்றனர். இதற்கு டிரம்ப்பின் விமானக் கம்பெனி இரகசிய சேவை அமைப்பிடம் கட்டணம் வசூலித்திருக்கிறது.
டிரம்ப் அதிபர் பதவியேற்ற பின் அவர் அமெரிக்க விமானப்படையின் ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தை பயன்படுத்துவார். ஆனால் அவரது குடும்பத்தினர் டிரம்ப் ஏரோப்பிளேன் கம்பெனியின் (TAG Air) விமானத்தை பயன்படுத்தலாம். அவர்களை பாதுகாக்க அதில் இரகசிய சேவை அமைப்பினரும் பயணிக்க நேரிடும். இரகசிய சேவையினர் தமது அப்பயணத்திற்கு டிரம்ப்பின் விமானக் கம்பெனிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வகையில் டிரம்ப் குடும்பத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பயணத்தின் கட்டணத்தை டிரம்ப் குடும்பத்திற்கே செலுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் : இவை தவிர டிரம்ப் குழுமத்தின் 111 நிறுவனங்கள் 18-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக நடவடிக்கைகளில் பங்குதாரராக, நலன் பெறுபவையாக இருக்கின்றன.
atul-sagar-meet-trump1
இந்திய முதலாளிகளான அதுல் மற்றும் சாகர் சோர்டியா சகோதரர்கள் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை சந்தித்துள்ளனர்.
இந்தியாவில் டிரம்ப் பிராண்டுக்கான உரிமத்தை பெற்று இந்திய தரகு முதலாளிகள் கட்டுமான திட்டங்களை செயல்படுத்துகின்றனர். ட்ரம்பின் பிராண்டில் ஐந்து அதி ஆடம்பர அடுக்குமாடி திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மும்பையைச் சேர்ந்த லோதா குழுமம் கட்டிவரும் அதி ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்றாகும். இந்த லோதா குழுமத்தின் தலைவர் மங்கள் பிரபாத் லோதா, மராட்டிய பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர்.
பூனே நகரில் டிரம்ப் டவருக்கான (Trump Tower, Pune) நிலம் போலியான ஆவணங்களை தயாரித்து கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரனையில் இருக்கிறது. பூனே டிரம்ப் டவர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிவரும் இந்திய முதலாளிகளான அதுல் மற்றும் சாகர் சோர்டியா சகோதரர்கள் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை சந்தித்துள்ளனர். தங்களுக்கிடையிலான வணிகம் இனி சிறப்பாக தொடருமென்றும் டிரம்ப் இவர்களுக்கு உறுதியளித்துள்ளார். டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை அடுத்து ’டிரம்ப் பிராண்டு’க்கான மவுசு அதிகரித்துள்ளதாக பிரணவ் பக்தா என்ற கட்டுமானத் துறை ஆலோசகர் தெரிவிக்கிறார்.
மேற்சொன்ன நலன்களின் முரண்கள் சில வகைமாதிரிகள் மட்டுமே. டிரம்ப் தன்னுடைய வருமான வரி விவரங்களையோ அல்லது தனது கடன்களை பற்றிய தகவல்களையோ வெளியிட மறுக்கிறார். அதோடு யார் உரிமையாளர் என எளிமையாக கண்டறிய முடியாத வகையில் கம்பெனிகளுக்கிடையிலான வலைப்பின்னலைக் கொண்ட தனது வணிக சாம்ராஜ்ஜியத்தை அவர் கட்டியமைத்துள்ளார். அதனால் இந்தச் சிக்கலின் முழுப் பரிமாணத்தை நாம் அறிய முடியாது.
பூனேவில் உருவாகும் டிரம்ப் டவர்
பூனேவில் உருவாகும் டிரம்ப் டவர்
ஒருவேளை, அவரே கூறிக்கொள்வது போல தனது வணிக நடவடிக்கைகளில் இருந்து துண்டித்து கொண்டு அவற்றின் கடிவாளத்தை தனது குழந்தைகளிடம் ஒப்படைப்பதாக இருந்தாலும், இந்த நலன்களின் முரண்கள் தீர்ந்து விடப்போவதில்லை.
டிரம்ப் தனது வணிக நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு ஐவான்கா, டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் ஆகிய தனது பிள்ளைகளிடம் அதை ஒப்படைக்கப் போவதாக சொல்லிவருகிறார். புதிய அதிபர் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் நியமனங்களில் அறிவுரை வழங்கும் அரசு மாற்ற குழுவில் (Transition Team) ஐவான்கா, டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், வெளிநாட்டு தலைவர்களுடனான டிரம்ப்பின் சந்திப்பிலும் அவர்கள் பங்கேற்கின்றனர்.
டிரம்ப்பின் பல வணிகங்கங்கள் ‘டிரம்ப்’ பெயரைக் கொண்டுள்ளன. அவரது வணிக நடவடிக்கைகள் அவரது பெயரைக் கொண்டிருக்கும் வரை, அவற்றில் அவருக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது அவரது வேண்டப்பட்டவர்களுக்கோ பங்குகள் இருக்கும் வரை இம்முரண்கள் தீர்க்கப்படாது என்பதை பல முதலாளித்துவ பத்திரிக்கைகளே சுட்டிக்காட்டி வருகின்றன.
அமெரிக்க சட்டத்தின் படி அரசுப் பதவியில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளைப் பெற முடியாது. இனி அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளால் பலன் அடைபவர்கள் “டிரம்ப்” பிராண்டுக்கான உரிமத்தை பெற்று டிரம்ப்புக்கு ’நன்றிக் கடன்’ தீர்க்கலாம். அல்லது அமெரிக்க அரசு அதிகாரத்தையும், இராணுவ பலத்தையும் பயன்படுத்தி வெளிநாடுகளில் டிரம்ப் குழுமம் தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொள்ளலாம். இது போன்ற எண்ணற்ற முடிவில்லா ‘வாய்ப்புகளை’ கொண்டிருக்கிறது ட்ரம்பின் அரசு நிர்வாகம்.
அமெரிக்க நாட்டு நலன்களுக்கும், டிரம்ப் குழும நிறுவனங்களின் நலன்களுக்கும் இடையிலான முரண்களை தான் நலன்களின் முரண் என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டி வருகின்றன. இங்கு அமெரிக்க நாட்டு நலன் என குறிப்பிடப்படுவது அமெரிக்க முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய நலன்களே அன்றி சாதாரண அமெரிக்க மக்களின் நலனை அல்ல. ஏகாதிபத்திய நலன்களும், டிரம்ப் குழும நலன்களும் ஒத்திசைவாக செயல்படுவதற்கே அதிக சாத்தியமுள்ளது.
ஆக, முதலாளித்துவ பத்திரிக்கைகள் கூறிவருவது போல டிரம்ப்பின் நலன்களுக்கிடையான முரண்கள் தீர்க்கப்பட்டாலும் கூட அமெரிக்க மக்களுக்கோ, உலக மக்களுக்கோ அதனால் விடிவு கிட்டப்போவதில்லை.
– நாசர் vinavu.com
மேலும் படிக்க:
A running list of how Donald Trump’s new position may be helping his business interests
All of Donald Trump’s known conflicts of interest in one place
Donald Trump’s Conflicts of Interest: A Crib Sheet
Donald Trump: A list of potential conflicts of interest
Trump’s conflicts of interest: a visual guide
Trump’s extensive deals in India raise conflict-of-interest concerns

கருத்துகள் இல்லை: