செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

பெருமுதலாளிகளின் அடிமைகளாகிவிட்ட வணிக ஊடகங்களும், காலாவதியாகிப் போன பத்திரிகை தர்மமும்?

தமிழ்நாட்டு அளவில் சன் குழுமத்திற்கும், தினமலருக்கும் இடையே வேண்டுமானால் போட்டி, பகை இருக்கலாம். ஆனால், ரிலையன்ஸுக்கும் சன் குழுமத்திற்குமோ, ரிலையன்ஸுக்கும், தினமலருக்குமோ எப்போதும் போட்டி, பகை வராது. ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களை இந்தப் பத்திரிகைகள் ஒரு நாளும் பகைத்துக் கொள்ளாது.
அறிவுஜீவியாக காட்டப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால், தெரிந்தோ தெரியாமலோ ரிலையன்ஸ் நிறுவனத்தின்மீது கைவைக்கிறார். ரிலையன்ஸ் குழுமங்களின் முறைகேடுகளுக்காக முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய முயல்கிறார்.
அதுவரை ஆகப்பெரும் அறிவுஜீவியாக சித்தரிக்கப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மிகப்பெரும் கோமாளியாக ஊடகங்களால் மாற்றப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் கோமாளியாகத்தான் ஊடகங்களில் காட்டப்படுகிறார். அவர் மீண்டும் அறிவுஜீவியாக வேண்டுமானால், முகேஷ் அம்பானி கடைக்கண் காட்டினால்தான் முடியும்
20 – 25 ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகை உலகில் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றைப்பற்றி அதிகம் பேசுவார்கள். ‘இதுதான் பத்திரிகை தர்மமா’ என்று சாதாரண வாசகர் கேள்வி கேட்கும் அளவிற்கு பத்திரிகை தர்மத்தின் அவசியம் அன்று அனைவராலும் உணரப்பட்டிருந்தது.

தினகரன் நாளிதழின் நிறுவனரான தினகரன், முதுகளத்தூர் கலவரத்தின்போது, தனது பத்திரிகையில் தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் செய்த அட்டூழியங்களை எழுதினார். தினகரனும் முத்துராமலிங்கத்தின் தேவர் சாதியைச் சார்ந்தவர்.
படிப்பறிவு அதிகமில்லாத மதுரைப் பகுதியிலிருந்துதான் தினகரன் வெளிவந்தது. மதுரை, இராமநாதபுரம் பகுதி தேவர் சாதி மக்கள் அதிகமாக வாழும் பகுதி. அங்கு முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்து எழுதினால், பத்திரிகையின்  சர்குலேஷன் பாதிக்கப்படுமென்று தெரிந்திருந்தும்  துணிச்சலாக முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக எழுதினார். தினகரன் சுயசாதி மறுப்பின் அடையாளமாகத் திகழ்ந்தார். அதனாலேயே சுயசாதி வெறியர்களால் கொல்லப்பட்டவர்.
அவர் எழுதியவை “முதுகுளத்தூர் கலவரம்” என்னும் பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இன்றளவும் முதுகளத்தூர் கலவரம் தொடர்பான ஆவணங்களில் முக்கியமானதாக இப்புத்தகம் விளங்குகிறது. தினகரன் கடைப்பிடித்த பத்திரிகை தர்மம் இன்று இருக்கிறதா? 

90களுக்குப் பிறகு, அதாவது உலகமயமாக்கலுக்குப் பின்னர், பத்திரிகைகள் தன்னளவில் கார்ப்பரேட் நிறுவனங்களாக உருப்பெற்றுவிட்டன. முன்பெல்லாம் உள்ளடக்கம், அதன் சர்குலேஷனைப் பாதிப்பது குறித்து கவலைப்படாமல்தான் பத்திரிகை நடத்தினார்கள்.
பெரியார் நடத்திய குடியரசு, விடுதலை பத்திரிகைகளில் வந்த செய்திகள் யாவும் வெகுமக்கள் கருத்துக்கு எதிரானவை. இதனால் பத்திரிகையின் சர்க்குலேஷன் பாதிக்கப்படும் என்று பெரியார் கருதவில்லை. இலாபம் வராமல் போனாலும் பரவாயில்லை, தான் உண்மை என்று நம்பும் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்றுதான் பெரியார் விரும்பினார்; செயல்பட்டார். இப்போதைய பத்திரிகை உலகம் என்பது அப்படியில்லை.
ஊடகங்களின்  இலாப வெறி:
ஒவ்வொரு காலாண்டும் பன்னாட்டு நிறுவனங்களில் இலாபக்கணக்கை காட்டுவார்கள். போன காலாண்டைவிட இந்தக் காலாண்டில் எவ்வளவு அதிகமாக சம்பாதித்திருக்கிறோம் என்று தெரிவிப்பார்கள். இந்த மாதிரியான இலாபக் கணக்கு முறையை பத்திரிகை உலக முதலாளிகளும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
corporate mediaகுறிப்பிட்ட ஒரு பத்திரிகையைவிட நமது பத்திரிகை இந்த ஆண்டு சர்குலேஷனில் முந்தியிருக்கிறது என்றும், அந்தப் பத்திரிகையைவிட நமது பத்திரிகை இலாபகரமாக இயங்குகிறது என்றும் சொல்கிற அளவிற்கு பத்திரிகை உலகம் வணிகமயமாகிவிட்டது. முதலிடத்தைப் பிடிப்பதுதான் இன்றைய ஊடகங்களுடைய இலக்கு (பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி உட்பட எல்லாவற்றையும் சேர்த்தே பார்க்க வேண்டும்). விற்பனையில் முதலிடத்தைப் பிடிப்பது என்பதையும் தாண்டி, இலாபத்தில் முதலிடம் பிடிப்பது என்பதே முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
100000 இதழ்கள் விற்பது என்பதைத் தாண்டி, விற்கப்பட்ட 100000 இதழ்களில் எவ்வளவு லாபம் வருகிறது, எவ்வளவு விளம்பரங்களைக் கையில் வைத்துள்ளீர்கள், எத்தனை பன்னாட்டு நிறுவனங்களின் முழுப்பக்க விளம்பரங்கள் கிடைக்கின்றன என்பதே வணிக நோக்கிலான போட்டியாக இன்று வளர்ந்திருக்கிறது.
ஆங்கில நாளிதழ்கள் ஆனாலும் சரி, தமிழ் நாளிதழ்கள் ஆனாலும் சரி, அவற்றின் முதல் பக்கத்தில் அதுவும் முழு அளவில், வாரத்தின் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் வருகின்றன.  
ஒரு முழுப்பக்க விளம்பரத்திற்கான தொகை 1 கோடி ரூபாய், 1.5 கோடி ரூபாய் என பத்திரிகையின் சர்க்குலேஷனுக்குத் தகுந்தவாறு மாறுகிறது. இந்த முழுப்பக்க விளம்பரங்கள், அரைப்பக்க விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமான ஈட்டுவது மட்டுமே பத்திரிகைகளின் நோக்கமாக இருக்கிறது. சந்தேகமிருப்பின் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, தினமலர், ஆனந்த விகடன், குமுதம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் வரும் முழுப்பக்க, அரைப்பக்க, கால்பக்க, வரி விளம்பரங்கள் ஆக்கிரமிக்கும் பக்க அளவை, பத்திரிகையின் மொத்த பக்க அளவோடு ஒப்பிட்டுப் பாருங்கள், உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். விளம்பரங்களுக்கு கொசுறாக ஆங்காங்கே செய்திகள் இருக்கும்.
கோடிகளில் விளம்பரங்களைப் பெறுவதற்காக பத்திரிகைகள் பன்னாட்டு நிறுவனங்களின், முதலாளிகளின், அரசுகளின் நலன் சார்ந்தே இயங்கத் தொடங்கி விட்டன.
இவற்றின் உச்சமாக, அரசியல் கட்சிகளைப் பின்னிருந்து இயக்கும் ரிலையன்ஸ், டாடா போன்ற முதலாளிகள் இப்போது பத்திரிகைகளையும் பின்னிருந்து இயக்குகின்றனர்.
ஊடகங்களை ஆட்டிப் படைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
பத்திரிகைகளின் பங்குகளை வாங்குவது, நேரடியாக பத்திரிகைகளை நடத்துவது என்பது ஒரு வகை என்றால், விளம்பரங்கள் மூலமாக பத்திரிகைகளைக் கட்டுப்படுத்துவது இன்னொரு வகை. ரிலையன்ஸ் டிஜிட்டல் விளம்பரங்களை முதல் பக்கத்தில் வெளியிட 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்போது, அந்நிறுவனத்தை விமர்சித்து, அந்த விளம்பரத்தை இழப்பதற்கு டைம்ஸ் ஆப் இந்தியாவோ, இந்து பத்திரிகையோ தயாராக இருக்காது.
தமிழ்நாட்டு அளவில் சன் குழுமத்திற்கும், தினமலருக்கும் இடையே வேண்டுமானால் போட்டி, பகை இருக்கலாம். ஆனால், ரிலையன்ஸுக்கும் சன் குழுமத்திற்குமோ, ரிலையன்ஸுக்கும், தினமலருக்குமோ எப்போதும் போட்டி, பகை வராது. ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களை இந்தப் பத்திரிகைகள் ஒரு நாளும் பகைத்துக் கொள்ளாது.
நீங்கள் வணிக ஊடகங்களில் வேலைபார்க்கிற சென்னை நண்பர்களிடம் பேசிப் பார்த்தால் தெரியும், வாசன், எஸ்.பாலசுப்ரமணியன் காலத்தைய ஆனந்தவிகடன் வேறு; இப்போது இருக்கிற ஆனந்தவிகடன் வேறு என்பது.
பெரிய தொகை விளம்பரங்களைத் தருகிற நிறுவனங்களுக்கு எதிரான ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியைக் கொடுத்தால்கூட, அதை வெளியிடுவதற்கு விகடன் குழுமமோ, சன் குழுமமோ அல்லது வேறு எந்த பெரிய செய்தி நிறுவனமோ முன்வராது. தாங்கள் வெளியிடும் செய்தி, தங்களது பத்திரிகையின் வணிகத்தை பாதிப்பதாக இருக்கும் என்றால், அதை வெளியிட மாட்டார்கள். நிறுவனங்களின் பெயரைக்கூட செய்திகளில் குறிப்பிட மாட்டார்கள். “அனுமதியின்றி கட்டப்பட்ட, பிரபல ஐந்துநட்சத்திர ஹோட்டலின் சுற்றுச்சுவர் இடிப்பு”, “பாலியல் அத்துமீறல் - தனியார் கல்லூரியின் ஆசிரியர் கைது” என்று செய்தி வெளியிடுவார்கள். அந்தளவிற்கு எஜமான விசுவாசம் உள்ளவர்கள்!
பத்திரிகை வணிகம் என்றால் வெறும் விற்பனையை மட்டும் அவர்கள் நம்புவதில்லை, விளம்பரங்கள்தான் முதன்மையானது; விற்பனை என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சமே. பன்னாட்டு நிறுவனங்களை விடுங்கள், உள்ளூர் சினிமா நிறுவனங்களைக் கூட இவர்கள் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். அத்தனை வாரப் பத்திரிகைகளும் வருமானத்திற்கு சினிமா விளம்பரங்களையும், பக்கங்களை நிரப்புவதற்கு சினிமா செய்திகளையும், பேட்டிகளையும் நம்பிக் கொண்டிருக்கும்போது, எப்படி சினிமாத் துறையினரை பகைத்துக் கொள்வார்கள்?
கோமாளிக்கப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால்
ஊடகங்களின் இத்தகைய செயல்பாட்டை வேறு ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.
அர்விந்த் கெஜ்ரிவாலை 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மீட்பர் என்பதுபோல் எல்லா ஊடகங்களும் ஊதிப் பெருக்கி, காட்டிக் கொண்டிருந்தன. மோடி அலையை உருவாக்குவதற்கு முன்பு, அர்விந்த் கெஜ்ரிவால் அலையைத்தான் அவர்கள் முதலில் உருவாக்கினார்கள்.
இந்தியாவையே அர்விந்த கெஜ்ரிவால் காப்பாற்றி விடுவார் என்று மக்களிடம் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.  அவர் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது, பதவியேற்பு, முதல்வர் அலுவலகத்திற்குப் போவது, வருவது என அவரின் ஒவ்வொரு அசைவையும் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். அப்படி ஓர் அறிவுஜீவியாக காட்டப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால், தெரிந்தோ தெரியாமலோ ரிலையன்ஸ் நிறுவனத்தின்மீது கைவைக்கிறார். ரிலையன்ஸ் குழுமங்களின் முறைகேடுகளுக்காக முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய முயல்கிறார்.
அதுவரை ஆகப்பெரும் அறிவுஜீவியாக சித்தரிக்கப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மிகப்பெரும் கோமாளியாக ஊடகங்களால் மாற்றப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் கோமாளியாகத்தான் ஊடகங்களில் காட்டப்படுகிறார். அவர் மீண்டும் அறிவுஜீவியாக வேண்டுமானால், முகேஷ் அம்பானி கடைக்கண் காட்டினால்தான் முடியும்.
இந்த ஊடகங்கள் முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அவர்கள் நினைத்தால் கெஜ்ரிவாலை முதல்வராக்கவோ, கோமாளியாக்கவோ முடிகிறது.
அதே நேரத்தில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு நரேந்திர மோடி கடந்த ஒரு பதினைந்து மாதங்களில் எதுவும் செய்யவில்லை என்றாலும் ஊடகங்களினால் உருவாக்கப்பட்ட மோடி அலை இன்னமும் விவாதத்திற்கு கொண்டுவரப்படவில்லை. மோடி அலையின் பிம்பம் இன்னமும் தக்க வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. காரணம், இன்று வரையிலும் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். பெருமுதலாளிகள் தேர்தல் நிதி மூலம் அரசியல் கட்சிகளில் தங்களுக்கான அடிமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்; ஊடகங்கள் மூலமாக தங்களுக்கு எதிரான அரசியல் கட்சிகளை காலி செய்கிறார்கள்.
தருண் தேஜ்பால் மீதான ஊடகங்களின் தாக்குதல்
இன்னுமொரு உதாரணமாக டெஹல்காவின் ஆசிரியர் தருண் தேஜ்பால் கைதைப் பார்ப்போம். அவர் தனது பத்திரிகையில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படுகிறார். இதைவிட கொடுங்குற்றங்கள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கும் பெயிலோ, பரோல் விடுதலையோ கிடைத்து விடுகிறது. ஆனால் தருண் தேஜ்பாலுக்கு பெயில் கிடைப்பதற்கு 8 மாதங்கள் ஆனது.
Tejpal Tehelka
அதோடு மட்டுமல்ல, அவரளவுக்கு “பண்புநிலை கொலை” (Character Assasination) யாருக்கும் செய்யப்படவில்லை. அத்தனை ஊடகங்களும் தருண் தேஜ்பாலுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு எழுதின. தொடர்ந்து முதல் பக்கத்தில் அவரைப் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டன. இத்தனைக்கும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் அளவுக்கு அவர் மக்கள் மத்தியில் பிரபலமானவரோ அல்லது அவர்மீது சாட்டப்பட்ட குற்றம் நாட்டையே குலுக்கிய அல்லது இதற்கு முன்னால் இப்படிப்பட்ட கொடூரம் நடைபெறவில்லை என்ற அளவிற்கோ இல்லை. உள்ளூர் அரசியல்வாதி அல்லது ஒரு சின்னத்திரை நடிகருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்குகூட தருண் தேஜ்பாலுக்கு கிடையாது.
இந்த இடத்தில் அவர் இல்லாமல், அவரை விடப் பிரபலமான ஒரு சின்னத்திரை நடிகர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும்? முதல் நாள் பத்திரிகையின் இரண்டாவது அல்லது மூன்றாவது பக்கத்தில் அரைப்பக்க செய்தி வந்திருக்கும். அவர் கைது செய்யப்பட்ட பின்பு, ஒரு கால்பக்க செய்தியும், பெயில் மறுக்கப்பட்டபோது ஒரு பத்தி செய்தியும் வந்திருக்கும். அதோடு, அந்த செய்தியை ஊற்றி மூடிவிடுவார்கள். ஏனென்றால், அதற்கான செய்தி மதிப்பு (news value) அவ்வளவுதான்.
பிறகு ஏன் தருண் தேஜ்பால் மட்டும் குறிவைத்து ஊடகங்களால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டார்? அவர் பன்னாட்டு நிறுவனங்களின் கனிமவளக் கொள்ளைகளை டெஹல்காவில் அம்பலப்படுத்தினார். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு ஏதுவாக, காடுகளில் இருந்து விரட்டப்பட்ட பழங்குடி மக்களின் துயரங்களைப் பதிவு செய்தார். மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அரசப் படைகளும், சல்வா ஜூடும் போன்ற சட்டவிரோத அமைப்புகளும் நடத்திய மக்கள் படுகொலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.
நரேந்திர மோடி நடத்திய குஜராத் படுகொலைகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். அப்பாவி முஸ்லிம்கள் எப்படி தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதையும், உண்மையில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது இந்துத்துவ அமைப்புகள் என்பதையும் சான்றுகளுடன் நிறுவினார். பல அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஊழல்களைத் துணிந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.
பன்னாட்டு பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் டெஹல்காவை வீழ்த்த தருணம் பார்த்துக் கொண்டிருந்தன. வாய்ப்பு கிடைத்ததும், முதலாளிகளின் ஏவலுக்கு கட்டுப்பட்டு, ஊடக நரிகள் அனைத்தும் தருண் தேஜ்பால் மீது பாய்ந்து குதறின. தருண் தேஜ்பால் போன்றவர்கள் தொடர்ந்து இயங்கக்கூடாது; அவரை பண்புநிலைக் கொலை செய்வதன்மூலம் டெஹல்கா பத்திரிகையின் நம்பகத் தன்மையை வீழ்த்த வேண்டும். இதுதான் பெருமுதலாளிகளின் விருப்பம்; ஊடக அடிமைகள் அதை நிறைவேற்றின.
சுருக்கமாகச் சொன்னால் பெருமுதலாளிகள் விளையாடும் சதுரங்கத்தில் உருட்டப்படும் பகடைக் காய்கள் தான் இந்த ஊடகங்கள். எந்தப் பிரயோசனமும் அற்ற நாடாளுமன்ற விவாதங்கள், அரசியல்வாதிகளின் அக்கப்போர் அறிக்கைகள், உள்ளூர் வெட்டுக் குத்து செய்திகள், நடிகர் நடிகைகளில் யார் யாரை வைத்திருக்கிறார்கள் என்ற ‘சொப்பனசுந்தரி’ வகை கிசுகிசுக்கள், விளையாட்டுச் செய்திகள் – இவைகளுக்கிடையேதான் ‘இந்திய ஊடக தர்மம்’ அல்லாடுகிறது. வெகுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளின் மூலவேரை நோக்கி இந்த ஊடகங்கள் ஒருநாளும் செல்லாது; அங்கு இருப்பது தங்களது எஜமானர்கள் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும்.
மக்களுக்கான ஊடகம் எது?:
இது போன்ற சூழலில்தான், மக்களுக்கான ஊடகம் எது என்ற கேள்வி முக்கியமாகிறது. நம்முடைய கைகளில் இருக்கிற ஊடகம் என்பது என்ன ? கார்ப்பரேட்களின் கைகளில் இருக்கிற ஊடகம் என்பது என்ன? இதுகுறித்த தெளிவு நமக்கு வேண்டும். கார்ப்பரேட்களின் கைகளில் இருக்கிற ஊடகங்களை வெகுமக்களுக்கான ஊடகங்களாக ஒருக்காலும் நம்ப முடியாது. அச்சு ஊடகங்களாகட்டும், திரைப்படங்களாகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும்... உதாரணமாக ‘மதுபானக் கடை’ திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். நல்ல படம்; ஆனால் மக்களைப் போய்ச் சேரவில்லை. ஏனென்றால் தமிழகத் திரையரங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன. அவர்கள் நினைக்கும் படங்கள் மட்டும்தான் அதிக திரையரங்குகளில் வெளியாகும். ஒரு திரைப்படத்தை மிக எளிதாக தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் இலகுவாகிவிட்டன. ஆனால், அதை திரையரங்குகள் அல்லது தொலைக்காட்சிகள் மூலமாக மக்களிடம் நம்மால் கொண்டு சேர்க்க முடியாது. அவை கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
எல்லா ஊடகங்களும்  பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நம்முடைய கையில் - மக்களுக்கான அரசியலை விரும்புவர்களிடம் - இருக்கும் ஓர் ஊடகம் இணையம் மட்டுமே.
மற்ற ஊடகங்களை நாம் கைப்பற்ற மிகப்பெரிய அளவில் நிதிமூலதனம் தேவைப்படுகிறது. சிற்றிதழ் ஒன்றைத் தொடங்குவதாக இருந்தாலும் மாதத்திற்கு 20000 முதல் 40000 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் இணையம் என்பது செலவு குறைவான ஊடகம். உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்; நீங்கள் ஒரு ஊடகத்தை நிறுவி நடத்திவிடமுடியும். உங்களுக்குத் தேவை ஒரு ஸ்மார்ட் போன்; மாதம் ரூபாய் 500 செலவில் இணைய வசதி (data plan). இவை இருந்தால் மிக எளிதாக உங்கள் கருத்துக்களை பொதுத்தளத்திற்கு கொண்டுசென்று விடலாம்.
15 ஆண்டுகளுக்கு முன் இணையம்
இணையம் தமிழகத்தில் அறிமுகமானபோது, சொந்தமாக இணையதளம் தொடங்குவது என்பது பெரிய பொருட்செலவு பிடிக்கிற விஷயமாக இருந்தது. website design, server hosting, site maintenance – இவற்றிற்கு எல்லாம் மிகப்பெரும் தொகையை கட்டணமாக வசூலித்தார்கள். ஏனெனில் அதுகுறித்து தொழில்நுட்ப அறிவோ, விழிப்புணர்வோ அதிகம் பரவலாகாத காலம். முடிந்தவரை அதிகமாக கட்டணம் வசூலித்தார்கள். அதுமட்டுமல்லாமல், இணையப் பயன்பாட்டுக் கட்டணமும் அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 60 ரூபாய் வரை internet center-களில் வசூலித்தார்கள்.
open source பயன்பாடுகள் அதிகரித்த பின்னர் இணைய செலவுகள் குறையத் தொடங்கின. blogspots எனப்படும் வலைப்பூக்கள், பைசா செலவில்லாமல் ஓர் இணையதளத்தை நடத்த வசதி ஏற்படுத்திக் கொடுத்தன. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பத்திரிகைகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பலரும் வலைப்பூக்களில் எழுதத் தொடங்கினர். தொடர்ந்து எழுதுவதன் மூலம், தேர்ந்த எழுத்தாளர்களாகவும் உருவானார்கள்.
இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் தங்களுக்கென வலைப்பூக்கள் தொடங்கி எழுதியவர்களே. இதே காலகட்டத்தில் பிரத்யேக இணையதளங்களைத் தொடங்குவதும் அதிகமானது. அம்பலம், திசைகள், திண்ணை முதலான இணையதளங்கள் வெளிவந்தன. வழக்கம்போல பார்ப்பனர்களே முதலில் இணைய வெளியை ஆக்கிரமித்தனர். பார்ப்பனர்களுக்கு எதிரான ஒரு செய்தியைக் கூட இணையப் பத்திரிகைகளில் வெளியிட முடியாது. thastamil இணைய தளத்தில் (தற்போது tamil.oneindia.com) நான் வேலை பார்த்தபோது புதுவிசை பத்திரிகையை அதில் கொண்டுவந்தோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. அடுத்து, தலித் முரசு இதழைக் கொண்டு வந்தபோது, பார்ப்பன வாசகர்களுக்கு குத்தியது. ஏனெனில் புதுவிசையில் பிராமணர்கள் என்று இருக்கும்; தலித் முரசில் பார்ப்பனர்கள் என்றுதான் குறிப்பிடுவார்கள். அதோடு அம்பேத்கர், பெரியார் கட்டுரைகளும் இருக்கும். ‘பார்ப்பனர்கள் மனம் நோகும்’ என தட்ஸ்தமிழ் ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்தார். ஏனெனில் அப்போது இணையத்தை அதிகம் பயன்படுத்தியது பார்ப்பனர்கள்தான். தொடர்ந்த முட்டல் மோதல்களில் நான் வெளியேறி, கீற்று இணையதளம் ஆரம்பித்தேன்.
கீற்று தொடங்கியபோது 2500 ரூபாய் இருந்தால் ஓர் இணையதளம் தொடங்கிவிடலாம் என்ற அளவிற்கு செலவுகள் குறைந்திருந்தன. பிராட்பேண்ட் வசதியும் (Broadband) தொடங்கப்பட்ட காலம் அது. கீற்று போல் நிறைய இணையதளங்கள் வரத் தொடங்கின.
இணையதளங்களில் ஒரு சிக்கல் என்னவென்றால், இணையதளங்களை நடத்துபவர்களுடைய கருத்தோட்டத்திற்கு ஒத்து வந்தால் மட்டுமே உங்களுடைய கட்டுரைகள் வெளிவரும்.
கீற்று இணையதளத்தில் இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகளின் கட்டுரைகள் வெளிவரும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கட்டுரை வெளிவராது. இது போன்ற நிலைப்பாடு கீற்றிற்கு இருப்பதைப்போல் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதற்கு ஒத்துவரும் படைப்புகள் மட்டுமே அந்த இணையதளத்தில் வெளிவரும்.
இணையதளங்கள், வலைப்பூக்கள் இவை இரண்டிலும் இன்னொரு சிக்கல் இருக்கிறது. ஒரு பிரச்சினையை எழுத, குறைந்தது ஒரு பக்க அளவிலாவது ஒரு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு குறைந்தபட்ச மொழிப்பயிற்சி வேண்டும். எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. இந்த இடத்தில்தான் சமூக வலைத்தளங்களின் தேவை வருகிறது.
சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம்
ஒரு சமூக வலைதளத்தில் எழுதுவதற்கு, நீங்கள் ஓர் எழுத்தாளராக இருக்க வேண்டுமென்கின்ற அவசியமில்லை. இதற்கு முன்னால் நீங்கள் எழுதியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயமில்லை. ஒரு பிரச்சினையைப் பார்க்கும்போதே அது பற்றிய ஒரு கருத்து உருவாகிவிடுகிறது. குடிநீர் வசதி கேட்டோ, வேலைவாய்ப்பு கேட்டோ போராடும் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்துகிறது. போனமாதம் வரை திட்டிக் கொண்டு இருந்தவர்கள், தேர்தல் வரவும், ஒருவருக்கு ஒருவர் தூது அனுப்புகிறார்கள். பணம் படைத்தவனுக்கு ஒரே நாளில் பெயில் கிடைக்கிறது; மக்கள் போராளிகளுக்கு 6 மாதம் ஆகிறது. இதுபோல் உங்கள் மனதைப் பாதிக்கும் நூறு செய்திகளைப் பார்க்கிறீர்கள். ஒவ்வொன்றுக்கும் உங்களால் கட்டுரை எழுத முடியாது. ஆனால், உங்களது ஆதங்கத்தை, கோபத்தை, ஆத்திரத்தைக் கொட்ட ஓர் இடம் வேண்டும். ‘போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்’ என்று ஒரு வரி விமர்சனமாவது எழுத வேண்டும். உங்கள் தரப்பு கருத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களின் தேவையும், வெற்றியும் இந்த இடத்தில்தான் இருக்கிறது.
சமூக வலைதளம் என்பது நண்பர்களுக்கிடையில் அல்லது தனக்கு வேண்டியவர்களைத் தொடர்புகொள்ள, அவர்களிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தளமாகும். அவை தொடங்கப்பட்ட நோக்கமும் அதுவே. நான் என்னுடைய பால்ய நண்பர்களுடனான தொடர்புகளை மீண்டும் புதுப்பித்து, நட்பைத் தொடர்வதற்கு சமூகவலைதளம் பயன்படுகிறது. இதுதான் நோக்கம் என்றாலும், அதையும்தாண்டி சமூக வலைதளங்கள் கருத்துகளைப் பறிமாறிக் கொள்ளும் மாற்று ஊடகமாக உருமாறி விட்டன.
நீங்கள் சமூகவலைதளத்தில் வலுவாக ஒரு சமூகப் பிரச்சினையைக் கொண்டு செல்ல முடியும். தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாக இரண்டாண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் தமிழர்கள் விவாதித்தார்கள். ஒரே நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அந்த விவாதத்தில் பங்கேற்று தொடர்ந்து ட்விட் செய்ததில், ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கினார்கள். இந்தியா முழுவதிலும் அதிகம் பேர் ட்விட் செய்த ‘trending news’ ஆக மீனவர்கள் படுகொலை செய்தி அமைந்து, மறுநாள் வணிக ஊடகங்களிலும் அதுகுறித்து செய்தி வெளியிட்டார்கள்.
இன்றைய சூழலில் எல்லா வணிக ஊடகங்களிலும் சமூகவலைதளங்களுக்கென்று தனியாக ஒரு பக்கமே ஒதுக்குகிறார்கள். டிவிட்டரில், பேஸ்புக்கில் எதைப் பற்றி எழுதுகிறார்கள் என்பதை உன்னிப்பாகப் பார்க்கிறார்கள். அந்தளவிற்கு சமூகவலைதளங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன. எல்லா வணிக ஊடகங்களுக்கும் ஒரு விதத்தில் அச்சம் எழுந்துள்ளது. அவை கேள்வி கேட்காத செய்திகள் குறித்து சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் திடீரென்று வணிக ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவரும். நமக்கே ஆச்சரியமாக இருக்கும், வணிக ஊடகங்கள் இம்மாதிரி செய்திகளை அதிகம் கண்டுகொள்ளாதே? எப்படி இந்த செய்திகள் வெளிவருகின்றன என்பதை நாம் ஆராய்ந்தால், அவை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அதிகம்பேர் விவாதித்த செய்தியாக இருக்கும். எங்கே இவற்றை வெளியிடவில்லை என்றால், நமது ஊடகத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவற்றை வெளியிடுகின்றன.
பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” நாவல் பிரச்சனை சமூகவலைதளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதற்குப் பிறகுதான் வணிக ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது. அதைப்பற்றி அக்கறை எடுத்துக் கொள்கின்றன.
வணிக ஊடகங்களை மட்டுமல்லாது அரசியல்வாதிகளையும் திரும்பிப் பார்க்க வைக்க முடிகிறது. சமூகவலைதளங்களில் வெளிவந்த செய்திகள் அரசியல்வாதிகள் பலரையும் எதிர்வினையாற்ற வைத்திருக்கிறது. கைதுகள் வரையிலும் சென்ற விஷயங்கள் நமக்குத் தெரியும். பால் தாக்கரேயின் மரணத்தையொட்டி மும்பையில் நடத்தப்பட்ட கடையடைப்புக்கு கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் முஸ்லிம் பெண் ஒருவர் கருத்து வெளியிட்டார். மதநம்பிக்கைகளைப் புண்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தி, மகராஷ்டிரா அரசு அவரைக் கைது செய்தது. இதுநாடு முழுவதும் பெரும்விவாதத்தைக் கிளப்பியது. அவருக்கு ஆதரவாக பேஸ்புக், ட்விட்டரில் நிறையபேர் எழுதினார்கள். Press Council of Indiaவின் அப்போதைய சேர்மனும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தலையீட்டினால் அவரை அரசு விடுவித்தது.
சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங்
சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு செய்யப்பட்ட பொய்ப் பிரச்சாரம் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. சமூகவலைதளங்களில் முழுநேரமாக மார்க்கெட்டிங் செய்வதற்காகவே பெரிய நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘மோடியின் வளர்ச்சி’ பிரச்சார ப்ராஜக்டை அப்படியான நிறுவனங்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் கச்சிதமாக முடித்துக் கொடுத்தார்கள்.
narendra modi facebook
தமிழ்நாட்டில் 7 கோடி மக்கள் இருக்கிறார்கள். இதில் 3 கோடி மக்களுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களைக் குறிவைத்து பிரச்சாரம் செய்வது, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக மோடி சென்று பிரசாரம் செய்வதுபோல.. நம்முடைய வீட்டிற்கு மோடி வந்தால் வணக்கம் மட்டுமே சொல்லமுடியும். ஆனால். ஃபேஸ்புக்கில் மோடியின் ஆட்கள் வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக பிரச்சாரம் செய்தார்கள். குஜராத் மட்டும்தான் உலகிலேயே ஒளிவிட்டு பிரகாசிக்கிறது என்பதுபோல் மோடிபற்றி 3 மாதங்களில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஒரு செய்தி வந்து கொண்டே இருந்தது.
“மோடியின் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் ஓர் ஆற்றின் மீது சூரிய ஒளித்தகடுகளை பெரியளவில் பொருத்தியிருக்கிறார். இதன்மூலம் நீரும் ஆவியாவது தடுக்கப்பட்டது. தேவைக்கதிகமாக மின்சாரமும் தயாரிக்கப்பட்டது” என்று தொடர்ந்து ஃபேஸ்புக்கில் வெவ்வேறு நபர்கள் மூலமாக செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்கு பெரும்பாலான மக்கள் லைக் கொடுத்திருப்பார்கள். ஆனால், இதை வடிவமைப்பதன் பின்னணியில் 30, 40 நபர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள். அந்த 30, 40 நபர்களுக்கும் ஃபேஸ்புக்கில் கணக்கு இருக்கும், ட்விட்டரில் கணக்கு இருக்கும்.
அவர்களில் ஒருவர் என்னுடைய நட்பு வட்டத்தின் வழியாக மோடி பற்றிய செய்தியை என் கவனத்திற்குக் கொண்டு வருவார். நான் அதை நம்பினேன் என்றால், அதைப் பற்றி ஒரு ஸ்டேட்டஸ் போடுவேன், என்னுடைய கருத்தை என் வட்டத்தில் இருப்பவர்கள் ஷேர் செய்வார்கள். அவர்கள் நட்பு வட்டத்திற்குத் தெரிய வரும். இது ஒரு தொடர் சங்கிலி. ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இந்தியாவெங்கும் அச்செய்தி கொண்டு செல்லப்பட்டு விடும். ஓர் உண்மையையும், பத்துப் பொய்களையும் கலந்தடித்து மோடியின் வளர்ச்சி நாயகன் பிம்பத்தை இப்படிக் கட்டமைத்தார்கள். அதேவிதமான செய்திகள் முக்கிய வணிக ஊடகங்களிலும் வந்தது. ஒட்டுமொத்தமாக நமது மக்கள் மயங்கினார்கள்.
தேய்ந்துபோன பிரச்சார வழிமுறைகளில் இடதுசாரிகள்
மோடிக்கு எதிராக நாமும் இயக்க இதழ்களில், கீற்று மாதிரியான இணையதளங்களில் எழுதியிருப்போம். ஆனால், அது மிகவும் குறைந்த அளவிலான மக்கள் பரப்பையே எட்டியது. நமக்குள் மட்டுமே நம்முடைய கருத்துகள் உலவிக் கொண்டிருக்கின்றன.  நம்முடைய செயல்பாடுகள் ஒரு கட்டுப்பாடான அரங்கிலேயே இருக்கிறது.
தற்போதைய நிலைமையில், தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாற்று இயக்கங்களும் கருத்துப் பரப்பல் வேலையை மட்டுமே செய்கின்றோம். யாரும் நாளை ஒரு புரட்சியை நடத்திவிடுவதற்கான வேலைகளில் இல்லை. சாதிஒழிப்போ, இந்துத்துவ எதிர்ப்போ, உலகமய எதிர்ப்போ எதுவாக இருந்தாலும் கருத்துப் பரப்பலும், அணிதிரட்டலுமே முக்கிய வேலையாக இருக்கிறது.
அப்படியிருக்கையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை, தகவல் தொடர்பு சாதனங்களை நாம் ஏன் பயன்படுத்த மறுக்கிறோம்?
கணினி, ஸ்மார்ட்போன், பிராண்ட்பேன்ட் கனெக்ஷன் இவற்றையெல்லாம் ஆடம்பரம் என்று இடதுசாரிகளில் பலர் கருதுகிறார்கள். அல்லது அவற்றிலெல்லாம் பரிச்சயம் கொள்வதற்கு சோம்பல்படுகிறார்கள். சமூக, அரசியல் போராளிகள் நிறையபேர் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கமே செல்வதில்லை. பிறகு, நாம் எப்படி ஒரு கருத்தை கட்டமைப்பது? வெகுமக்களை மிக எளிதாக சென்று சேரக்கூடிய ஊடகத்தை நாம் புறக்கணித்தால், நமது கருத்துக்களை எப்படி பரப்புவது?
ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவே ஒரு மார்க்கெட்டிங் டீம் வழியாக மோடி பிம்பத்தை வலுவாகக் கட்டமைத்தார்கள். நாம் எந்தவிதமான லாபநோக்கமும் இல்லாமல் அவர்களைவிடவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம்முடைய கருத்துக்களை எத்தனைபேருக்கு கொண்டு சென்றிருக்கின்றோம்?
தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிற சிற்றிதழ்கள் அதிகபட்சமாக இரண்டாயிரம் நபர்களை சென்று சேர்வது என்பதே சிரமமான செயலாக இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் என்ற மிகப்பெரிய மக்கள் திரளுக்காக வேலை செய்கிற நாம், இரண்டாயிரம் பேர்களை மட்டுமே இலக்காக கொண்டு இயங்குகிறோம். இதையும் தாண்டி பெரியளவிலான வாசகர் வட்டம் தமிழ்நாடு முழுக்க இருக்கிறது.  அவர்கள் அனைவரும் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் எப்படி அணுகப் போகிறோம்?
நான் கோவில்பட்டிக்கு அருகில் சுப்பையாபுரம் என்கிற ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்திருக்கின்றேன். என்னுடைய கிராமத்தில் கடவுள் நம்பிக்கையில்லாமலும், சாதிமத நம்பிக்கைகள் இல்லாமலும் நான் ஒருத்தன்மட்டும் தனியாளாக வளர்ந்தேன். எனது 17 வயது வரை, என் போன்ற ஒத்த சிந்தனையுள்ளவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதோ, இருந்தால் அவர்களோடு எப்படி தொடர்பு கொள்வது என்பதோ எனக்குத் தெரியவில்லை. அது 1997ம் ஆண்டு.
இப்போது அதே கிராமத்தில் (2015 ஆம் ஆண்டில்) அதே 17 வயதில் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். என்னிடம் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கும். ஃபேஸ்புக்கில் என்னைப் போன்ற ஒத்த கருத்துடையவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பேன். தோழர் இரா.முருகவேளுடன் நட்பு ஏற்பட 10 ஆண்டுகள் தாமதமாகியிருக்காது. என் போன்ற கிராமத்து இளைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு நாம் பேஸ்புக்கில், ட்விட்டரில் இருக்கிறோமா?
அவர்கள் நம்மிடமிருந்து தகவல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்த விதத்திலும் அவர்களை அணுகாமலேயே இருக்கின்றோம். நாம் தவறுவதால், அவர்களை வலதுசாரிகள் கொத்திக் கொண்டு போகிறார்கள்.
நம்மிடம் இருக்கும் பெரிய குறை, ஏற்கெனவே நமக்கு பழகிப்போன கருத்துப் பரிமாற்ற வழிமுறைகளிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான்.
நம்முடைய கருத்துகளை எப்படியெல்லாம் வெளியிடுகிறோம்? ஒரு பொதுக்கூட்டம் அல்லது தெருமுனைப் பிரச்சாரம் என்றால், உடனே 1000 துண்டறிக்கைகளை அச்சிட்டு வெளியிடுகிறோம். சிறுவெளியீடுகளைக் கொண்டு வருகிறோம். இதையும் தாண்டி சிந்திப்பதாக இருந்தால், சின்னதாக ஒரு ஆவணப்படம் வெளியிடுகின்றோம். ஆயிரம் துண்டறிக்கை வெளியிடுவதாக இருந்தாலும், அதற்கு 600, 700 ரூபாய் செலவு பிடிக்கும். அதை விநியோகிக்க தோழர்கள் வீதி, வீதியாக செல்ல வேண்டும். நம்முடைய நோக்கம் நம் கருத்து மக்களிடம் பரவ வேண்டும் என்பதாக இருந்தால், அதை இந்த செலவும், அலைச்சலும் இல்லாமல் இணையதளம் வழியாக ஆயிரம் பேரை விட அதிகமாக, இலட்சம் பேரிடம் கொண்டு செல்ல முடியும்.
பேருந்து நிறுத்தத்தில் ஆயிரம் பேர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்கும்போது நமக்கான பார்வையாளர்கள் இலக்கை முழுமையாக எட்டிவிட முடிவதில்லை. ஆயிரம் பேரிடம் விநியோகித்தால், அதில் 200க்கும் குறைவானவர்களே அதை வாசிக்கிறார்கள். மீதி 800 பேருமே வாங்கிய துண்டுப் பிரசுரங்களை கசக்கி வீசியெறிந்து விடுகிறார்கள். நம்முடைய உழைப்பும், பணமும் வீணானதுதான் மிச்சம்.
சமூக வலைத்தளங்களின் வீச்சு
சமூக வலைத்தளங்கள் என்பது துண்டறிக்கைகள் போலல்ல. ஒரு குறிப்பிட்ட இலக்கில் பார்வையாளர்களை எளிதாக அணுகமுடியும். குறிப்பிட்ட தொழில்சார்ந்து, குறிப்பிட்ட கல்விப்புலம் சார்ந்து அல்லது அவர்களுடைய பொழுதுபோக்கு சார்ந்து ஒரு வட்டத்தை நம்மால் அணிதிரட்ட முடியும்.
நீங்கள் தையற்காரர் என்றால், உங்களால் ஃபேஸ்புக்கில் தையற்கலை தொழிலாளர்களை எளிதாக அணிதிரட்ட முடியும். கோவையில் காந்திபுரத்தில் உள்ளவர்களை மட்டும் அணி திரட்ட வேண்டுமென்றால், ஃபேஸ்புக்கில் மிக எளிதாகச் செய்ய முடியும். நேரில் சென்று மாதக்கணக்கில் உழைக்க வேண்டியதை, ஃபேஸ்புக்கில் இரண்டு, மூன்று நாட்களில் செய்துவிட முடியும். keetru.com 
(தொடரும்)
- கீற்று நந்தன் (editor@keetru.com)

கருத்துகள் இல்லை: