வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஸ்டார் டிவி இந்திராணி தன் மகளையே கொலை செய்தார்! Indrani Mukerjea in police custody: Wife of ex-Star TV CEO


முறையற்ற காதலால் மகளை கொன்று உடலை காட்டில் வீசிய வழக்கில் மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி பெண் நிறுவனர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இந்த கொலை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனர் ‘ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இவர் ‘9எக்ஸ் மீடியா’ என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனராக உள்ளார்.
இந்திராணியின் கார் டிரைவர் ஷாம் மனோகர் ராய் (வயது 43). இவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அவர் கொலை வழக்கிலும் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஷாம் மனோகர் ராயை கடந்த 21–ந் தேதி மும்பை கார் போலீஸ் நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதிர்ச்சி தகவல்கள் இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்டார். 9எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனரான இந்திராணி அவரது தங்கை ஷீனா போராவை படுகொலை செய்து மும்பையை அடுத்த ராய்காட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வீசியதாகவும், அதற்கு தான் உதவியதாகவும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
முதலில் இதை போலீசாரால் நம்ப முடியவில்லை. உயரிய அந்தஸ்தில் இருப்பவர் மீது இப்படி ஒரு கொலை பழியா? என்று போலீசார் திகைத்து போய் நின்றனர். அவரிடம் தீவிர விசாரணைக்கு பிறகே, அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து மும்பை ஒர்லி பகுதியில் வசித்து வந்த இந்திராணியை கார் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா அந்த போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து இந்திராணியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்.
கொலையானது தங்கை அல்ல; மகள் அந்த விசாரணையில், ஷீனா போராவை தானே கொலை செய்ததாக உண்மையை ஒப்புக் கொண்டார். முதலில் கொலையான ஷீனா போரா தனது தங்கை என்று இந்திராணி போலீசாரிடம் கூறி வந்தார்.
ஆனால் உண்மையை நீண்ட நேரம் அவரால் மறைக்க முடியவில்லை. கொலை செய்யப்பட்ட ஷீனா போரா தான் பெற்றெடுத்த மகள் என்ற அடுத்த குண்டை தூக்கி போட்டார். அப்போது தான் கொலையின் பின்னணியை போலீசாரால் உணர முடிந்தது.
காதல் திருமணம் ஸ்டார் இந்தியா முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜிக்கும், இந்திராணிக்கும் கடந்த 2002–ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. பீட்டர் முகர்ஜி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது முதல் மனைவி மூலம் அவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
இதேபோல இந்திராணியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஷீனா போரா (கொலையானவர்) என்ற மகளும், மிக்கேல் போரா என்ற மகனும் உள்ளனர். ஆனால் இந்திராணி தனக்கு ஏற்கனவே ஆன திருமணத்தையும், அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றிய தகவல்களையும் பீட்டர் முகர்ஜியிடம் மூடி மறைத்து விட்டார். மாறாக மகள் ஷீனா போராவை தனது தங்கை என்றும், மகன் மிக்கேல் போராவை தனது தம்பி என்றும் கூறி விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் தான் பீட்டர் முகர்ஜியும், இந்திராணியும் காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து 2007–ம் ஆண்டு கணவர்–மனைவி இருவரும் சேர்ந்து 9எக்ஸ் மீடியா என்ற தனியார் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தனர்.
முறையற்ற காதல் இந்த நிலையில் பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலுக்கும், இந்திராணியின் மகள் ஷீனா போராவுக்கும் காதல் மலர்ந்தது. இந்த முறையற்ற காதலை இந்திராணி கடுமையாக எதிர்த்தார். மகளை கண்டித்தார். ஆனால் மகள் கேட்கவில்லை. எனவே ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இந்திராணி தான் பெற்ற மகள் என்றும் கூட பாராமல் நெஞ்சை கல்லாக்கி கொண்டு ஷீனா போராவை படுகொலை செய்தார். பின்னர் தனது டிரைவர் ஷாம் மனோகர் ராய் உதவியுடன் மகளின் உடலை ராய்காட் காட்டுப்பகுதியில் வீசி வந்தார். இந்த கொடூர கொலை சம்பவம் 2012–ம் ஆண்டு நடந்தது.
ராகுலுடன் காதல் உறவை முறியடிக்க ஷீனா போராவை அமெரிக்கா அனுப்பி வைத்து விட்டதாக இந்திராணி தனது கணவரிடம் தெரிவித்து அமைதியாக இருந்து கொண்டார்.
உடல் பாகங்கள் மீட்பு இந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் பாகங்களை ராய்காட் போலீசார் காட்டுப்பகுதியில் இருந்து மீட்டனர். அந்த பெண் கொலை செய்யப்பட்டதை போலீசார் உணர்ந்தனர். ஆனால் அந்த பெண் யார் என்பது பற்றியும், கொலையாளிகள் யார் என்பது பற்றியும் போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை.
எனவே அப்பெண் மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டு, அந்த வழக்கை மூட்டை கட்டி ஒரு ஓரமாக வைத்து விட்டனர்.
கோர்ட்டில் ஆஜர் தற்போது இந்திராணி மற்றும் அவரது டிரைவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் உடல் வீசப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரையும் வருகிற 31–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரிடமும் போலீசார் கொலையின் பின்னணி பற்றி கூடுதல் விவரங்களை பெறவும், ஆதாரங்களை சேகரிக்கவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்த இந்திராணியின் முதல் கணவர் சஞ்சீவ் கண்ணா என்பவரை போலீசார் பிடித்து மும்பை கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பீட்டர் முகர்ஜி, ராகுல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இந்த கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘கொலையான ஷீனா எனது மனைவியின் தங்கை என்றே நம்பினேன்’
கணவர் பீட்டர் முகர்ஜி உருக்கம்


‘ஷீனா போரா தன்னுடைய மனைவியின் மகள் என்பது எனக்கு தெரியாது’ என்று அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜி அதிர்ச்சிப்பட தெரிவித்தார்.

சகோதரி என்று தான் நம்பினேன்

தன்னுடைய இரண்டாவது கணவரின் மகனுடன் ஏற்பட்ட முறையற்ற காதலால், பெற்ற மகளையே தனியார் தொலைக்காட்சி நிறுவனர் இந்திராணி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவருடைய இரண்டாவது கணவர் பீட்டர் முகர்ஜி நிருபர்களுக்கு அளித்த உருக்கமான பேட்டி வருமாறு:-

இதுபோன்ற ஒரு தர்மச்சங்கடமான நிலையை என் வாழ்நாளில் ஒருபோதும் நான் அனுபவித்தது கிடையாது. இன்றைக்கு நான் காணும் செய்தி, என் வாழ்வில் ஒருபோதும் எதிர்பாராதது. என் மனைவி (இந்திராணி) சம்பந்தப்பட்ட தகவல்களை என்னால் நம்ப முடியவில்லை. ஷீனா போரா அவருடைய சகோதரி என்று தான் இத்தனை ஆண்டுகளாக நான் நம்பி வந்தேன். இதை தான் இந்திராணியும் என்னிடம் கூறினார்.

மகனிடம் சண்டை போட்டேன்

நான் யாரை அவருடைய தம்பி என்று நம்பினேனோ, அவர் இந்திராணியின் தம்பி அல்ல, அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகன் என்பதையும் அறிந்து திகைப்பில் ஆழ்ந்தேன். இந்திராணிக்கு என்னுடன் நடந்த திருமணம் மட்டும் தான் எனக்கு தெரியும். மற்றவை பற்றி எனக்கு தெரியாது. இன்றைக்கு என் கண் முன்னால் நடக்கும் அனைத்தும், எனக்கு புதியதாக தோன்றுகிறது.

ஷீனா போரா தன்னுடைய சகோதரி என்று இந்திராணி அடிக்கடி என்னிடம் சொல்வார். ஷீனாவும் இதை தான் கூறினாள். ஒரு முறை என்னுடைய மகன் ராகுல், ஷீனா மீது காதல் வயப்பட்டான். அப்போது, ஷீனா, இந்திராணியின் சகோதரி அல்ல, மகள் என்று சொன்னான். ஆனால், அதில் உண்மை இல்லை என்று நான் அவனிடம் கூறினேன். நான் என் மனைவி இந்திராணியை முழுவதுமாக நம்பினேன். இதனால் எனக்கும், என் மகன் ராகுலுக்கும் இடையே சண்டை கூட ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டாக நான் அவனிடம் பேசாமல் இருக்கிறேன்.

மாயமானது பற்றி தெரியாது

ஷீனா போரா மாயமானது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக இந்திராணி என்னிடம் கூறினார். நான் பேஸ்புக்கில் இல்லை. ஆனால் லாஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட இடங்களுக்கு ஷீனா போரா சென்றிருந்ததாக என்னிடம் புகைப்படத்தை காட்டினார்கள். எனவே அவர் அமெரிக்காவில் தான் இருக்கிறார் என்று நான் நம்பினேன். அவருடைய தொலைபேசி எண்ணும் என்னிடம் கிடையாது.

அதேசமயம், ‘ஏதோ தவறு நடக்கிறது’ என்று என் மகன் என்னிடம் கூறினான். ஆனால், ஷீனா போரா இங்கிருப்பதை அவருடைய பெற்றோர் விரும்பவில்லை, எனவே தான் அவரை அமெரிக்கா அனுப்பி இருப்பதாக கூறினேன். இதைத்தொடர்ந்து, என்னுடன் பேசுவதை ராகுல் நிறுத்திக் கொண்டான்.

விசாரணைக்கு ஒத்துழைப்பேன்

ஷீனா போரா கொலையுண்ட செய்தியை ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நான் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன்.

எனது மனைவியின் பெற்றோரை பற்றி கேட்டேன். ஆனால் என்னை விட நீங்கள் 16 வயது மூத்தவர் என்பதால் நமது திருமணத்தை அவர்கள் ஏற்கவில்லை என்று கூறி பெற்றோரை சந்திக்க விடாமல் செய்து விட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினால், மகிழ்ச்சியோடு ஒத்துழைப்பு அளிப்பேன். நான் மிகவும் தூய்மையானவன்.

இவ்வாறு பீட்டர் முகர்ஜி தெரிவித்தார்.

துப்பாக்கியால் கசிந்த ஷீனா கொலை

மும்பையில் நடந்த ஷீனா போரா கொலை வழக்கில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷீனா போரா 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கழுத்தை நெரித்தும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் கொலை செய்யப்பட்டு உள்ளார். 3 ஆண்டுகளாக புதைந்து கிடந்த இந்த கொலை, இந்திராணியின் கார் டிரைவர் ஷாம் மனோகர் ராய் வைத்திருந்த துப்பாக்கியால் தான் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. அவர் சட்டவிரோத ஆயுதம் வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தான் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த துப்பாக்கியை வைத்து எத்தனை பேரை கொன்றாய் என்று போலீசார் தங்களது பாணியில் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை கக்கி விட்டார். இந்திராணியும், அவருடன் இருந்த ஆண் ஒருவரும் (இந்திராணியின் முதல் கணவர் சஞ்சீவ் கண்ணா) ஆகிய இருவரும் சேர்ந்து ஷீனா போராவை கொலை செய்தனர். அப்போது அந்த ஆண் நபர் யார் என்று தனக்கு தெரியாது. மேலும் ஷீனா போரா இந்திராணியின் மகள் என்றும் தனக்கு தெரியாது. அவரது தங்கை என்று தான் எனக்கு தெரியும். இந்த கொலையில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. உடலை காட்டுப்பகுதியில் வீசவே நான் உதவி செய்தேன் என்று டிரைவர் வாக்குமூலம் அளித்தார். இந்த கொலையில் வேறு ஏதாவது பின்னணி உள்ளதா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: