ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சொல்லுடா பாண்டே! ..அம்மா .. அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு - சிவகார்த்திகேயன் ஏண்டா அழுதாய்ன்?

ராஜசங்கீதன்
தமிழ்நாட்டு அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவு புனிதமானது. கொள்கை பிரச்சாரத்துக்கென உருவாக்கப்பட்ட இந்த கூட்டு, கட்சி வளர்ப்பு, பிம்ப நிர்மாணம், கூட்டம் உருவாக்குதல், முக்கிய பிரச்சினைகளின் தீவிரத்தை சினிமாவாக்கி நீர்த்து போக செய்தல், சமூக பிரச்சினைகளுக்கு திரைவாசிகளை நாடுதல், சினிமா பிரச்சினைகளுக்கு அரசியலை நாடுதல் என பல பரிமாணங்களை கடந்து வந்திருக்கிறது. சினிமாவின் இத்தகைய சமூக ஊடறுப்பால் சமூகத்தின் பல அங்கங்களும் அதை தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்கின்றன. சினிமாவும் அவ்வங்கங்களை தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
ரங்கராஜ் பாண்டேவின் சிவகார்த்திகேயன் நேர்காணலும் இப்படியான மற்றுமோர் பரிமாணமே! அதற்குள் ஒளிந்திருக்கும் நுட்பமான திருகு வேலையை நாம் கவனிக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகிறது.

சிவகார்த்திகேயன் உண்மையாக ஏற்பட்ட சிக்கல்களுக்காகவே அழுததாக வைத்துக் கொள்வோம். அந்த சிக்கல்கள் ஒரு துறை சார்ந்தது. அந்த துறைக்கென அமைப்புகள் இருக்கின்றன. அவை நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்திருக்கின்றன. இவை செய்திகள் மாத்திரமே. இந்நிலையில் பாண்டேவிடம் பேட்டிக்கு காரணம் என்ன?
என் துறையில் பிரச்சினைகள் இருக்கின்றன. உங்கள் துறையில் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் பாண்டே நம்மை அணுகவில்லையே? சரி, நாம் பிரபலங்கள் இல்லை. போகட்டும். விவசாயம், விளையாட்டு, தொழில்நுட்பம், ஊடகம், கல்வி, மருத்துவம் என பல துறைகள் நேரடியாக சமூக பங்களிப்புடன் தொடர்பிருந்தும் சீர்கேடாயும் சீரழிவாகவும் இருக்கின்றனவே, அவற்றில் பிரபலங்கள் எவரும் இல்லையா? சமூக அக்கறைக்கு டிஆர்பி ரேட்டிங்தான் அளவுகோலா? அல்லது இந்த நேர்காணலுக்கு டிஆர்பி மட்டும்தான் காரணமா?
இன்றைய பிரச்சினைகள் என சிலவற்றை பட்டியலிடுவோமே! அர்ஜுன் சம்பத், செல்லம்மாள் கல்லூரி பெண்கள் பலி, காவிரி பிரச்சினை, கோவை கலவரம், மதன், வடகிழக்கு பருவமழை! அனைத்துக்கும் உச்சாணியாக, அதிமுக்கியமாக முதல்வர் உடல்நிலை, அது தொடர்பான அரசியல் நிலைகள், நிர்வாக தேக்கம் என எத்தனை இருக்கின்றன? ஆனால் நாம் சிவகார்த்திகேயனைத்தான் நேர்காண போகிறோம்.
தமிழக அரசியலில் ஒரு புதுவகை உத்தி கடைபிடிக்கப் பட்டு வருகிறது. மடைமாற்றுதல்! பொது கவனம் குவியும் இடத்தை மாற்றி அமைத்தல். அப்படியே அதை நீர்த்து போக செய்தல். இவற்றுக்குத்தான் பாண்டேக்கள் பயன்படுகின்றனர். இதைத்தான் இங்கும் பாண்டே நேர்த்தியாக செய்கிறார். யாருக்கான உபகாரமோ!
இந்த ஒரு நேர்காணல் நாட்டையே சீரழித்துவிடுமா? கண்டிப்பாக இல்லை. ஆனால் இம்மாதிரியான திசைதிருப்பும் பல நேர்காணல்கள் கண்டிப்பாக சீரழித்துவிடும். இப்படியான செய்தி கோர்ப்புகள் நமக்கான அரசியலை விட்டு வெகுதூரம் நம்மை தள்ளி வைத்துவிடும். ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறோம்.
சினிமாக்காரனை நேர்காணவே கூடாதா? செய்யலாம். ஒரு சமூக விளைவின் தொடர்ச்சியாக அந்த நேர்காணல் இருக்க வேண்டும். கபாலி படம் ஏற்படுத்திய பெரும் உரையாடலின் தொடர்ச்சியாக வந்த ரஞ்சித்தின் நேர்காணலை போல். மாறாக ஒரு தற்காலிக, பொய்யான சமூக விளைவை கட்டமைப்பதற்காக இருக்கக் கூடாது.
ஒரு முக்கியமான அரசியல் தருணத்தில் நாம் தெரிந்து கொள்ள இருப்பது சிவகார்த்திகேயன் ஏன் அழுதார் என்பதை! இப்படி பல அரசியல் தருணங்களை வரலாறு நெடுக கோட்டை விட்டுத்தான் இந்த இழிநிலைக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். அரசாங்கமும் நமக்கு இல்லாமல், ஊடகங்களும் நமக்கு இல்லாமல், அதிகார மையங்களும் நமக்கு இல்லாமல், ஒரு கட்டத்தில் நமக்கென்றே நாம் இல்லாமல் ஆகப்போகும் சூழல் நோக்கி தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம்.
நம் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து, நமக்கு எதிரான அரசியலை பேசும் நிலையை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு கொடுக்க போகும் விலை, நாம் கற்பனை செய்ய முடிந்ததைவிட அதிகமாக இருக்க போகிறது!
ராஜசங்கீதன், பத்திரிகையாளர்.thetimestamil.com

கருத்துகள் இல்லை: