செவ்வாய், 10 ஜனவரி, 2017

சாதி ஆணவ கொலை! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! தமிழகத்தில் முதல் முதலாக ... நெல்லை கர்ப்பிணிப் பெண் கல்பனா கொலை வழக்கில் ..

thetimestamil.com :முருகன் கன்னா: நெல்லையில் கடந்த 2016 மே 3ஆம் தேதி தச்சநல்லூர் காவேரியும் வண்ணார்பேட்டை விஸ்வநாதனும் (இரயில்வே ஊழியர் ) காதலித்து திருமண‌ம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவேரியின் தந்தை சங்கரநாராயணனும் தாய் செல்லம்மாளும் விஸ்வநாதனின் குடும்பத்தினரிடம் சென்று எங்கள் மகளை எங்களிடம் திருப்பி கொடுங்கள் என்று முறையிட்டுள்ளனர். ஆனால் விஸ்வநாதனின் குடும்பத்தாருக்கோ விஸ்வநாதனும் காவேரியும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்களும் தேடுகிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து திரும்ப திரும்ப விஸ்வநாதனின் குடும்பத்தை காவேரியின் தந்தை சங்கரநாராயணனும் தாய் செல்லமாவும் தொந்தரவுடன் மிரட்டவும் செய்தனர்.
இதனால் விஸ்வநாதனின் சகோதரி கல்பனா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சங்கரநாராயணனும் செல்லம்மாவும் மே 13ந்தேதி மீன்டும் விஸ்வநாதனின் வீட்டுக்கு வந்து விஸ்வநாதனின் சகோதரி கல்பனாவை வெட்டிக் கொலை செய்தனர்.
கொலை சம்பவத்தை கண்டித்து அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் வந்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி மறியல் செய்தவர்களை கலைந்து போக செய்தனர் . அப்போது ஒரு வழி போக்கனாக நானும் அந்த வழியே சென்று கொண்டிருந்தேன். என்ன பிரச்சனை என்று விசாரித்து தெரிந்து கொண்டு சென்று விட்டேன். மாலை அந்த பகுதி சில நண்பர்கள் அழைப்பின் பேரில் காவல்நிலையம் சென்றேன் . காவல்நிலையத்தில் புகார் எழுதி கொடுக்க கல்பனா கண‌வர் வந்திருந்தார். அவரிடம் நடந்த முழுவிபரம் அறிந்து கொண்டேன். இதன் பின் புகார் கொடுக்கும் முன்னர் காவல்நிலையத்தில் உங்களின் கவனக்குறைவினால் தான் இந்த கொலை நடந்து விட்டது என்று கூறினேன். அதனால் எனக்கு உதவி ஆய்வாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மாநகர துணை ஆணையாளர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்பே புகார் மனுவை பெற்றுக் கொண்டனர். அப்போது துணை ஆணையாளர் இந்த கொலை சம்பவம் நடக்க காவல்துறையின் கவனக்குறைவும் காரண‌ம் என்பதை ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இந்த வழக்கில் உள்ள உண்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் சரியான முறையில் மிகவிரைவாக இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும் உறுதியளித்தார். ஆனாலும் பல அனுபவ காரண‌ங்களால் இதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் மறுநாள் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்வோம் என்று பாதிக்கப்பட்ட கல்பனாவின் கண‌வரிடமும் அந்த பகுதி மக்களிடமும் ஆலோசனையாக கூறினேன். இதனை அன்று இரவே அந்த பகுதி மக்கள் கூடி பேசி உண்ணாவிரம் இருப்பது என முடிவு எடுத்து இரவு 11:30 மணியளவில் எனக்கு போன் செய்து முடிவு எடுத்ததை சொல்லி காலை 9:00 மணிக்கு தொடங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
மே 14 காலை உண்ணாவிரதம் தொடங்கிய சில மணி நேரங்களில் காவல்துறையினரும் வருவாய்துறையினரும் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் உடன்பாடு எட்டவில்லை காரண‌ம் பல முறை தொடர்ந்து ஏமாற்றப்படும் மக்கள் இப்பவும் ஏமாற தயாரில்லை . இதனாலும் இது போன்ற சம்பவங்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேன்டும். இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ளது எனவே அவர்கள் வந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி நாங்கள் அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளிக்காமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் உறுதியாக கூறினோம். பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்களில் ஒருவரும் வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் தோழர் ஆர்.கிருஷ்ண‌ன் அவர்களை தொடர்பு கொன்டு அழைத்தவுடன் அவரும் வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பின் மாவட்ட வருவாய்துறை அதிகாரியும் மாநகர துணை ஆணையாளரும் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களிடமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி அனைத்தையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தால் நாங்கள் ஏற்போம் என்றும் சாதி ஆணவ கொலைக்கு தனிச் சட்டம் இயற்றக் கோரி மாநில அரசுக்கு சிபாரிசு செய்யவும் உறுதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். பின்னர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி விட்டு பதிலளிப்பதாக கூறிச் சென்றனர்.
காவல்துறையின் ஆய்வாளர் சில மணிநேரத்திற்கு பின்னர் வந்து உங்கள் கோரிக்கைகள் முழுமையாக செய்து தரப்படும் என்று கூறினார் அதன் பின்னர் போராட்டத்தை முடித்துக் கொண்டு கல்பனாவின் பிரதேதத்தை வாங்கினோம் குற்றம்சாட்டப்பட்ட சங்கநாராயணணை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்தனர் . அவரது மனைவி செல்லம்மாள் மட்டும் ஜாமினில் வெளியே வந்தார். இந்த சூழ்நிலையில் கல்பனா கண‌வரை கொலை செய்ய எதிர் தரப்பினர் சிலர் திட்டமிட்டு தொடர்ந்துள்ளனர். அவர்கள் மீதும் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் சாட்சிகளையும் மிரட்டியுள்ளனர். அதற்கு புகார் அளிக்கப்பட்டு வழக்கு போடப்ப‌ட்டுள்ளது கல்பனா வழக்கும் தொடர்ந்து நடைபெற்றது. சாட்சிகள் விசாரனை கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரை நடைபெற்றது. இதனிடையே குண்டர் சட்டத்தில் இருந்த சங்கரநாராயணண் ஜாமினில் வெளியே வந்தார். இதனால் கல்பனா குடும்பத்தார் பதற்றமான சூழ்நிலையில் இருந்தனர்.
ஜனவரி 9ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கல்பனா குடும்பத்தை சார்ந்தவர்கள் சாட்சிகளும் பாதுகாப்பாக இருக்க காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது. மேற்கொண்டு ஏதேனும் பாதுகாப்பு தேவைப்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறினார்கள் அதன் படி நேற்று 9ந்தேதி குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டது. தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்று கூறி நிதிபதி உத்தரவிட்டார். இன்று 10ந்தேதி கல்பனா கொலைவழக்கின் குற்றவாளிகளான சங்கரநாராயணண் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகிய இருவருக்கும் இது போன்ற கொலை சம்பவங்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதளின் படி மரண தண்டனை விதிப்பதாக தீர்ப்பு வழங்கினார்.
ஆண்டாண்டு காலமாக சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் மக்களுக்கு எதிரான சாதியவெறியர்களுக்கு சட்டரீதியாக மிக கடுமையான தண்டனை கொடுப்பட வேண்டும் அதுவே சமூக சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதே நிதர்சனம் அதே சமயம் கொலைக்கு கொலை தான் தீர்வா என்ற கோனத்திலும் பார்க்க வைக்கிறது இந்த தீர்ப்பு. எனவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் வெற்றி என்றாலும் இரு உயிர் பலியின் மீது வெற்றியை கொண்டாட மனம் முன் வரமறுக்கிறது.
முருகன் கன்னா, சமூக செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை: