வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

குஜராத்தில் வெடித்தது இட ஒதுக்கீட்டு போர்! அங்கும் பெரியார் சென்றுவிட்டார் ! இனி விடமாட்டார்! தி க தலைவர் வீரமணி முழக்கம்!


இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரைக்கு வந்து தோள் தட்டினார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அவரின் குஜராத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ! காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார் அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா - இன்றோ அந்த அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ பற்றிக் கொண்டு விட்டது. ஆம் காந்தியார் மாநிலத்தில் பெரியார் நுழைந்துவிட்டார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மிக ஆவேசமாக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது - பட்டேல்கள் என்ற பட்டிதார் வகுப்பினரால்.
1980-களில் இட ஒதுக்கீட்டை எதிர்த்த குஜராத்தில் இன்று இட ஒதுக்கீடு கேட்டுக் கிளர்ச்சி!

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாதவராவ் சோலங்கி அவர்கள், இட ஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்தார்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அப்போது பெருங்குரல் கொடுத்தது - குஜராத்தின் செல்வாக்கான இதே பட்டிதார் ஜாதியாகிய பட்டேல்கள் பிரிவினர்.
அதை ஒரு வாய்ப்பாகக் கருதி, தமிழ்நாட்டிலும் (அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது) உரிமை பறிக்கப்பட்ட முற்பட்ட வகுப்பினர் என்ற ஒரு புது அமைப்பாக மார்த்தாண்டம் பிள்ளை என்ற ஒரு முன்னேறியவரின் (சைவப் பிள்ளை) தலைமையை வைத்து, பார்ப்பனர்கள் பின்னணியில் இருந்து கொண்டு, கொம்பு சீவி விட்டு, இட ஒதுக்கீட்டை ஒழிக்க நீதிமன்ற வழக்கு என்ப தைப் போட்டதோடு, வீதியிலும் போராட ஆயத்த மாயினர்.
திராவிடர் கழகம் பதிலடி!
உடனே திராவிடர் கழகத்தின் சார்பில் நாம் தமிழ்நாட்டை ஒருபோதும் குஜராத் ஆக - அதாவது இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராட அனுமதிக்க மாட்டோம் என்ற எதிர் போராட்டம் - பேரணி - உண்ணும் விரதம் எல்லாம் அறிவித்தோம்; கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டோம்.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து மதுரைக்கு வந்து தோள் தட்டினார் அமித்ஷா - இப்பொழுதோ குஜராத்திலேயே கிளர்ச்சி!
பிறகு இன்று,
சில வாரங்களுக்குமுன் (6.8.2015) மதுரையில் சில ஜாதியினரை பார்ப்பன குருமூர்த்திகள் அக்கிரகார வளர்ப்புக் கிளிப் பிள்ளைகளாக்கி எங்களுக்கு கீழ்ஜாதி அந்தஸ்து கூடாது; உயர்ந்த ஜாதியாக எங்களை எண்ணவேண்டும். எனவே, எங்களுக்கு இட ஒதுக் கீடே வேண்டாம் என்று பேச வைத்து, அதற்கு அகில இந்திய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவையே மதுரைக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுபோல, பேசி, முன்னோட்டம் பார்த்தனர். இட ஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடியவர் களாகி விட்டனர் என்று அவர்கள் தலையில் அய்ஸ் கட்டிகளை வைத்தார்.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். குழாம் எல்லாம் இப்படி சில வித்தைகளை முதல் முறை அரங்கேற்ற ஒத்திகை பார்த்தனர்.
22 வயது இளைஞர் ஆட்சிக்குச் சவால்!
ஆனால், குஜராத்தில் இன்று பா.ஜ.க. ஆட்சியை நோக்கி, இட ஒதுக்கீடு சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பட்டேல் ஜாதியினர் 18 லட்சம் பேர் ஓர் இடத் தில் திரண்டு 22 வயது இளைஞர் ஆர்டிக் பட்டேல் குஜராத் பா.ஜ.க. அரசுக்கு நிபந்தனை விதிக்கிறார்!
அவர்களது எதிர்ப்புக்குரலின் வெப்பத்தைத் தணிக்க அரசே இறங்கி - கிளர்ச்சிக்காரர்களின் கோரிக்கைகளை சமாதானப்படுத்த,
1. பேரணி, கூட்டம் நடத்திட ஜி.எம்.டி.சி. (மைதா னத்தை) அரசு வாடகை வாங்காமல் இலவசமாகத் தருகிறது.
2. வெளியூரிலிருந்து வரும் அத்தனை வண்டிகள், கார்கள் - பேருந்துகளுக்கு சுங்கவரி - டோல் கேட்டுகளில் வசூலிக்கப்படவேண்டாம் - அதனை  தள்ளுபடி செய்து அறிவிக்கிறது!
சமூகநீதி எங்களுக்கும் தேவை என்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மிக ஆவேசமாக போர்க்கொடி உயர்த்தி - பட்டேல்கள் என்ற பட்டிதார் வகுப்பினரால் நடத்தப்பட்ட பேரணியில் திரண்ட லட்சோப லட்ச மக்கள் திரள்.
பிரதமர் மோடி இறங்கி வரும் நிலை!
அந்த இளைஞரோ,
எங்கள் கோரிக்கை மனுவை முதலமைச்சர் இங்கே வந்து வாங்கிச் செல்வதோடு, கோரிக்கையை நிறை வேற்ற உறுதி தர முன்வரவேண்டும்.
இல்லையேல் எங்கள் உண்ணாவிரதம் (ஏற்கெ னவே சில இடங்களில் காவல்துறை தடியடி), கடை மூடல் போன்ற நிகழ்வுகள் தொடரும்.
பிரதமர் மோடி சாந்தி நிலவட்டும் என்று பேசி யுள்ளார்; அதனை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள்  ஒலி-ஒளிபரப்புகின்றன.
இது எப்படி முடியுமோ என்ற கவலை குஜராத் பா.ஜ.க. ஆர்.எஸ்.எசுக்கு ஏற்பட்டுள்ளது!
எங்களது இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால், 2017 இல் ஆட்சி அமைத்து, நாங்களே இட ஒதுக்கீட் டுக்கான ஆணையைப் பிறப்பிப்போம் என்று முழங்கியுள்ளார் அந்த இளைஞர் தலைவர்!
நிதிஷ்குமார் பச்சைக்கொடி!
பட்டேல்கள் குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோருவது நியாயமானதுதான்; அதனை நான் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார்,  பேசியுள்ளார்!
இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்; வரலாறு திரும்புவது மட்டுமல்ல; ஆங்கிலப் பழமொழிபோல் சக்கரம் முழுமையான வட்டத்தைச் சுற்றி வந்துள்ளது - அதாவது முழுமையடையத் தொடங்கியுள்ளது என்ற கருத்து (The Wheel has come to a full circle) என்பது போன்ற நிலை குஜராத்தில் 30, 35 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
காந்தியார் மாநிலத்தில் பெரியார்!
காந்தியார் பிறந்த மாநிலத்தில் பெரியார் கொள்கைப்பூர்வமாக வரவேற்கப்படுகிறார் என்று தானே அதற்குப் பொருள்!
தமிழ்நாட்டிலே சக்கரம் முழுமையாகச் சுழன்று வந்ததே! எந்த பார்ப்பனர்கள் கம்யூனல் ஜி.ஓ., வகுப்புரிமை கூடாது என்று கோர்ட்டுகளுக்குச் சென்று ஒழித்துக் கட்டினரோ அவர்களே இன்று, சமூகநீதியை இனி அசைத்துவிட முடியாது என்பதை உணர்ந்து, சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்ற பரிதா பத்திற்குரிய கணவனைப் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு எங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று அன்றைய முதல்வர் கலைஞரை, திராவிடர் கழகத்தை அணுகவில்லையா? அது எதைக் காட்டுகிறது?
இதுபோன்ற வகுப்புவாரி உரிமைக் குரல் சமூகநீதி கோரி இனி பல மாநிலங்களிலும் ஓங்கி ஒலிக்கவே செய்யும்; அது காலத்தின் கட்டாயம்.
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டுக்குக் குரல்
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பதை இன்று பிரபல அரசியல் கட்சிகளும் கொள்கை அளவில் - நாம் தொடக்கத்தில் இருந்தே கூறியதை ஏற்றுக்கொண்டுள்ளார்களே!
எனவே, சுவர் எழுத்தைப் படிக்க மத்திய மற்றும் குஜராத் போன்ற வட மாநில அரசுகள் தவறக்கூடாது!
ஆதிக்கவாதி எளிதில் தரமாட்டார் -
அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்!
(குறிப்பு: அடிமை ஜாதிகள் (Servile Class) என்பது டாக்டர் அம்பேத்கர் தந்த பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் அனைவரையும் உள்ளடக்கிய சொற்றொடர் ஆகும்).


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை: