சனி, 14 ஜனவரி, 2017

தடையை உடைத்துக்கொண்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது

தடையை மீறி ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி சில கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்த அனுமதி அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டதால், ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை தொடர்ந்து நீடிக்கிறது. என்றாலும் இந்த தடையை மீறி நேற்று சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.<>காளைகளை அவிழ்த்து விட்டனர்& மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் கிராமத்தில் கண்மாய் கரை அருகே உள்ள முனியாண்டி கோவில் முன்பு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப் போவதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை ஊர் பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சுமார் 20–க்கும் மேற்பட்ட காளைகளுடன் அங்கு வந்தனர். அங்கு அமைத்து இருந்த வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்து விட்டனர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை ஆர்வத்துடன் இளைஞர்கள் அடக்கினர்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் போலீசார் அங்கு கூடியிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பழனியை அடுத்த கொமரலிங்கம், நெய்க்காரபட்டி, உடுமலை, காவலப்பட்டி, கரடிகூட்டம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களுடைய காளைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள் 10–க்கும் மேற்பட்ட காளைகளுடன் வந்து ஆண்டிப்பட்டி ஜே.ஜே. நகர் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இதற்கிடையே ஆண்டிப்பட்டி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்டது. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாகை மாவட்டம் 

நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகேயுள்ள கொடியாலத்தூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும் இளைஞர்கள் அவற்றை விரட்டிச் சென்று அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம்புதூர் ஆகிய கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. கிராம மக்கள் காளைகளை அலங்கரித்து, பூஜைகள் செய்து விழாவை நடத்தினார்கள். பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்றனர்.

கோவையில் ரேக்ளா பந்தயம் 

கோவையை அடுத்த எட்டிமடையில் ரேக்ளா பந்தயம் நடைபெறும் என்று அந்த பகுதி மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை 10 மணி முதல் எட்டிமடை பிரிவு மைதானத்தில் அந்த பகுதியினர் திரண்டனர். காலை 11 மணி அளவில் 50 ரேக்ளா வண்டிகள் அங்கு கொண்டு வரப்பட்டு பந்தயம் தொடங்கியது.

எட்டிமடை பிரிவு மைதானத்தில் இருந்து ரேக்ளா வண்டிகள் புறப்பட்டு க.க.சாவடி, வேலந்தாவளம், பைபாஸ் சாலை வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் எட்டிமடை பிரிவு மைதானத்தை அடைந்தன. ரேக்ளா வண்டிகளை இழுத்தபடி காளைகள் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்ததைப் பார்த்து சாலையோரம் நின்ற பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

முடிவில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த பந்தயத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடைபெற்ற போது அங்கு போலீசார் இல்லை.

திருச்சியில் சேவல் சண்டை 

திருச்சி உறையூர் வண்டிக்கார தெருவில் நேற்று சிலர் தடையை மீறி சேவல் சண்டை நடத்தினார்கள். சேவல் சண்டையை பார்க்க அங்கு ஏராளமான பேர் கூடினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சேவல்சண்டை நடத்தியவர்கள் அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென்று விட்டார்கள். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.   dailythanthi.com

கருத்துகள் இல்லை: