வியாழன், 15 ஜனவரி, 2015

ஜல்லிகட்டு பகைவர்களின் பின்புலம் என்ன?


மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்! தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் வேரோடு அழிக்கப்பட்டு வருகிறது. மேற்கத்திய கலாசார மோக சிறைக்குள் மக்கள் பிடிப்பட்டு கிடக்கிறார்கள். வீரவிளையாட்டாக திகழ்ந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுமா என்பது இன்னமும் விடைதெரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதன்தொடர்ச்சியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விஜயகுமார், ஆபிரகாம், அயூப்கான் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வனவிலங்குகள் பாதுகாப்பு பட்டியலிலிருந்து காளைகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தவர்கள் அதை கைவிட்டுள்ளனர். அதோடு ஜல்லிக்கட்டுக்கான தடை உத்தரவு எப்போது நீக்கப்படும் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடக்கக் காலத்திலிருந்து ஈடுப்பட்டு வந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறுகையில், "வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் காளைகள் சேர்க்கப்பட்டது 2011 ஜூலை 11ஆம் தேதி. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்த இந்த தவறை நீக்க போராடி வருகிறோம். நிச்சயம் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளும். அதன்தொடக்கமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து காளைகள் சேர்க்கப்பட்ட அரசாணையில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திலிருந்து காளைகள் நீக்கப்பட்டால் நிச்சயம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதற்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

ஜல்லிக்கட்டுக்கு தடை பெறப்பட்ட பின்னணியில் சில வெளிநாட்டு நிறுவனங்களும், இந்த விளையாட்டு குறித்து விவரம் தெரியாதவர்கள் உள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது தமிழகத்தில் பெருமையாக உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை பார்ப்பதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்படிப்பார்த்தால் இறைச்சிக்காக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்படுகின்றன. இந்த மாடுகள் கொடூரமாகவும் கொல்லப்படுகின்றன. அவற்றை ஏன் இந்த ஆர்வலர்கள் தடுக்க முன்வரவில்லை. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய காளை இனங்களை அழிக்க சிலர் செய்யும் சதியே ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை. விரைவில் இந்த தடை நீங்கி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும்" என்றார்.
தமிழ்நாடு கோ கிராம் சேவா சமதி என்ற அமைப்பின் மாநில செயற்குழு தலைவர் ஜயப்பன் கூறுகையில், "ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அநியாய விலைக்கு காளைகள் விற்கப்பட்டு விட்டன. இப்போது தடை நீக்கப்பட்டாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஜல்லிக்கட்டை நடத்தினால் காளைகளை காப்பாற்றலாம். இப்போது கிராமங்களில் காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை 2 சதவீதம் மட்டுமே உள்ளன. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்" என்றார்.

சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் காத்திக்கேயா சிவசேனாதிபதி கூறுகையில், "தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உம்மபலச்சேரி என்ற இனமும், மதுரை மாவட்டத்தில் புளியகுளம் என்ற இனமும், தேனி மாவட்டத்தில் மலைமாடு என்ற இனமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் ஆலாம்பாடி என்ற இனமும் இருந்தன. இதில் ஆலாம்பாடி என்ற இனம் அழிந்து விடடது. இன்றைய நிலவரப்படி ஒரு லட்சம் காங்கேயம் மாடுகளும், 22 ஆயிரம் பர்கூர் மலைமாடுகளும், 30 ஆயிரம் புளியகுளம் மாடுகளும், 30 ஆயிரம் மலைமாடுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் காங்கேயம் மாடுகள் கடந்த 1990ல் 11 லட்சத்து 94 ஆயிரம் மாடுகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மாட்டு இனங்களை அழிப்பதற்காகவே பீட்டா உள்ளிட்ட சில வனவிலங்கின அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறார்கள். இவர்களுக்கு எருமைக்கும் மாடுக்கும் வித்தியாசம் தெரியாது.

வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்டை போது கூட மாடுகளுக்கு இந்தளவுக்கு ஆபத்துக்கள் வந்தது இல்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டின் போது தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் காளைகள் பங்கேற்றன. தடை விதித்ததால் சுமார் 70 ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் 50 ஆயிரம் காளைகள் மட்டுமே பங்கேற்கும் நிலை உள்ளது. தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டால் இந்த காளைகளும் விற்கப்பட்டு விடும். இதில் மறைந்திருக்கும் உண்மை என்றால் ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும். எனவே இதுபோன்ற விபரீதங்கள் நிகழாமல் தடுப்பது ஆட்சியாளர்களின் கடமை. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்படும் போது மாடு வளர்க்கும் ஆர்வம் நிச்சயம் மக்கள் மத்தியில் ஏற்படும்" என்றார்.

பீப்பிள் பார் கேட்டில் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னாவிடம் பேசுகையில், "வனவிலங்கின மீது ஆர்வலர்கள் அக்கறை செலுத்துவது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் தமிழக மாட்டுச் சந்தைகளில் அடிமாட்டு விலைக்கு மாடுகளை வாங்கி கேரளாவுக்கு கடத்தும் கும்பலை குறித்து யாரும் கண்டுக்கொள்வதில்லை. ஜல்லிக்கட்டுவை விட இந்த கும்பல்தான் மாடுகளை அதிகளவில் கொடுமைப்படுத்துகிறது. குறிப்பாக மாடுகளின் கண்களில் மிளகாய் வைத்து கொடூரமாக கொல்கின்றனர். இதை தடுக்க வனவிலங்கின ஆர்வலர்கள் அக்கறை செலுத்த வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் கூறுகையில், "2007ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து அதன்பிறகு ஜல்லிக்கட்டுவை நடத்தினோம். இப்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையையும் நீக்க அனைத்து நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. தடை நீக்கப்பட்டதற்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அதற்காக காளைகளும் தயார் நிலையில் உள்ளன" என்றார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குப் பின்னணியில் இவ்வளவு விஷயமா!  news.vikatan.com/

- எஸ்.மகேஷ்

கருத்துகள் இல்லை: