வியாழன், 15 ஜனவரி, 2015

அவனியாபுரத்தில் போலீஸ் தடை! 21 சோதனை சாவடிகளில் வீரர்கள் நுழையாமல் தடுக்கப்படுகிறது

மதுரை அவனியாபுரத்தில் 21 சோதனைச்சாவடிகள் அமைத்து காளைகள், வீரர்கள் ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை விலக்க வும், மீண்டும் ஜல்லிக்கட்டு நடை பெறவும் தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இது வரை இறுதியான முடிவு எட்டப்பட வில்லை. இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம் (தை 1), பாலமேடு (தை 2), அலங்கா நல்லூர் (தை 3) ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. நேற்று இரவு வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்தோ, அரசிடமிருந்தோ எவ்வித உத்தரவும் கிடைக்காததால் அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இதையடுத்து இன்று தடையை மீறி அங்கு ஜல்லிக்கட்டு நடப் பதை தடுக்க மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள் ளனர். வெளியூர்களில் இருந்து அவனியாபுரத்துக்குள் நுழையும் சாலைகளில் 14 இடங்களில் நேற்றிரவு முதல் தற்காலிக சோத னைச் சாவடி அமைத்து, ஜல்லிக் கட்டு காளைகளோ, வீரர்களோ அல்லது ஜல்லிக்கட்டு ஆர்வலர் களோ மைதானத்துக்குச் சென்று விடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர அவனியாபுரத்தி லேயே வசிப்பவர்களிடம் சுமார் 175 காளைகள் இருப்பதால் அந்த காளைகளையும் மைதானத்துக் குள் கொண்டு வந்துவிடாமல் தடுப்பதற்காக ஊருக்குள்ளேயே 7 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். இது அவனியாபுரத்துக்கு சீல் வைத்துள்ளதுபோல் காணப் படுகிறது. 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அவனியாபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும் இங்கு கொண்டுவரப்படும் காளை களை பறிமுதல் செய்து, தங்க வைப்பதற்காக சிலைமான், திருப் பரங்குன்றம் ஆகிய 2 இடங்களில் காலி இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதுபற்றி மாநகர காவல் ஆணை யர் சஞ்சய்மாத்தூர் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே அதை நடத்தக்கூடாது என விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரி வித்துள்ளோம். மீறி நடத்த முயற்சித்தால் அதை தடுப்பற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு போடப்பட்டுள்ளன. விதிமீற லில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
கிராமங்களிலும் பதற்றம்
இதற்கிடையே உச்ச நீதிமன்ற தடையை மீறி தென் மாவட்டங் களிலுள்ள சில கிராமங்களில் இன்றும், நாளையும் பொது இடங்களில் காளைகளை அவிழ்க்க சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அது போன்ற கிராமங்களின் பட்டியலை காவல்துறையினர் சேகரித்து அங்கும் கண்காணிப்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதன்படி மதுரை மாவட் டத்தில் சேடபட்டி அருகே யுள்ள சின்னக்கட்டளை, உத்தப்ப நாயக்கனூர் அருகேயுள்ள வெள்ளி மலைப்பட்டி, அய்யனார்குளம், மேலூர் அருகேயுள்ள தும்பைப் பட்டி, பதினெட்டாங்குடி, கீழவளவு அருகேயுள்ள தனியா மங்கலம், காடுவெட்டி அருகே யுள்ள குருவித்துறை, கோவில் குருவித்துறை, ஐயப்பநாயக்கன் பட்டி ஆகிய கிராமங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வருவாய்த் துறை உதவியுடன், காளை வளர்ப்போரை தொடர்புகொண்டு பொது இடங்களில் அவிழ்க்கக்கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐ.ஜி. அவசர ஆலோசனை
இதேபோன்ற சூழல் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நிலவு கிறது. எனவே இந்த சூழலை சமாளிப்பது தொடர்பாகவும், ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு அனு மதி கிடைத்துவிட்டால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் தென்மண்டல ஐ.ஜி. அபய் குமார்சிங் நேற்று தனது அலு வலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் டி.ஐ.ஜி. அனந்த் குமார் சோமானி, மதுரை எஸ்.பி. விஜயேந்திரபிதாரி, சிவ கங்கை எஸ்.பி. அஸ்வின் முகுந்த் கோட்னீஷ் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூரில் கருப்புக் கொடி
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் புதன்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் உண்ணாவிரதம் நடந்த நிலையில் நேற்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல், கடைவீதி, பிரதான சாலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.
இதையறிந்த சமயநல்லூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் காந்தசொரூபன், கிராமத்தினர் மற்றும் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசினார். அப்போது, ‘ஜல்லிக்கட்டை நடத்த அரசு சட்டரீதியாக முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் போராட்டம் என்ற பெயரில் நீதிமன்றத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்பட்டால் புதிய சிக்கல் உருவாகிவிடும். அது ஜல்லிக்கட்டு நடத்தும் அரசின் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்திவிடலாம். இதனால் போராட்டங்களைக் கைவிட்டு, அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து கருப்புக் கொடிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களே கழற்றினர்.
புதன்கிழமைக்குள் அனுமதி கிடைக்காத நிலையில், வேறு தேதியில் முழுமையான ஏற்பாடுகளுடன் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் கட்டப்பட்ட கருப்புக் கொடிகள். | படம்: எஸ்.ஜேம்ஸ் tamil.hindu.com

கருத்துகள் இல்லை: